Tuesday, June 23, 2009

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸின் பெயர் மகிந்திரா சத்யம் என மாற்றம் செய்யப்பட்டது

ஊழல் சூறாவளியில் சிக்கித் திணறிய சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் பெயர் மகிந்திரா சத்யம் என மாற்றப்பட்டுள்ளது. இது, மகிந்திரா குழுமத்தின் நற்பெயர் மற்றும் சத்யம் நிறுவனத்தின் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமையும் என மகிந்திரா குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார். நம்நாட்டில் இதுவரை எந்த நிறுவனமும் செய்தாத மோசடியை சத்யம் கம்ப்யூட்டர்ஸின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ செய்திருந்தார். சுமார் ரூ.8,000 கோடிக்கு நிதி நிலை கணக்குகளில் முறைகேடுகள் செய்ததை அவர் ஜனவரி மாதத்தில் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய களங்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த நிறுவனம் விற்பனைக்கு வந்ததையடுத்து, மகிந்திரா குழுமுத்தின் ஓர் அங்கமான டெக் மகிந்திரா நிறுவனம், சத்யம் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை ரூ.1,760 கோடிக்கு சென்ற ஏப்ரல் மாதத்தில் வாங்கியது. அப்போதே, அதன் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று மகிந்திரா கருதியது. சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் பெயரை மாற்ற வேண்டும் என டெக் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்ற டெக் மகிந்திரா மற்றும் சத்யம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், மகிந்திரா சத்யம் என பெயர் மாற்றம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
நன்றி : தினமலர்


No comments: