Saturday, June 13, 2009

தமிழ்நாடு அல்லது கர்நாடக மாநிலத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ஏர்பஸ் விமான நிறுவனம் ஆர்வம்

ஏர்பஸ் நிறுவனம், வர்த்தக விமானங்கள் தயாரிப்பில் போயிங் நிறுவனத்திற்கு அடுத்ததாக உலகின் மிகப் பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இத்தொழிற்பிரிவு விமான பாகங்களை ஒருங்கிணைத்து விமானத்தை முழுமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இப்பிரிவை ஏர்பஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலோ அல்லது கர்நாடக மாநிலத்திலோ நிறுவ ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிறுவனம் சீனாவில் ஏற்கனவே இது போன்ற ஒரு தொழிற்பிரிவைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புதிதாக ஒரு தொழிற்பிரிவை இந்நிறுவனம் தொடங்கினால், அது ஐரோப்பாவிற்கு வெளியே இந்நிறுவனத்தால் அமைக்கப்படும் இரண்டாவது தொழிற்சாலையாக இருக்கும். இதனையடுத்து ஏர்பஸ் நிறுவனம், விமான தயாரிப்பு செலவை 20-30 சதவீதம் குறைத்து இந்திய சந்தைக்கு சிறப்பான அளவில் சேவையளிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழகத்திலோ, கர்நாடகத்திலோ அமைக்கப்படும் இத்தொழிற்பிரிவு 2,600 மீட்டர் விமான ஓடுதளத்தைக் கொண்டதாக இருக்கும். விமானங்களுக்கு வண்ணம் பூசுதல், பரிசோதனைகள் மற்றும் இறுதி டெலிவரி போன்ற பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.
புதிய தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனம் 60 கோடி டாலர் (சுமார் ரூ.3,000 கோடி) முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளில் 600 முதல் 1,000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்தொழிற்சாலைக்கான நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டால், அடுத்த 3-4 ஆண்டுகளில் இது செயல்பாட்டுக்கு வரும். தற்போது இந்தியாவில் வர்த்தக விமானங்களுக்கான சந்தை மதிப்பு 150 கோடி டாலராக (சுமார் ரூ.7,000 கோடி) உள்ளது. ஏர்பஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு பிரிவு செயல்பாட்டுக்கு வரும்போது, சந்தை மதிப்பு 380 கோடி டாலராக (சுமார் ரூ.18,000 கோடி) உயர வாய்ப்பு இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: