Monday, March 2, 2009

மொபைலில் கணக்கு; மனப்பாடம் செய்ய 'ஐபாட்': இவங்க மாறிட்டாங்க; நீங்க...

நீங்கள் பள்ளியில் படிக்கும் மாணவரா? மொபைல் போன் வைத்து இருக்கிறீர்களா? எப்போதும் 'ஐபாட்' டில் சினிமா பாட்டு கேட்டுக்கொண்டிருப்பதில் ஆர்வம் உள்ளவரா? படிப்பு நிச்சயம் கெடுமே; அப்படீன்னா, மும்பை மாணவர்கள் சாதிப்பதை கண்டிப்பாக நீங்க படிக்கணும்! சினிமா பாட்டு கேட்கவும், வீடியோ படங்களை பார்க்கவும் தான் மெபைல் போன் , ஐபாட் என்ற எண்ணத்தை மும்பை பள்ளி மாணவ, மாணவிகள் மாற்றிக்காட்டியுள்ளனர். ஆம், மொபைல் போனில், கஷ்டமான கணக்குகளை போட்டுப் பார்க்கின்றனர்; ஆசிரியர்கள் நடத்திய பாடத்தை மீண்டும் கேட்டு புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இது போலவே, சினிமாப் பாட்டுக்களை பதிவு செய்து,காதில் மிஷினை மாட்டிக்கொண்டு எப்போதும் கேட்டபடி இருப்பதற்கு பயன்படும் 'ஐபாட்' சாதனமும் இப்போது இந்த மாணவ, மாணவிகளுக்கு படிப்புக்கு உதவும் கருவியாகி விட்டது. பொழுதுபோக்கு சாதனங்களாக இருக்கும் இந்த இரு சாதனங்களையும் படிப்புக்கு பயன்படும் வகையில், மாணவர்களே மாற்றி வருவதால், பாடம் நடத்துவதை மொபைலில், பதிவு செய்து கொள்ளவும் ஆசிரியர்கள் அனுமதிக்கின்றனர்.
மும்பையில் உள்ள ஜம்னாபாய் நர்சி பள்ளியில் தான் இந்த புதுமையான வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஜெஸ்சி வாஸ் கூறுகையில்,'பொழுதுபோக்கு சாதனங்களாக உள்ள மொபைல் போன், ஐபாட் இரண்டும் எங்கள் பள்ளி மாணவர்களை பொறுத்தவரை படிப்புக்கு உதவும் கருவியாகி விட்டன. எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. வகுப்பில் புரியாத பாடங்களை மீண்டும் மீண்டும் கேட்டு புரிந்து கொள்ள இவர்களுக்கு இவை உதவும், மொபைல் போனில் கணக்குகளை போட்டுப்பார்க்க ஆலோசனை கூறி வருகிறோம்; அதுபோல, ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஐபாடில் கேட்க வைக்கிறோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' என்று தெரிவித்தார். இந்த மாணவ, மாணவிகள் வெப்சைட்சகளில் தேடி, பாட விஷயங்கள் தொடர்பான ஆடியோ தகவல்களை 'டவுன்லோடு' செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆங்கிலக்கவிதைகள், நாடகங்கள் மற்றும் கணக்கு சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் போன் வற்றையும் இப்படி மொபைல், ஐபாடில் ஏற்றிக்கொண்டு, அதைத் திரும்ப திரும்ப கேட்டு மனப்பாடம் செய்கின்றனர்; கணக்குகளையும் புரிந்து கொள்கின்றனர். இந்த பள்ளி மாணவர்களை பார்த்து, மும்பையில் மற்ற பள்ளிகளிலும் மாணவர்களை இந்த வகையில் ஊக்குவித்து வருகின்றனர் ஆசிரியர்கள்.
நன்றி : தினமலர்


No comments: