Wednesday, February 25, 2009

ஜப்பானின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்து விட்டது

உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் அதிகம் முன்னேறிய நாடாகவும், ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் இருக்கும் ஜப்பானின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 45 சதவீதம் குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவின் காரணமாக ஜப்பான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் இந்த வருடம் ஜனவரி மாதத்தின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்திருப்பதாக அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அமெரிக்கான ஏற்றுமதி 53 சதவீதமும், ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி 47 சதவீதம் குறைந்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஜப்பானின் டிரேட் டெபிசிட் 9.9 பில்லியன் டாலராக அதிகரித்து விட்டது. உலக அளவில் ஜப்பானின் கார்களுக்கான டிமாண்ட் 69 சதவீதம் குறைந்திருக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து போனதால் ஜப்பானின் எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் டிமாண்ட் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜப்பானின் பொருளாதாரமே ஏற்றுமதியை நம்பித்தான் இருப்பதால், ஏற்றுமதி குறைந்திருப்பது அந்நாட்டு பொருளாதாரத்தை பெரிதாக பாதித்திருப்பதாக சொல்கிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின் இப்போதுதான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். எனவே உலகின் முதல் பொருளாதார நாடான அமெரிக்காவும், இரண்டாவது பொருளாதார நாடான ஜப்பானும் இணைந்து, ஜப்பானின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: