நன்றி : தினமலர்
Friday, May 29, 2009
வட்டி விகிதத்தை குறைத்து வங்கிகள் நிதியுதவி தர வேண்டும் : நிதியமைச்சர் பிரணாப் யோசனை
'பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பொருளாதார சீர்திருத்தத்தை விரைவுபடுத்தவும், வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்து தாராளமான செயல் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும்' என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். பிரணாப் முகர்ஜி மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின் நடந்த முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஜூலை முதல் வாரம், 2009-10ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதிக நிதி தேவை மற்றும் அவை கிடைக்க அதிக வட்டி தர வேண்டிய நிலை போன்றவற்றால், தாழிற்சாலை மற்றும் வர்த்தகம் போன்றவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இது தொடர்பான முதல் நடவடிக்கையாக வங்கியாளர்களைச் சந்தித்து, கடன் வழங்கும் போது சற்று எளிமையான செயல் திட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்ளப் போகிறேன். நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை முன்பிருந்த பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். கடன் வழங்குவதை அதிகப் படுத்தி, முதலீடுகளை அதிகரிக்காமல் இது சாத்தியமில்லை. இந்த நிலை, 2009-10ம் ஆண்டு வரை தொடர வேண்டியது அவசியம். அதே போல், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு நாட்டின் வருமானத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், பண மோசடிகளுக்கு எதிரான நடைமுறைகள் இந்த அரசால் கடுமையாக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்காக, கடந்த டிசம்பர், ஜனவரி மாதம் மற்றும் இடைக்கால பட்ஜெட்டில் அரசு அறிவித்த ஊக்க நிதிச் சலுகையால் என்னென்ன முன்னேற்றம் காணப் பட்டிருக்கிறது என்பதை அரசு ஆய்ந்து வருகிறது. மத்திய பட்ஜெட் உருவாக்கப்படும் போது, மேலும் எந்தவிதத்தில் நடவடிக்கை எடுத்தால், அது தொழில் துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதை உற்று நோக்கி செயல்படுத்தப்படும். அதனடிப் படையில், பல்வேறு நிபுணர்களிடம் ஆலோசனைகள் கேட்டு, அவர்களின் பரிந்துரைகளில் முக்கியமானவைகள் செயல் திட்டத்தில் சேர்க்கப்படும். நமக்கு வளர்ச்சியும், வேலைவாய்ப்பு அதிகரிப்பும் இன்று இன்றியமையாத தேவைகள். அதற்கு அதிக செலவு செய்யும் திட்டம் தேவை. அதற்கான நிதி கடனுதவியாகப் பெறப்படும். அடுத்த ஆண்டிலும் இந்த விஷயங்களுக்கான முன்னுரிமை தொடரும். பட்ஜெட்டில் பாமர மனிதனின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், அதில் உள்கட்டமைப்பு செலவினங்களும் வலியுறுத்தப்படும். இந்த பட்ஜெட்டில், அடுத்த ஐந்தாண்டிற்கான அரசின் நோக்கம் மற்றும் அணுகுமுறைகள் இடம் பெறும். ரிசர்வ் வங்கியின் தொடர் நடவடிக்கைகள் மூலம் அரசு பணப்புழக்கத்தை அதிகரிக்கும். இவ்வாறு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
Labels:
ரிசர்வ் வங்கி,
வங்கி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment