வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்பது தெரியாமலே சில வாடிக்கையாளர்கள் வழக்கம் போலவே வங்கிகளுக்குச் சென்று புதன்கிழமை பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தனர். வேலை நிறுத்தம் செய்யப்போகிறோம் என்பதை ஊழியர்கள்தான் முன்கூட்டியே அறிவித்துவிடுகிறார்களே, அதைக்கூட பேப்பரில் படிக்காமலும் டி.வி.யில் கேட்காமலும் வங்கி வரை வந்து ஏன்தான் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறார்களோ தெரியவில்லை.
இந்த முறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையாக அல்லாமல் புதன்கிழமையைத் தேர்வு செய்தது ஏன் என்று புரியாமல் சிறிது நேரம் குழம்பினேன்.
அருகில் இருந்த மூத்த வாடிக்கையாளர் ஒருவரைக் கேட்டேன். பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது என்பார்கள் அதனால்தான் புதன்கிழமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றார் அவர்.
மற்றொருவர் சொன்னார், மார்கழி மாத ஆரம்பம், கோயிலுக்குப் போவதற்காக வங்கி ஊழியர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றார். இது அதைவிட அபத்தமாக இருந்தது.
வங்கி ஊழியர்கள் கடுமையாக வேலை செய்து களைத்து, வீட்டுக்குப்போய் அங்கும் வேலை செய்துவிட்டுப் படுத்து, காலையில் எழுந்திருப்பதற்கே சுமார் 7 அல்லது 8 மணி ஆகிவிடும். அப்படியிருக்க விடியற்காலை பூஜைக்காக அவர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் சரியல்ல.
சனி,ஞாயிறு விடுமுறையோடு சேர்ந்தே வெள்ளி, திங்கள் ஆகிய நாள்களை வேலை நிறுத்தத்துக்குத் தேர்வு செய்கிறார்கள் என்று வங்கி ஊழியர்களைப் பற்றி முன்னர் குறை கூறப்பட்டது. அப்படியெல்லாம் தாங்கள் சுய நலமிகள் அல்லர் என்று காட்டவே வாரத்தின் நடு நாளைத் தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ? இதுவும் ஒரு கணக்குத்தான்.
வங்கி ஊழியர்கள் எப்போது வேலை நிறுத்தம் செய்தாலும் அவர்களுடைய கோரிக்கை பொதுநலன் சார்ந்ததாகவும் வலுவானதாகவும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, மதவாத, திரிபுவாத, பிற்போக்கு சக்திகளுக்கு எதிரானதாகவும்தான் இருக்கும்.
இந்த முறை பாரத ஸ்டேட் வங்கியுடன் இந்தூர் ஸ்டேட் வங்கியைச் சேர்க்கக்கூடாது என்பது முக்கிய கோரிக்கை. இதன் உள்ளே நாம் புக வேண்டாம். (அதன் நுட்பம் நமக்குத் தெரியாது.)
அப்படி இணைத்தால் ஏழு கடல்களும் பொங்கும், கடலில் சுனாமி ஏற்படும்,திருவண்ணாமலை, பரங்கிமலை, மதுரை திருப்பரங்குன்றத்துக்கு அருகில் உள்ள பசுமலை போன்றவைகூட எரிமலைகளாகி நெருப்பைக் கக்கும், கடுமையான நில அதிர்வு ஏற்படும் என்றெல்லாம் புரிகிறது.
அடுத்தது வங்கி நிர்வாக நடைமுறைகளைச் சீர்திருத்த வேண்டும் என்பது. இதுவும் உண்மையிலேயே வலியுறுத்தப்பட வேண்டிய கோரிக்கைதான். நம் பங்குக்கு நாமும் சில கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன். இதை அடுத்த வேலை நிறுத்தத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் பரிசீலித்தால் போதுமானது.
வங்கிகளுக்குள் வாடிக்கையாளர்கள் வருவதைத் தவிர்ப்பதற்காகத்தான் ஏ.டி.எம். என்ற மெஷின் ஆங்காங்கே வைக்கப்படுகிறது. அப்படி இருந்தும் சில அராத்துகள் வங்கிகளுக்கு உள்ளே வந்து பணம் எடுக்க முற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் வங்கிகளில் பணம் போடலாமே தவிர எடுப்பதற்காக உள்ளே நுழையவே கூடாது என்ற கோரிக்கையை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது சென்னையிலும் புறநகர்களிலும் பணம் எடுக்கப் போகும் வாடிக்கையாளர்களிடம் கூறப்படும் முதல் உபதேசமே, ஏ.டி.எம். கார்டு வாங்குங்க, எங்க கிட்டயே வர வேண்டாம், அப்படியே பணம் எடுத்துக்கொண்டு (திரும்பிப்பார்க்காமல்) போயிடுங்க என்பதுதான்.
அடுத்தது பென்ஷன் அக்கவுண்ட், அடிக்கடி 300, 500 என்று எடுக்கும் எஸ்.பி. அக்கவுண்ட், வங்கிக்கு பெரிய லாபம் தராத கரண்ட் அக்கவுண்ட் ஆகியவற்றையெல்லாம் தானியங்கி மெஷின்களே கையாள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தலாம்.
வங்கிக்கு வாடிக்கையாளர்களே வேண்டாம் என்பதல்ல நோக்கம்; சுயநிதிக் கல்லூரி, பள்ளிக்கூட நிறுவனர்கள்,வியாபாரிகள்,பஸ் முதலாளிகள், டிராவல்ஸ் நடத்துகிறவர்கள்,40 வயதுக்குள்பட்ட வாடிக்கையாளர்கள்,சுய உதவிக்குழு மகளிர், வருமானவரித்துறை, கலால் துறை, ரயில்வேயில் டிக்கெட் ரிசர்வேஷனுக்கு உதவக் கூடியவர்கள் போன்ற வங்கி ஊழியர்களுக்கும் ஏதாவது பலன்தரக் கூடிய வாடிக்கையாளர்கள் வருவதை வங்கி ஊழியர்கள் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை.
பணம் எடுப்பதற்கான சலானில் தேதி போட மறப்பவர்கள், பணம் செலுத்தும்போது டினாமினேஷன் சரியாகப் போடத் தெரியாதவர்கள், வங்கி ஊழியர் மெனக்கெடவே அவசியம் இல்லாத வகையில் தன் வேலையைத் தானே பார்த்துக் கொள்ள முடியாதவர்கள், காலையில் வங்கியில் நுழைந்தால் சாயங்காலம் வரை காத்திருந்து வேலையை முடித்துக் கொள்ளும் அளவுக்குப் பொறுமை இல்லாதவர்கள் வங்கிக்கு வரவே கூடாது.
பணம் எடுக்க அல்லது போட ஒரு முறையும், என்ட்ரி போட ஒரு முறையும் வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வரக்கூடிய நல்ல பழக்கம் உள்ளவர்கள் தாராளமாக வங்கிக்கு வரலாம்.
வேலை நேரத்தில் வங்கி ஊழியர்கள் சீட்டில் இல்லாமல் போனால் ஆட்சேபம் தெரிவிக்கிறவர்களும், வம்பு பேசும்போது நாகரிகம் இல்லாமல் குறுக்கிட்டு, ""நாங்க வேலைக்குப் போக வேண்டாமா?'' என்று அபசுரமாக அங்கலாய்ப்பவர்களும், செல் போனில் அழைப்பு வந்தால் கேஷியர் உள்பட யாருமே சீட்டில் உட்கார்ந்து பேசினாலும் வெளியே போனாலும் கூக்குரல் எழுப்புகிறவர்களும், ""உங்க பேங்கே தண்டம், எத்தனை மணி நேரம் காத்திருக்கிறது?'' என்று சாபம் கொடுப்பவர்களும் எந்த அரசு வங்கியிலும் கணக்கு வைத்துக்கொள்ளவே கூடாது என்று வங்கி நடைமுறைச் சட்டத்தில் திருத்தமே கொண்டுவரலாம்.
வங்கி ஊழியர்கள் வேலை நேரத்தில் வேலைதான் செய்ய வேண்டும், திடீர் திடீரென ஸ்டிரைக் செய்யக் கூடாது என்றெல்லாம் சுயநலமாக நினைக்கிற வாடிக்கையாளர்களை கணக்கு வைத்துக் கொள்ளாமல் நீக்கிவிடும் அதிகாரம் வங்கி ஊழியர்கள் சங்கத்துக்கே தரப்பட வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் அமலானால் வங்கிகள் சமரசம் உலாவும் இடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா உங்களுக்கு?
கட்டுரையாளர் : ராணிப்பேட்டை ரங்கன்
நன்றி : தினமணி
Friday, December 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த மொக்கைதானே வேணாம்
எந்த நிறுவனமாக இருந்தாலும் திர்ப்திபடுதமுடியாத ஒருவர் யார் என்றால் அவர் வாடிக் கை யா லார்தான் .அவரும் எங்கு போனாலும் திருந்தவும் மாட்டார் ,திருப்தி பாடவும் மாட்டார் .அதனால் தான் அவர் திட்டுவார , போகமாட்டார் .
மற்ற அரசு இடங்களில் வாங்கிய அவமானங்களை இங்கு கொட்டுவர்
thendral ,thanks for your comments.
Post a Comment