தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. வழக்கத்தைவிட பருவமழை அதிக அளவில் பெய்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
÷வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
÷தேங்கியுள்ள மழைநீரில் உருவாகும் கொசுக்களால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு உருவாகி கொசுக்களால் இந்நோய் எளிதில் பரவி வருகிறது.
÷வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டவர்கள் பலர் கால்வலி, மூட்டுவலி காரணமாக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இது சிக்குன் குனியா காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
÷திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழக்க நேரிட்டது. முக்கூடல் அருகே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டது.
÷இதேபோல, மேலப்பாளையத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயதுச்சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக மாறி வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.
÷தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், 900 பேருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
÷கடந்த சில தினங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறது.
இது தவிர வேறு எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
÷மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் மூலம் உருவாகி வரும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷பல ஊர்களில் பள்ளிகள், மாணவர் விடுதிகள், சத்துணவுக் கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
÷அண்மையில் தேக்கடியில் சுற்றுலா சென்றோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து 60}க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வேதாரண்யத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் டிரைவராகப் பணி செய்தவர் ஓட்டிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி ஓர் ஆசிரியை மற்றும் 9 மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டது.
÷இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள் 10 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
÷கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏதாவது ஒரு விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் அரசின் நடவடிக்கையும் கடுமையாக்கப்படுகிறது. ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?
÷வருமுன் காத்தலே நலம் என்பதற்கேற்ப, மழைக்கால நோயை எதிர்பார்த்து ஒவ்வோர் ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ÷மக்களுக்காக வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உயிர் காக்கும் உயர் சிகிச்சை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு, இதுபோன்ற பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி
Thursday, January 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment