நாடு முழுவதும் என்.எல்.சி., நிறுவனம் சார்பில் புதிய அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. ஆயுள் நீட்டிப்புக் காலம் முடிந்தும் தொடர்ந்து நெய்வேலி முதல் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் ஒன்பது யூனிட்டுகளுக்கு மாற்றாக புதிய அனல் மின் நிலையம் அமைப்பதற்கான முயற்சி நடந்தது. நெய்வேலி வளாகத்திற்கு அருகில் கொள்ளிருப்பு, நயினார்குப்பம், வெல்லாங்குளம் மற்றும் ஆதண்டார்கொல்லை கிராம எல்லைக்குள் 200 எக்டேர் பரப்பில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. ஐந்நூறு மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரண்டு யூனிட்டு முதல் அனல் மின் நிலையத்தின் 600 மெகாவாட்டிற்கு மாற்றாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையம் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. முதல் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு எவ்வளவு பழுப்பு நிலக்கரி பயன்படுத்தப் பட்டதோ அதே அளவுள்ள பழுப்பு நிலக்கரியைக் கொண்டு நவீன தொழில் நுட்பங்களுடன் புதிய அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய உள்ளனர். தற்போதைய முதல் அனல்மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின் உற்பத்தி செய்வதற்கு 1.4 கிலோ பழுப்பு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. தற்போது அமைக்க உள்ள புதிய அனல்மின் நிலையத்தில் ஒரு கிலோ பழுப்பு நிலக்கரியைக் கொண்டு ஒரு யூனிட் மின் உற்பத்தி செய்யலாம். இந்த புதிய அனல்மின் நிலையம் அமைய உள்ள நிலங்கள், என்.எல்.சி., நிர்வாகத்தால் சட்டப்படி முன்பே ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு மெகாவாட் என்றால் என்ன? ஒரு 100 வாட் பல்பு தொடர்ந்து 10 மணி நேரம் எரிந்தால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதுபோல, 10 ஆயிரம் 100 வாட் பல்புகள் எரிவதற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். ஒரு கிலோ பழுப்பு நிலக்கரியை எரித்தால் ஒரு யூனிட் மின்சாரம் கிடைக்கும்.
நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்க உள்ள நிலக்கரியைக் கொண்டு மேலும் 100 ஆண்டுகளுக்கு என்.எல்.சி., நிறுவனத்தால் மின்சாரம் வழங்க முடியும்.
நன்றி ; தினமலர்
No comments:
Post a Comment