இரவில்கூட அல்ல, பட்டப்பகலில் தனிமனிதனாக ஒருவர் ஒரு வீட்டில் நுழைந்து இரண்டு பேரைச் சுட்டுக் கொல்கிறார். மேலும் மூன்று பேர் அவரது துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகிப் படுகாயமடைகிறார்கள். வீட்டிலிருந்து அவர் கொள்ளையடித்த பணத்தையும், நகைகளையும், ஆவணங்களையும் ஒரு காரில் வைத்துவிட்டு மீண்டும் அதே வீட்டுக்குத் திரும்புகிறார்.
அதிர்ஷ்டவசமாக அவரது துப்பாக்கித் தோட்டாக்கள் தீர்ந்துவிட்டிருந்ததால் மேலும் உயிர்ப் பலி நிகழாமல் அவர் பிடிபடுகிறார். சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூர் இரட்டைக் கொலை வழக்கு அத்துடன் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. கொலைக்குப் பின்னால் விழுந்திருக்கும் முடிச்சுகள் அவிழ்ந்தனவா என்றால் அதுவும் இல்லை.
உறவினர்களாலும் பொதுமக்களாலும் துரத்திப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 32 வயது ராஜன் என்கிற சண்முகசுந்தரம், அடுத்த நாள் அதிகாலையில் அடையாறு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.
கொள்ளையடிக்கப் போனவர் ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் கொள்ளையடித்துச் சென்றது பணமும் நகையும் மட்டுமல்ல, வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட ஆவணங்களும் என்பதும் தெரிகிறது. பணத்திற்காகவும் நகைக்காகவும் கொள்ளையடிக்கப் போனவர், சொத்து ஆவணங்களை ஏன் எடுத்துச் செல்ல வேண்டும்?
சரி, கொலை செய்துவிட்டு நகை, பணம், ஆவணங்களுடன் சென்றவர் ஏன் திரும்பிவந்தார்; அவர் தேடியது கிடைக்காததாலா? அவர் ஒரு காரில் வந்தாரே, அது யாருடைய கார்? அந்தக் காரில் யாராவது இருந்தார்களா? துப்பாக்கி யாருடையது? மேலே எழுப்பப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்திருக்கக்கூடிய ஒரே நபர், கொலையாளி என்று கருதப்படும் ராஜன் என்கிற சண்முகசுந்தரம் மட்டுமே!
32 வயது இளைஞர். தன்னந்தனியாகத் துப்பாக்கியுடன் ஒரு வீட்டில் நுழைந்து ஈவு இரக்கமில்லாமல் இரண்டு முதியவர்களைக் குருவி சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளுகிறார். குழந்தைகள், பெண் என்று பாராமல் ஏனைய மூவர் மீதும் துப்பாக்கி ரவையைப் பாய்ச்சுகிறார். தானே காரை ஓட்டி வந்திருக்கிறார். இத்தனை ஆரோக்கியமான ஒருவர் பிடிபட்ட இரவே காவல் நிலையத்தில் இறந்தும்விடுகிறாரே, அது எப்படி?
ராஜன் என்கிற சண்முகசுந்தரத்தின் உடல் முறையாக பிரேதப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதா? அவர் எப்போது யாரால் எரிக்கப்பட்டார் அல்லது புதைக்கப்பட்டார்? அவரது உறவினர்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டதா இல்லையா? - இவையெல்லாம் மனித உரிமை ஆணையத்தால் கேட்கப்படும் அடிப்படைக் கேள்விகள்தானே?
இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பக்கூடாது என்றும் அப்படி எழுப்பினால் அது விசாரணையைப் பாதிக்கும் என்றும் காவல் துறை வாய்ப்பூட்டு போட்டால் எப்படி? பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எதைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் உரிமையும், வெளிப்படைத் தன்மையும்தானே மக்களாட்சியின் அடிப்படை.
சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சண்முகசுந்தரம் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இந்தக் கொலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் சந்தேகப்படுவதாகத் தெரிவித்திருப்பதில் என்ன தவறு?
சண்முகசுந்தரத்தின் சடலம் காவல் துறையின் உதவியோடு எரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுவது தவறான விஷமத்தனமான ஒன்று என்று கூறும் காவல் துறை, அவரது சடலம் எப்படி யாரால் எரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்துவதல்லவா நியாயம். இதற்கும் கொலை விசாரணைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும்?
இப்போதைய அரசு பதவியேற்ற பிறகு, இதுவரை 15-க்கும் மேற்பட்ட மோதல் சாவுகள் காவல் துறையினரால் நடத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நடந்திருப்பது மோதல் சாவல்ல, ஆனால் மர்மச் சாவு. காவல் நிலையத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அதற்கு விளக்கம் கூற வேண்டிய கடமை காவல் துறைக்குக் கிடையாது என்று யார் சொன்னது?
தமிழகத்தில் மோதல் சாவுகள் என்கிற பெயரில் நடைபெறும் கொலைகளைத் தடுக்க, ""மிக அவசரம்'' என்று குறிப்பிட்டு, 8-8-2007 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை காவல் துறை உயர் அதிகாரிகள் ஒருமுறை மீண்டும் படித்துப் பார்ப்பது நல்லது என்று தோன்றுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சம்மன் அனுப்புவதும் இந்த வழக்கைப் பற்றி யாரும் எந்தவித சந்தேகங்களையும் எழுப்பலாகாது என்றும் வாய்ப்பூட்டு போடுவதால் காவல் துறை மீதான சந்தேகம் மேலும் அதிகரிக்கிறது.
இந்த நிலையில் இந்த வழக்கை தமிழகக் காவல் துறையின் குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரிப்பதைவிட, மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்றுவதுதான் பல முடிச்சுகளை அவிழ்க்கவும் கொலைக்கான உண்மைக் காரணத்தை வெளிக்கொணரவும் உதவும் என்று தோன்றுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியபிள்ளை கொலை வழக்கில் நீதி கேட்டு நெடும் பயணம் போனவரின் ஆட்சியில் கேள்வி எழுப்புவதுகூட தவறு என்கிற நிலைமையா? தமிழகம் பல விசித்திரங்களைச் சந்தித்து வருகிறது...
நன்றி : தினமணி
Tuesday, September 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment