லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை, புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. இரண்டு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 15ம் தேதி தங்கம் விலை கிராம் 1,220 ரூபாய்க்கும், சவரன் 9,760 ரூபாயாகவும் இருந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது. இதில், உச்சகட்டமாக கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் தங்கத்தின் விலை கிராம் 1,485 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்றது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையில் நிதான நிலையே தொடர்ந்தது. லோக்சபா தேர்தல் முடிவு வெளியான கடந்த 16ம் தேதி மதியம் முதல் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மையான ஆதரவு கிடைப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. இந்தச் சரிவு தொடரும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது, நடுத்தர மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்கு வர்த்தகத்தில் நிலையில்லாத் தன்மை, ரியல் எஸ்டேட் தொழிலில் தேக்கநிலை ஆகியவற்றால் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தங்கத்தின் மீதான இந்த மோகமே தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என நகைக்கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ரூ.27.20க்கும், ஒரு கிலோ 27 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கிறது. சர்வதே சந்தையில் தங்கம் விலையில் தொடர்ந்து அதிகரிப்பு, இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் நிலையில்லாத் தன்மை ஆகியன தொடரும் பட்சத்தில், ஜூன் மாத கடைசி வாரத்தில் தங்கம் சவரன் 12 ஆயிரம் ரூபாய்க்கும், வெள்ளி கிலோ 30 ஆயிரம் ரூபாயையும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment