நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்புக் கூறாவிட்டால் நீதித்துறை நடைமுறையே நாளடைவில் நொறுங்கிவிடும், மக்களுக்கு நீதித்துறை மீதே நம்பிக்கை போய்விடும்,கிளர்ந்து எழுவார்கள் - கலகம் வெடிக்கும் என்று எச்சரித்திருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போதாவது இதுபற்றிய கவலை நீதித்துறைக்கு எழுந்திருக்கிறதே, மகிழ்ச்சி.
சமரசப் பேச்சுவார்த்தை மூலம் வழக்குகளைத் தீர்க்கும் மாற்று வழி குறித்த கருத்தரங்கம் பெங்களூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசியபோது கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
வழக்குகள் தேங்கிவருவது குறித்து கடந்த 20 வருஷங்களாகவே யார் யாரோ எச்சரித்து வருகின்றனர். மத்திய சட்டக் கமிஷன், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம், மத்திய சட்டம், நீதித்துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு போன்றவை இந்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. ஆனால் உரிய பரிகார நடவடிக்கைகள்தான் போதுமான அளவில் எடுக்கப்படாமல் இருக்கின்றன.
பெங்களூர் கருத்தரங்கில் பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நாட்டில் போதிய எண்ணிக்கையில் சார்பு நீதிமன்றங்கள் இல்லதாததே வழக்குகளின் தேக்கத்துக்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்தியிருக்கிறார். வழக்குகள் தேங்குவதற்கான பல்வேறு காரணங்களில் அதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
இப்போதுள்ள 16,000 சார்பு நீதிமன்றங்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பதவிகள் காலியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். காலியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதுடன் சார்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 35,000 அளவுக்கு உயர்த்துவதும் அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அடுத்தபடியாக, இந்தியாவில் வழக்காடுவதற்கான செலவு மிகவும் குறைவு என்பதாலும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். நீதிமன்றங்கள் விதிக்கும் கட்டணங்களும் படிவங்களின் விலையும் வேண்டுமானால் அரசு நிர்ணயிப்பதால் குறைவாக இருக்கலாம், வழக்கறிஞர்களுக்கான கட்டணம் அப்படியா என்பதை அத்துறையில் உள்ளவர்களின் மனசாட்சியே பதில் கூறட்டும் என்று விட்டுவிடுவோம்.
நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதமும், செலவும், மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது. எனவே கட்டப்பஞ்சாயத்து என்று அழைக்கப்படும் மாற்று வழிமுறையை நாடுகின்றனர். இது "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற முதுமொழிக்கு ஏற்ப, ஜாதி அல்லது அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் ஆளுகைக்கு உள்பட்டதாக இருக்கிறது. இங்கே எளியாருக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ அநீதியாவது விரைவாக வழங்கப்பட்டு விடுகிறது.
சரியோ தவறோ விவகாரம் முடிந்ததே என்ற அளவில் மக்கள் திருப்தியடையத் தொடங்கி விடுகிறார்கள்.
நீதித்துறையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலையிட்டு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னால் நம் நாட்டில் கிராமப் பஞ்சாயத்துகளே நியாயஸ்தலங்களாகவும் திகழ்ந்தன. அப்போது அவற்றின் குறைகளாகப் பட்டியலிடப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானது, அவை நடுநிலையானவை அல்ல என்பதாகும்.
பஞ்சாயத்தில் இடம் பெற்றவர்கள், கிடைக்கும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், போதிய சட்ட அறிவு இல்லாமல்,தங்களுடைய செல்வாக்குக்கு பங்கம் வராத வகையில் தீர்ப்பு வழங்கினார்கள் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டின் மையக் கருத்தாகும். ஆனால் வழக்குத் தொடுக்கவும், விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் அதிகப் பொருள், நேரச் செலவு இல்லாமல் அந்தப் பஞ்சாயத்துகள் நடந்து முடிந்தன.
சட்டம் படித்த வழக்கறிஞர்கள் வாதி, பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் நீதித்துறையை நடுநிலையானது, எவர் பக்கமும் சாயாதது என்று பாராட்டினாலும் அது வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் முக்கியமான பணியை இழுத்துக் கொண்டே போனால் அப்படிப்பட்ட நீதித்துறை யாருக்கு வேண்டும் என்ற கேள்வியே பெரிதாகிறது. சட்டப்படி வழங்கப்படும் தீர்ப்புகள் தர்மத்துக்கு எதிரானவையாக இருக்கும்போது, மக்கள் ஆட்சி அமைப்பின்மீதே நம்பிக்கை இழப்பதும், தீவிரவாதிகளாக மாறுவதும் தவிர்க்க இயலாதவை.
அதிக நீதிமன்றங்கள், அதிக நீதிபதிகள், அதிக வேலை நாள்கள் போன்றவை இந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும். அதைவிட முக்கியம் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை நிர்வாகிகள் ஆகியோரின் மனங்களில் ஏற்பட வேண்டிய முக்கியமான மாற்றங்கள்.
இந்தியா வறுமையில் உழலும் கோடிக்கணக்கான ஏழைகளைக் கொண்ட நாடு. இங்கு நீதி நிர்வாகத்துக்கு அவர்களுடைய வரிப்பணம்தான் செலவிடப்படுகிறது. நேரடியாக வழக்குச் செலவுகள் குறைவு போலத் தோன்றினாலும் அந்த மானியமே வரிப்பணத்திலிருந்துதான் ஈடுகட்டப்படுகிறது. எனவே நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் வழக்கு விசாரணைகளைத் துரிதமாக நடத்தி முடிக்கக் கடமைப்பட்டவர்கள் ஆகின்றனர்.
அனாவசியமாக வாய்தா வாங்காமல் வழக்கு விவரத்தையும் தங்கள் தரப்பு நியாயத்தையும் இருதரப்பு வழக்கறிஞர்களும் எழுத்து மூலம் அளித்துவிட்டு பிறகு தேவைப்பட்டால் வாதம் நடத்தி விசாரணையை விரைந்து முடிக்கலாம் என்று யோசனை கூறப்பட்டது. என்ன காரணத்தாலோ அது ஏற்கப்படவில்லை.
கடந்த ஜூன் மாதப் புள்ளிவிவரப்படி, 1 கோடியே 94 லட்சம் கிரிமினல் வழக்குகளும், 76 லட்சம் சிவில் வழக்குகளும் தீர்ப்புக்குக் காத்திருக்கின்றன. இந்த வழக்குகளை அடுத்த ஓராண்டில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டுமானால், 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை.
இந்தியாவைப் பொறுத்தவரை அரசாங்கம்தான் மிகப்பெரிய வழக்காளர் என்று சொல்லப்படுவது உண்டு. மத்திய, மாநில அரசுகளும் அரசுத்துறைகளும் வெவ்வேறு காலங்களில் தொடர்ந்த தேவையற்ற வழக்குகளை மறுபரிசீலனை செய்து அவற்றை விலக்கிக் கொள்வது அல்லது முடித்துக் கொள்வது என்றும் தீர்மானித்து வழக்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்.
அரசும் நிர்வாகமும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் அரசின்மீது தொடுத்த வழக்குகளும் ஏராளம், ஏராளம். முறையாகவும், நியாயமாகவும், விரைவாகவும் அரசும் நிர்வாகமும் செயல்பட்டால், பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இந்தியச் சிறைச்சாலைகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் விசாரணைக் கைதிகளாகத் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அவர்களது நிலைமையைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? அதில் எத்தனை பேர் நிரபராதிகளோ, யாருக்குத் தெரியும்?
வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. நீதி தாமதப்படுகிறது என்றெல்லாம் கருத்தரங்கம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தால் போதாது. செயல்பட வேண்டும்.
நன்றி : தினமணி
Thursday, December 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment