Wednesday, February 11, 2009

மற்ற ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க கட்டணம் ரத்து: ஏப்ரலில் அமல்

மற்ற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்தி பணம் எடுக்கும் போது வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் 20 ரூபாய் ரத்தாகிறது; ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்து, அதன் ஏ.டி.எம்.,கார்டை, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பயன்படுத்தி பணம் எடுத்தாலோ, கணக்கு இருப்பு சீட்டு பெற்றாலோ கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்;பணம் எடுத்தால், 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கூடுதல் கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. 'ஒரு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க மற்ற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்தும் போது, அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. இதற்கான தொழில்நுட்ப வசதியை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி உள்ளதால், எந்த ஒரு வங்கியும் இனி கூடுதல் கட்டணம் வசூலிக்காது' என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணம் எடுப்பது மட்டுமின்றி, கணக்கு இருப்பு ரசீது பெறுவது உட்பட எந்த ஒரு சேவைக்கும் கூடுதல் கட்டணம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இருக்காது. அரசு வங்கிகள் மட்டுமின்றி, தனியார் வங்கிகளுக்கும் இது பொருந்தும். ஆனால், வெளிநாடுகளில் உள்ள ஏ.டி.எம்.,களில் இருந்து கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் போது மட்டும், வங்கி நடைமுறைப்படி, வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 'ஒரு வங்கி கணக்கில் பணம் கையாள, இன்னொரு வங்கி ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்தினால், கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், குறிப்பிட்ட சில வங்கி ஏ.டி.எம்.,களில் கரன்சி நோட்டுக்கள் தேங்கி விடுகின்றன; சிலவற்றில் அடிக்கடி தீர்ந்தும் விடுகின்றன. இந்த நிலையை போக்கவும், ஏ.டி.எம்.,களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: