விலை உயர்வுக்கும் முன்பேர வர்த்தகத்துக்கும் தொடர்பில்லை என்று என்.சி.டி.இ.எக்ஸ் முன்பேர நிறுவன நிர்வாகத் தலைவர் ஆர். ராமசேஷன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உணவுப் பொருள்களான பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்த தடை விதித்தது. ஆனால் தடை விதிக்கப்பட்ட பிறகு இவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமே தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததுதான். வெளிநாடுகளில் முன்பேர வர்த்தகத்துக்கு ஒருபோதும் தடை விதிப்பது கிடையாது. அங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக முன்பேர வர்த்தக நடைமுறை உள்ளது. இத்தகைய சூழல் இந்தியாவில் உருவாக இன்னும் பல ஆண்டுகள் ஆகும். முன்பேர வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து என்சிடிஇஎக்ஸ் ஈடுபட்டு வருகிறது. இதனால் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. முன்பேர வர்த்தகத்தால் நுகர்வோருக்கு மட்டு மின்றி விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும் என்றும் ராமசேஷன் தெரிவித்தார்.
என்சிடிஇஎக்ஸ் 2003ம் ஆண்டிலிருந்து முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதை கனரா வங்கி, கிரிசில், இஃப்கோ, நபார்டு, தேசிய பங்குச் சந்தை, எல்ஐசி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கோல்ட்மேன் சாஷ், இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச், ரேணுகா சுகர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொடங்கியுள்ளன. இந்நிறுவனத்தில் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவனம் 39 வேளாண் உற்பத்தி பொருட்கள், 6 உலோகங்கள், 3 பாலிமர்கள், 4 எரிசக்தி பொருள்கள் உட்பட 59 பொருட்களின் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 700 மையங்களில், இருபதாயிரம் டெர்மினல்களுடன் செயல்படுகிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment