Sunday, June 7, 2009

சென்னையில் வந்தாச்சு ஐ.பி., 'டிவி' : ஒரே இணைப்பில் மூன்று சேவைகள்

கேபிள் 'டிவி,' டி.டி.எச்., இணைப்பு இல்லாமல், 'டிவி'யில் சேனல்களை பார்க்க முடியுமா என்ற அனைவரின் கேள்விக்கும் விடையளித்துள்ளது பி.எஸ்.என்.எல்., நிறுவனம். தொலைபேசி இணைப்பு வழங்கும் கேபிள்களிலேயே தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் 'டிவி' சேனல்களை பார்க்கும் வசதியுடன் கூடிய 'ஐ.பி., 'டிவி' (இன்டர்நெட் புரோட்டாகால் 'டிவி') இணைப்பையும் புதியதாக வழங்கி வருகிறது.இந்த இணைப்பை பெற, கேபிள் இணைப்போ, டி.டி.எச்., இணைப்போ தேவையில்லை; பிராட்பேண்ட் இணைப்பு மட்டுமே போதும். இதில் தரப்படும் செட் ஆப் பாக்ஸ் மூலம் நேரடியாக 'டிவி'க்கு இணைப்பு கொடுத்தால், மக்கள் விரும்பும் சேனல்களைப் பார்த்து மகிழலாம். இதற்கான கட்டணத்தையும் தொலைபேசி கட்டணத்துடன் இணைத்தும் அனுப்பலாம்.இந்த ஐ.பி., 'டிவி'யை பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'ஸ்மார்ட் டிஜிவிசன்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து வழங்கி வருகிறது. இந்தியாவில் டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்கனவே இந்த ஐ.பி., 'டிவி' சேவை அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல முறையில் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் இந்த சேவை, கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்தது.சென்னையை பொறுத்தவரை, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இரண்டு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளனர். இந்த இணைப்பினை பெற்றவர்களிடையே தற்போது ஐ.பி., 'டிவி' குறித்த விளக்கங்களை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தினர் அளித்து வருகின்றனர். இதுவரையில் 150 பேர் மட்டுமே ஐ.பி., 'டிவி' இணைப்பினை பெற்றுள்ளனர்.இந்த இணைப்பில் தேவைக்கேற்ப வீடியோ படங்கள், சீரியல்கள், சினிமாக்களை பதிவு செய்து, நேரம் கிடைக்கும் போது பார்க்கும் வசதி உள்ளது. மற்ற டி.டி.எச்., இணைப்புகளில் தனியாக 'சிடி'யில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த இணைப்பில் செட் ஆப் பாக்சிலேயே பதிவு செய்து பார்க்கலாம்.இது போன்று குறிப்பிட்ட இசை, பள்ளி மாணவர்கள் வசதிக்காக, கல்வி பாடத்திட்டம் மற்றும் விளையாட்டுகளை பதிவு செய்து வைத்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது. இதில் படம் மிகத் தெளிவாகவும், டிஜிட்டல் தரத்திலும் தெரிவதால், அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையிலும் உள்ளது. இந்த 'டிவி'யை பார்த்துக் கொண்டிருக்கும் போது பிராட்பேண்ட் மற்றும் தொலைபேசி சேவையில் எந்த தடங்கலும் இன்றி அதே வேகத்தில் செயல்படுகிறது.இந்த 'டிவி'யில் நான்கு திட்டங்கள் உள்ளன. ஜூனியர் திட்டத்தில் 50 சேனல்களுக்கு 100 ரூபாயும், எகானமி திட்டத்தில் 76 சேனல்களுக்கு 150 ரூபாயும், வேல்யூ திட்டத்தில் 96 சேனல்களுக்கு 200 ரூபாயும், சூப்பர் வேல்யூ திட்டத்தில் 126 சேனல்களுக்கு 280 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் பயன்பாட்டை பொறுத்து இதற்கான கட்டணம் தனியாக செலுத்த வேண்டும்.இதற்கான செட் ஆப் பாக்ஸ் தனியாக 2,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. மொத்தமாக செலுத்தி வாங்க முடியாதவர்கள் முன்தொகையாக 1,000 ரூபாயும், மாதம் 50 ரூபாய் வாடகை செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம் கொஞ்சம் அதிகம் என்றாலும், விரைவில் அதிக பயன்பாட்டிற்கு வரும் போது குறைக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.தற்போது, இத்திட்டத்தின் அறிமுகச் சலுகையாக சென்னையில் இந்த இணைப்பு பெறுபவர்களுக்கு, இணைப்பு பெற்ற முதல் மூன்று மாதங்களுக்கு சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதன் பின், தேவைக்கேற்ப திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம். தற்போதுள்ள நிலவரப்படி தமிழ் சேனல்களில் கலைஞர், ஜெயா, ஜீ, ராஜ் மற்றும் விஜய் 'டிவி'க்கள் வருகின்றன. இந்த சேனல்களின் இணைப்பு சேனல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், '' டிராய் வழிகாட்டலின் படி, அனைத்து சேனல்களும் எங்களுக்கு வழங் கப்பட வேண்டும். இணைப்பு வழங்காத சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விளையாட்டு சேனல்கள் இல்லாதது, வாடிக்கையாளர் களிடையே ஏக்கமாக உள்ளது. இன்னும் 10 நாட்களில் விளையாட்டு சேனல்கள் தெரியும். இது தவிர, மற்ற சேனல்களும் விரைவில் பெற்று ஒளிபரப்பப்படும். தற்போது, சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.
நன்றி : தினமலர்


1 comment:

butterfly Surya said...

Thanx for the information.

Good Job.