இந்திய சுதந்திர தினம் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி என்று முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்டது. மௌண்ட்பேட்டன் பிரபுவின் விரைவான முடிவே இந்த அறிவிப்புக்குக் காரணம். ஜூன் மாதம் 1948-ல் தான் சுதந்திரப் பிரகடனம் என்று அறிவிக்க இருந்த காங்கிரஸ் செயற்குழுத் தலைவர்கள் வேறு வழியில்லாமல் அன்றைய கவர்னர் ஜெனரலான மௌண்ட்பேட்டன் பிரபுவின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரப் பிரகடனத்திற்கு யாரும் மகாத்மா காந்தியின் ஒப்புதலைக்கூடப் பெறவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். மௌண்ட்பேட்டன் பிரபு கூட காந்தியைச் சந்தித்தபோது, "காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தற்போது என்னோடு இருக்கிறார்கள், உங்களோடு இல்லை. இது உங்களுக்குத் தெரியுமா?' என்று ஏளனமாகக் கேட்டாராம். இதற்கு அண்ணல் காந்தி: "நன்றாகத் தெரியுமே, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களின் நம்பிக்கைக்கு உரியவனாக நான் இல்லாவிட்டாலும், மக்களின் நம்பிக்கைக்கு உரியவனாக நான் இருக்கிறேனே, அதுவே எனக்குப் போதும்' என்று பதற்றமே இல்லாமல் பதிலளித்தாராம் மகாத்மா.
ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்றோர் அண்ணல் காந்தியடிகள் இடும் கட்டளைகளைச் செயல்படுத்தத்தான் விரும்பினர். இருப்பினும் பாகிஸ்தான் பிரிவினை ஒருபுறம். துண்டுதுண்டாக நூற்றுக்கணக்கில் மன்னர்களின் சமஸ்தான ஆட்சிகள் ஒருபுறம். இந்தச் சூழ்நிலையில் மகாத்மா காந்தி விரும்பியதைப்போல, பிரிவினை இல்லாத சுதந்திர இந்தியாவை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
சுதந்திரப் பிரகடனம் பற்றி அவ்வளவாக காந்தி கவலை கொள்ளவில்லை. பாகிஸ்தான் பிரிவினை என்ற பெயரால் கிழக்கு வங்கப் பகுதியில் உள்ள நவகாளி மற்றும் மேற்கு பஞ்சாப் பகுதிகளில் இந்து முஸ்லிம் இனக்கலவரங்கள் பற்றிக்கொண்டு எரிந்தன. அதில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கலவரங்களால் மிகுந்த மனவேதனை அடைந்த அண்ணல் காந்தியடிகள் ஒருநாள் முழுவதும் இரவு உறங்கவே இல்லை.
"இன்றைய இரவு நேரத்தில் மிகவும் ஆழ்ந்த இருள் சூழ்ந்துள்ளது. எனது வாழ்க்கையில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு பேரிருளை நான் ஒருபோதும் நேரிடவில்லை. இந்த இரவு நீண்ட நெடிய ஓர் இரவாக எனக்குப் படுகிறது. இவ்விருளில் நான் சென்றடைய வேண்டிய எனது வீட்டுக்குச் செல்ல வழிதெரியாமல் எங்கோ வெகு தூரத்தில் திசையறியாது இருக்கிறேன். கடவுள்தான் என்னை என் வீட்டுக்கு வழிநடத்திச் செல்ல வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. இல்லையென்றால், எனது முயற்சியில் தோல்வியுற்ற நான், மரணம் அடையத்தான் வேண்டும். கடவுள் நிச்சயம் என் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார்'' என்று வேண்டிக் கொண்டார் காந்தி.
கலவரப்பகுதிகள் அரசாங்கத்திற்கோ, அரசாங்கத்தின் ராணுவக் கட்டுப்பாட்டிற்கோ அடங்காமற் போனது. விமானத்தின் மூலம் குண்டு வீசி கலவரத்தை அடக்கலாம் என்றபோது நேருவிடம் கோபித்துக் கொண்டார் காந்தி. "நம் மக்களை நாமே தீர்த்துக் கட்டுவதாக இருந்தால் அதற்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைய வேண்டிய அவசியமில்லையே' என்றாராம் அண்ணல் காந்தி.
தில்லியிலிருந்து கிழக்கு வங்க தேசப் பகுதியிலிருந்த நவகாளியில் நடந்த கலவரப்பகுதிக்கு தன் தொண்டர்களுடன் பயணப்பட்டிருந்தார் காந்தியடிகள். சில நாள்கள் கோல்கத்தாவில் தங்கினார் மகாத்மா. காந்தியைக் கண்ட இந்து இளைஞர்களில் சிலர் மிகவும் கோபம் அடைந்தனர். "முகமது அலி ஜின்னாவின் அடிமை காந்தி' என்றனர் அவர்கள். சிலர் "முஸ்லிம்களுக்கான ஐந்தாம் படை ஒற்றன் காந்தி' என்றனர். அண்ணல் காந்தி இதற்கெல்லாம் கோபங்கொள்ளவில்லை.
"முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசும் இவரை ""மகாத்மா காந்தி'' என்று எப்படி அழைக்க முடியும்? மாறாக ""முகமது காந்தி'' என்றே அழைக்கலாமே' என்றபோது இந்து இளைஞர்கள் ""முகமது காந்தி'' என்றே கோஷமிட்டனர். அதைக் கேட்டபோதுதான் மிகவும் மனவேதனை அடைந்தார் காந்தி.
பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட சுதந்திர நாளை மக்கள் கொண்டாடி மனமகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் காந்திக்கோ சுதந்திர தின நாளன்று மனதில் எள்ளளவும் சந்தோஷம் இல்லை. நாடு இருகூறாகப் பிரிவினைப்படுவதைக் கண்டு மிகவும் மனமுடைந்தார். சுதந்திர தின விழாக் கூட்டங்களில் தன்னை இணைத்துக்கொள்வதை அவர் முழுதுமாக மறுத்தார். அரசு அதிகாரிகள் விசேஷமான இந்த சுதந்திர தின நாளில் நாட்டுக்கு காந்தி விடுக்கும் நற்செய்தியை எதிர்பார்த்தனர். அவர் எதுவும் சொல்லவில்லை என்றால் அது நாட்டிற்கே நல்லதல்ல என்றும் அவரிடம் கூறினர்.
அண்ணல் காந்தியோ, "இந்நாளில் மக்களுக்கான செய்தி என்று என்னிடம் ஒன்றும் இல்லை. அது நல்லதல்ல என்று உங்களுக்குப் பட்டால் அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்' என்றார்.
லண்டன் பி.பி.சி. வானொலி நிலையத்திலிருந்து வந்த சிறப்பு நிருபர் ஒருவர், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சுதந்திர நாளன்று மக்கள் காந்தியின் நற்செய்தியை எதிர்பார்ப்பதாகவும், இச்செய்தி உலகெங்கிலும் ஒளிபரப்ப இருப்பதாகவும் அவரிடம் கூறினார்.
இதற்கு காந்தி, "இவ்வாறெல்லாம் என்னை உணர்ச்சிவசப்படுத்தாதீர்கள். என்னிடம் செய்தி ஒன்றுமில்லை. உங்களின் கேள்விக்கான பதில் சொல்வதற்கான ஆங்கில மொழி எனக்குத் தெரியும் என்பதை நீங்கள் முழுதும் மறந்துவிடுங்கள், அதுபோதும்' என்றார்.
சுதந்திர தின நாளன்று காந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்தார். அன்று முழுதும் ராட்டையில் நூல் நூற்றார். பிரார்த்தனைக் கூட்டத்தில் அமைதியான குரலில் பேசினார். நெஞ்சை உருக்கும் இப்பிரார்த்தனை உரைக்குப் பிறகு, அன்று முழுதும், மௌனத்தில் ஆழ்ந்தார் மகாத்மா காந்தி!
கட்டுரையாளர் : தேனுகா
நன்றி : தினமணி
Saturday, August 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment