தெலங்கானா எனப்படும் ஹைதராபாத் மாநிலத்தை, அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ஆந்திர மாநிலத்துடன் 1956-ம் ஆண்டிலேயே சேர்ப்பதற்கு உத்தரவிட்டார். அதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது. மொழிவாரி மாநிலம் என்ற அளவுகோல் வைக்கப்பட்ட பிறகு, ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமையுமானால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று நேரு கருதினார். மேலும் மறுசீரமைப்பு செய்யப்படும் மற்ற மொழிவாரி மாநிலங்களிலும் இத்தகைய கருத்துகள் எழக்கூடும் என்றும் கருதினார்.
நேருவின் எண்ண ஓட்டத்தில் தவறு காண முடியாது. ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமைந்திருந்தால், தமிழ்நாட்டில்கூட கொங்குநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு, நாஞ்சில் நாடு என்று தனித்தனியாகக் கோரிக்கை எழுந்திருக்கும். இதேபோன்ற மனநிலை கர்நாடகத்திலும் கேரளத்திலும் ஏன் இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
ஆந்திர மாநிலத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவின் ஆதங்கம் கருத்தில் கொள்ளப்படும் என்று நேரு அளித்த வாக்குறுதியை மறந்து, தெலங்கானா என்றழைக்கப்படும் 10 மாவட்டங்களின் (ஹைதராபாத், அடிலாபாத், கரீம்நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நலகொண்டா, நிஜாமாபாத், ரெங்காரெட்டி, வரங்கல்) வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்பதால்தான் இன்னமும் தெலங்கானா பிரச்னை உயிர்ப்புடன் மீண்டும் எழுகிறது.
தெலங்கானாவில்தான் படிப்பறிவில்லாதவர் அதிகம், இங்குதான் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகம். இங்குதான் வறுமை தாண்டவமாடுகிறது. குழந்தைகளை விற்கிறார்கள். கிருஷ்ணா கோதாவரி நதிகள் ஓடினாலும் வறட்சிதான் மிச்சம். தெலங்கானாவில்தான் ஆந்திர மாநிலத்தின் ஒரே ஐஐடி, மண்டல பொறியியல் கல்லூரி உள்ளது. ரயில்வே மண்டல அலுவலகம் உள்ளது. ராமகுண்டத்திலிருந்துதான் ஏவுகணை ஏவப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் பெரும்பாலோர் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவைதான் இப்போது தெலங்கானா போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருக்கிறது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள், தற்போது தெலங்கானா பகுதியைவிட மிகச்சிறிய பரப்பளவு கொண்டவை. அவற்றைத் தனிமாநிலமாக அறிவித்துள்ளபோது, சுமார் 3.5 கோடி மக்கள்தொகை கொண்டிருக்கும் தெலங்கானாவை ஏன் தனி மாநிலமாக அறிவிக்கக்கூடாது என்பது தற்போது முன்வைக்கப்படும் வாதம்.
சரி, நேருவின் எண்ணத்துக்கு மாறாக, ஒரே மொழிபேசும் மாநிலத்தை இப்போது இரண்டாகப் பிரித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் சந்தேகம்தான். தெலங்கானாவில் எந்தவித சுயமான நிதிஆதாரத்துக்கும் வழியில்லை. இந்த மாநிலம் உருவாக்கப்பட்டால், அது முழுக்கமுழுக்க மத்திய அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருக்க முடியும். நக்ஸல் ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஆண்டுதோறும் சில ஆயிரம் கோடி ரூபாய் தெலங்கானா பகுதிக்கு ஒதுக்கப்பட்டாலும் இவை முறையாகப் போய்ச் சேரவில்லை என்கிறபோது, தனி மாநிலமாக மாறினால் மட்டும் நிலைமை சரியாகிவிடுமா என்பது சந்தேகம்தான்.
தெலங்கானா கோரிக்கை மக்கள்பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று சொல்வதைவிட இது சில அரசியல் தலைவர்களின் சுயலாபத்துக்காக எழுப்பப்படுகிறது என்பதால்தான் இந்தப் புதிய மாநிலம் உருவாவதை நாம் ஒருமுறைக்கு இருமுறை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டியிருக்கிறது.
தற்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும் கலவரங்களும் தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்காக என்பதைக் காட்டிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த இக்கட்சியின் கெüரவத்தை நிலைநாட்டவும் தனது தலைமையை தக்கவைத்துக் கொள்ளவும்தான். கடந்த தேர்தலில் 45 இடங்களில் போட்டியிட்டு, 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது இக்கட்சி. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 26 எம்எல்ஏ, 5 எம்.பி.க்களைப் பெற்று மத்திய மாநில அரசில் பங்கு வகிக்கவும் செய்த டி.ஆர். எஸ். கட்சிக்கு இது படுதோல்வி. இதை ஈடுசெய்யவே தற்போது நடந்த போராட்டங்கள்.
மேலும், தற்போது ஆந்திர முதல்வர் ரோசய்யாவுக்குத் தலைவலி கொடுக்க வேண்டும் என்கிற ஒரே கருத்தில் செயல்பட்டுவரும் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு சந்திரசேகர ராவுக்கு இருக்கிறது என்பதும் இப்போராட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.
தெலங்கானா தனிமாநிலம் ஆவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார். அதேநேரத்தில் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து ராஜிநாமா செய்யத் தயாராகி இருக்கிறார்கள்.
இன்னொரு சிக்கல் இப்போதே ஆந்திரத்தில் ஆரம்பமாகிவிட்டது. தெலங்கானா தனி மாநிலம் என்றால் ராயலசீமா எந்த விதத்தில் குறைவு? கடலோர ஆந்திரம் எந்தவிதத்தில் குறைவு? அவற்றையும் தனி மாநிலமாக்குங்கள் என்ற கோரிக்கை எழத்தொடங்கிவிட்டது. ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான சலுகைகள், நலத்திட்டங்கள், நிதி, தொழில்வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும், கண்காணிக்க வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதில் தவறுகள் நிகழும்போது, இப்படியான போராட்டங்களையும் நியாயப்படுத்தும் நிலை உருவாகிவிடுகிறது.
மக்களாட்சியில், ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் போனால், தெலங்கானா போன்ற கோரிக்கைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது!
நன்றி : தினமணி
Friday, December 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment