Thursday, December 17, 2009

சீனாவில் 255 டன் தங்கம் உற்பத்தி

உலக அளவில் தங்கம் பயன்பாட்டில், இது வரை இந்தியா முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது, சீன நாட்டில் தங்கம் பயன்பாடு அதிகரித்துள்ளதையடுத்து, சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில், மிக அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளுள் சீனா முன்னணியில் உள்ளது. சென்ற அக்டோபர் மாதத்தில், சீனாவில் 26.354 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு 2009ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதத்தில் சீனாவில் 254.552 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டை விட 14.1 சதவீதம் அதிகம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பல நாடுகளின் செலாவணிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு சரிவடைந்து போனதால், உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால், கடந்த ஒரு சில மாதங்களாக இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது. டிசம்பர் 3ம் தேதியன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.1,707 ஆக உயர்ந்தது. அதாவது, ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.12,792 ஆக அதிகரித்தது. இந்தநிலையில், புதன்கிழமை அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,599 ஆக இருந்தது. இந்தியாவில், தங்கத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததையடுத்து, தங்கம் பயன்பாடு குறைந்து போனது.
நன்றி : தினமலர்


No comments: