இந்திய அரசியலில் தனிக்கட்சி ஆட்சி என்பது முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சியே கோலோச்சுகிறது. சுதந்திரம் வாங்கித் தந்ததாகக் கூறும் காங்கிரஸ் கட்சியாகவே இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, அவை கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
நேற்றுமுதல் பகைவர்களாக இருந்தவர்கள் இன்று முதல் நண்பர்களாக மாறுவதும், இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை எதிரிகளாக ஆவதும் சாதாரண குடிமக்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகளுக்கு இது வாடிக்கையாகிவிட்டது.
இந்தச் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு தத்துவ விளக்கமும் கூறுகின்றனர். "அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை; நிரந்தரமான பகைவர்களும் இல்லை' என்னே அருமையான கொள்கை விளக்கம், பாருங்கள்!
நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி ஓடும் காரணம் புரிகிறதா? கடந்த காலங்களில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் மீதும், பாஜக மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து போனார்கள். அவர்களுக்கு ஒரு மூன்றாவது அணி தேவைப்பட்டபோது, அந்தச் சூழ்நிலையை இடதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றனர். மதவாதக் கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது எனக் காரணம் கூறினர்.
காலம் கடந்து அவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கியபோது மக்கள் நிராகரித்து விட்டனர். காங்கிரஸ் கட்சிக்குக் கடைசிவரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த இடதுசாரிகளின் அரசியல் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
மாநிலங்களிலும் இதுதான் நிலைமை; தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி திமுக அல்லது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகளின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? மத்தியில் மூன்றாவது அணியின் தேவையை உணர்ந்தவர்கள் மாநில அரசியலுக்கு மூன்றாவது அணி தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டதுதான் மிகப்பெரிய வேடிக்கை!
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஈழத்தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்தது. கடைசிநாள் வரை பதவிசுகத்தை அனுபவித்த பாட்டாளி மக்கள் கட்சி, உறவை முறித்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டதை மக்கள் எப்படி ஏற்பார்கள்? விடுதலைப்புலிகளை ஆதரித்துக்கொண்டிருக்கும் மதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியும் எதிர்மாறான கொள்கைகளைக் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டன.
தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையாத நிலையில் அதிமுகவுடன் கூட்டணி முடிந்துவிட்டது என பாமக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஒருதரப்பாக அறிவித்தன. இதற்கு முன் நடந்த இடைத்தேர்தலில் பாமகவைத் தொடர்ந்து அதிமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இடதுசாரிகள் தனியாக நின்று படுதோல்வியடைந்தனர். ஆனால், பாடம் கற்றனரா என்பது தெரியவில்லை.
இப்போது திருச்செந்தூர், வந்தவாசி (தனி) சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக நிற்பதாக அறிவித்தவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசரம் அவசரமாக அதன் தலைவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அவர்கள் மேடையில் பேசப் போவதில்லை என்றும் தனியாகவே கூட்டம் போட்டு ஆதரவு தேடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
"ஈழத் தமிழர் பிரச்னையில் எங்கள் கோரிக்கையை மத்திய அரசு கேட்கவில்லை' என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக , காங்கிரசின் உறவை உதறித்தள்ள முன்வரவில்லை. அப்படி ஒரு நிலை உருவானால், அந்தக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக காத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் இங்கே அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கொள்கை.
தமிழகத்தில் மறுபடியும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், வந்தவாசி (தனி) ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் தெரிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி (தனி) தொகுதிக்கு அந்தத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த ஜெயராமன் மறைவு காரணமாக அத் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. திருச்செந்தூர் தொகுதியில் அத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்துவிட்டார். இதனால் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் தொகுதியில் 25 பேரும், வந்தவாசி (தனி) தொகுதியில் 14 பேரும் போட்டியிடுகின்றனர். இதில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளும் மோதுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் என்றாலே ஒரு பரபரப்புதான். இப்போது ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியின் மதிப்பீடு அந்தத் தேர்தல் மூலம் கணிக்கப்படும். அத்துடன் வரப்போகும் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது அமையும் என்பதால் இந்த முடிவுகள் மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சி எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுவதும், அதனை எதிர்க்கட்சிகள் எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என்று திட்டமிடுவதும் இயல்பு. இதனால்தான் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது.
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வீடுகளுக்குப் பால், பத்திரிகை வினியோகம் செய்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர் என்றும், மேலும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பணம் பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க அவர்கள் மீது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தேர்தல் நேரங்களில் வாக்குச் சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம், "எங்கள் தெருவுக்குக் குடிநீர் வசதி வேண்டும்; சாலை வசதி தேவை' என்று கோரிக்கைகளை முன்னிறுத்துவார்கள். ஆனால், இப்போது மக்கள் பணம்கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதற்குக் காரணம் என்ன? அரசியல் கட்சிகள் தானே! அவர்கள் மீது இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? பெயருக்கு வழக்குகள் போடுவார்கள். அது அடுத்த தேர்தல்வரை தொடரும். அவர்கள் ஆளும் கட்சியானால், அந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்.
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால் அதன் தீர்ப்பு வரவும், அடுத்த தேர்தல் வரவும் சரியாக இருக்கும். "வெற்றி பெற்றது செல்லாது' என்று அறிவிக்கப்பட்ட தகுதியிழந்த அந்த உறுப்பினர், முழுபதவிக்காலப் பயனையும் அனுபவித்து விட்டே வெளியேறுகிறார். அவர் இதுவரை பெற்ற ஊதியம் மற்றும் சலுகைகளைப் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா? இத்தனை காலம் வழக்காடியவர் பெறப்போகும் பயன்என்ன?
""அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாக்காளர்கள் வாங்கக்கூடாது'' என்னும் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணி அமைத்துக் கொண்டு வெற்றிபெற்று பதவிக்காவும், பணத்துக்காகவும் அலையும் அவர்களிடம், ""வாங்கியது வரை ஆதாயம்'' என்றே மக்கள் நினைக்கின்றனர்.
"உங்களுக்காக உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள்' என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே தவிர நடைமுறையில் நன்றாக இல்லையே! மக்கள் சேவைக்காகவே பதவிகளைத் துச்சமாகத் தூக்கி எறிந்த தூய தலைவர்களை நாடு மறந்துவிட்டது. இப்போது, "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று கூறினால் ஏற்கப்படுமா?
இந்த இடைத்தேர்தல் வெற்றி தோல்வியால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. தேசத்தின் பணம் விரயம் செய்யப்படுகிறது.
ஆந்திரத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதுபோல பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிக்கே அந்த இடத்தை அளித்து விடுவதற்கான தேர்தல் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
""இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. கோல்கத்தாவுக்குப் போய் கம்யூனிசத்தை ஆதரித்தும், அலாகாபாத்துக்குப் போய் முதலாளித்துவத்தை ஆதரித்தும், காரைக்குடிக்குப்போய் வகுப்புவாதத்தை ஆதரித்தும் பேச முடிகிறதல்லவா?'' என்று கவிஞர் கண்ணதாசன் இந்திய அரசியலின் முரண்பாட்டைக் கேலி செய்தார். கொள்கையை மறந்த கூட்டணிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாகும்.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Monday, December 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment