Wednesday, January 13, 2010

தபால் நிலையங்களில் 'கரன்சி எக்ஸ்சேஞ்ச்': ராஜா முன்னிலையில் திட்டம் துவக்கம்

அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்டு, ஐரோப்பிய யூரோ போன்ற அன்னிய கரன்சி நோட்டுகள், வெளிநாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்த மற்ற தகவல்கள் இனி அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளன. முதன்முறையாக இத்தகைய வசதிகள், புதுடில்லியில் உள்ள ஐந்து அஞ்சல் அலுவலகங்களில் மிக விரைவில் அமல்படுத்தப் பட உள்ளன.

காமன்வெல்த் போட்டிகள் அக்டோபரில் டில்லியில் நடக்க இருப்பதால், ஒரு லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் போட்டிகளை காண வர இருப்பதால், இந்த வசதிகள் முதலில் இங்கு துவங்கப்பட உள்ளது. இரண்டாவது கட்டமாக, பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங் களான, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோவா, போன்ற நகரங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில், இத்திட்டம் அமல்படுத்தப் படும். 'இந்த பரீட்சார்த்த திட்டம் வெற்றி பெற்றால், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில், இந்த வசதிகள் செய்து தரப்படும்' என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பன்னாட்டு சுற்றுலா ஏஜன்சிகளாக, தாமஸ் குக் நிறுவனமும், தபால் நிலையங்களை நடத்தி வரும் இந்தியா போஸ்டும் இணைந்து, இதுசம்பந்தமாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், நேற்று டில்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அன்னிய செலாவணி மற்றும் மேலை நாடுகளுக்கு செல்ல எடுக்க வேண்டிய பாஸ்போர்ட், விசா, சர்வதேச விமான டிக்கெட்கள் போன்ற அனைத்து வசதிகளையும் தாமஸ் குக் நிறுவனம், டில்லியில் உள்ள களாட்பிளேஸ், சாணக்யபுரி, கிரேட்டர் கைலாஷ், கரோல்பாக், வசந்த் விஹாரில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் செய்து தரும்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜா பேசியதாவது: டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதத்தில் துவங்க இருப்பதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டில்லி வர உள்ளனர். இதை கணக்கில் எடுத்துக் கொண்டு, இத்தகைய வசதிகள் டில்லியில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் முதல்கட்டமாக செய்யப்பட்டு இருக்கிறது. இத்திட்டம் வெற்றி பெற்றால், இந்த வசதிகள் நாட் டில் உள்ள மற்ற அஞ்சல் அலுவலகங்களிலும் செய்து தரப்படும். நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் அஞ்சல் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. டில்லியில் மட்டும் கிட்டத்தட்ட 500 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இவ்வாறு ராஜா பேசினார்.

டில்லி அஞ்சல் துறைத் தலைவர் பி.கே.கோபிநாத் பேசும் போது, 'அஞ்சல் அலுவலகங்கள் தங்கள் பணிகளை தவிர்த்து, முதியோர் பென்ஷன், ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு கூலி போன்ற கிராமப்புறங்களில் தனது சேவையை செய்து வருகிறது. 'கிராமப்புறங்கள் இந்த சேவைகளை அஞ்சல் அலுவலகங்களில் பெற்று வருவதால், நகர்ப்புற மக்களுக்கு இதுகுறித்து தெரிய வாய்ப்பு இல்லை. இன்னும் சில ஆண்டுகளில், மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை செய்ய அஞ்சல் துறை திட்டங்களை தீட்டி வருகிறது' என்றார். தாமஸ் குக் நிறுவனத்தின் சார்பில், அதன் இந்திய யூனிட்டின் தலைவரான மாதவ மேனன், இந்தியா போஸ்ட் சார்பில் கோபிநாத் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர்.
நன்றி : தினமலர்


No comments: