நன்றி : தினமலர்
Tuesday, February 10, 2009
இந்தியாவில் பீர் வியாபாரம் : ஜெர்மனி கம்பெனிகள் மோதல்
இந்தியாவில் பீர் விற்பதில், ஜெர்மனியை சேர்ந்த இரு கம்பெனிகள் மோதிக் கொண்டுள்ளன. பிராண்ட் பெயரை யார் பயன்படுத்துவது என்பதில் ஐகோர்ட்டில் மோதிக்கொண்டுள்ளன. ஜெர்மனியை சேர்ந்த 'லோவன்ப்ராவ் ஏ.ஜி.,' என்ற நிறுவனம் பீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதுபோலவே, 'லோவன்ப்ராவ் ஹட்டன்ஹெம்' என்ற நிறுவனமும் பீர் தயாரித்து பல நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களுமே, தங்கள் பீர் கேன்களில் 'லோவன்பராவ்' என்ற பெயரை பயன்படுத்துகின்றன. பல நாடுகளிலும் இப்படித்தான் விற்கின்றன. இந்தியாவில் பீர் குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அறிந்த இந்த நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு பீர் கேன்களை விற்பனை செய்ய போட்டா போட்டி போட்டு வருகின்றன. ஹட்டன் ஹெம் நிறுவனத்தின் பீர் தான் அதிக அளவில் விற்பனை ஆகிறது. இந்நிலையில், டில்லி ஐகோர்ட்டில் 'லோவன்ப்ராவ் ஏ.ஜி.,' வழக்கு போட்டது. 'லோவன்ப்ராவ் என்ற பெயரை நாங்கள் 1994ல் இந்தியாவில் பதிவு செய்துள்ளோம். அதனால், அதை இந்தியாவில் பயன்படுத்த ஹட்டன்ஹெம் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரியது. இதை ஏற்று தடை விதித்தது கோர்ட். எனினும், 'ஜெர்மனியில் தயாரிக்கப்படும் எல்லா நிறுவன பீர் பெயரும் 'லோவன்ப்ராவ்' என்று தான் இருக்கும். பீர் தயாரிக்கப்படும் ஊரின் பெயர் அது. அதனால், அதை பயன்படுத்த தடை விதித்தது சரியல்ல' என்று ஹட்டன்ஹெம் அப்பீல் செய்தது. இதையடுத்து, இந்த மாத முதலில் தடை நீக்கப்பட்டது. 'பல நாடுகளில் ஜெர்மனி நிறுவனங்கள் பீர் 'லோவன்ப்ராவ்' என்றே வைத்து விற்பனை செய்யப்படும் போது, இந்தியாவில் மட்டும் உரிமை கோருவது ஏன் என்று தெரியவில்லை. இதை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்யப்படும்' என்று கோர்ட் கருத்து கூறியது. ஜெர்மனியில் இந்த நிறுவனங்கள் இரண்டும் வர்த்தக ரீதியாக போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் பீர் விற்பனையை அதிகரிக்கவே இப்படி செய்துள்ளன. இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment