Monday, June 29, 2009

தங்கம் இறக்குமதி 44 சதவீதம் குறைந்தது

உச்சத்தில் இருக்கும் விலை ; டிமாண்ட் இல்லை போன்ற காரணங்களால், ஜூன் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி, அதற்கு முந்தைய மாத இறக்குமதியை விட 44 சதவீதம் குறைந்திருக்கும் என்று தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மே மாதத்தில் 18 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அது ஜூன் மாதத்தில் 10 டன்னாக குறைந்திருக்கும் என்று பாம்பே புல்லியன் அசோசியேஷன் தெரிவிக்கிறது. இனிமேலும் தங்கத்தின் விலை குறையவில்லை என்றால், இறக்குமதி அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று பாம்பே புல்லியன் அசோசியேஷன் இயக்குனர் சுரேஷ் ஹூன்டியா தெரிவித்தார். கடந்த வாரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.14,600 ஐ ஒட்டியே இருந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் ( 28.34 கிராம் ) தங்கத்தின் விலை 938.55 டாலராக இருந்தது. தங்கத்தின் எனவே,கடந்த வருடம் ஜனவரி - ஜூன் காலத்தில் 139 டன்னாக இருந்த தங்கத்தின் இறக்குமதி, கடுமையான விலை உயர்வால் இந்த வருடம் ஜனவரி - ஜூன் காலத்தில் 50 டன்னாக குறைந்திருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15 ஆயிரத்தை ஒட்டி இருந்தபோது, இந்தியாவில் தங்கம் இறக்குமதியே செய்யப்படவில்லை என்கிறார் ஹூன்டியா. ஆனால் ஏப்ரலில் வந்த ' அக்ஷய திருதி 'யை முன்னிட்டு அந்த மாதத்தில் மட்டும் 20 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
நன்றி : தினமலர்


No comments: