Thursday, June 25, 2009

பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறது பங்குச் சந்தை - சேதுராமன் சாத்தப்பன்

பங்குச் சந்தை 15,000 புள்ளிகள் வரை பறந்தது. ஆனால், அதன் பிறகு ஓய்வு எடுக்கிறதா? இல்லை, பொறுமை காக்கிறதா? இல்லை கீழே சரிகிறதா என்று முதலீட்டாளர்கள் பலருக்கும் புரியவில்லை. ஏனெனில், சந்தையின் போக்கு அப்படித்தான் இருந்தது.திங்களன்று லாப நோக்கில் முதலீட்டாளர்கள் விற்றதால் சந்தை 196 புள்ளிகளை இழந்து முடிந்தது. நேற்று முன்தினம் உலக சந்தைகளின் போக்கை வைத்தே இந்திய சந்தைகளும் இருந்தன. துவக்கத்தில் கீழேயே துவங்கியது. மதியத்திற்கு மேல் சந்தைகள் இழந்த நஷ்டத்தையும் சரி செய்து நஷ்டமும் இல்லாமல், லாபமும் இல்லாமல் முடிந்தது.நேற்று சந்தை கீழேயே துவங்கியது. ஆனால், பின்னர் 98 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது.நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 98 புள்ளிகள் மேலே சென்று 14,422 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் மேலே சென்று 4,292 புள்ளிகளுடனும் முடிந்தது.மகேந்திராவின் சத்யம்: சத்யம் கம்பெனி பெயர் மாற்றப்பட்டு மகேந்திரா சத்யம் என்று ஆகியுள்ளது. இனிமேல் தவறுகள் நடக்காது என்ற மகேந்திராவின், சத்யமாக இருக்கட்டும்.சில வாரங்களுக்கு முன் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கூடும் எனக் கணித்திருந்தோம். ஆனால், ஏன் தற்போது குறைந்து வருகிறது. அப்போது பங்குச் சந்தைக்குள் வெளிநாட்டு பணவரவு நிறைய இருந்தது.தற்போது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதை குறைத்து, விற்று எடுத்துக் கொண்டு செல்கின்றன. உலகளவில் டாலர் மற்ற கரன்சிகளுக்கு எதிராக வலுப்பெற்று வருகிறது. பட்ஜெட் நன்றாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு பணவரவு அதிகமாக இருக்கும். அப்போது மறுபடி இந்திய ரூபாய் 47 அளவில் வரலாம்.ரயில்வே பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டை எதிர்பார்த்து 10க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றுக் கொண்டிருக்கின்றன. அவை கலிந்தி ரெயில் நிர்மான், கன்டெய்னர் கார்ப்பரேஷன், பி.இ.எம்.எல்., சிம்ப்ஸ்க்ஸ் கேஸ்டிங், கெர்னெக்ஸ் மைக்ரோ சிஸ்டம்ஸ், டிடாகர் வேகன்ஸ், டெக்ஸ்மாகோ, ஸ்டோன் இந்தியா, ஹிந்த் ரெக்டிபையர், பி.எச்.இ.எல்.,பவர் கிரிட் கார்ப்பரேஷன் சில காலம் முன் தனது புதிய வெளியீட்டை கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். போட்டவர்களுக்கெல்லாம் லாபம் வழங்கிய வெளியீடு அது. அவர்கள் இன்னும் முதலீட்டை அதிகரிக்க மறுபடி கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்; கிட்டதட்ட 3000 கோடி ரூபாய் வெளியீடு. மகேந்திரா புதிய வெளியீட்டிற்கு க்ரே மார்க்கெட்டில் 45 முதல் 50 ரூபாய் வரை பிரிமியம் இருப்பதாக செய்திகள் வருகின்றன.உலகளவில் ஒரு பெரிய புதிய வெளியீட்டை சீனாவில் உள்ள, 'சைனா மெட்டலர்ஜிகல்' என்ற கம்பெனி கொண்டு வரவுள்ளது. இது, 8,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை திரட்டவுள்ளது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?ஒரு காலாண்டு முடிந்து அடுத்த காலாண்டு வரப்போகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆமாம், ஜூன் காலாண்டு, அதாவது கம்பெனிகளின் இந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் இருந்து வரத்துவங்கி விடும்.மேலும், பட்ஜெட் வேறு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். இரண்டும் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதன் பிறகு சந்தை மேலே செல்லும்.
நன்றி : தினமலர்


No comments: