வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் 9 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றிற்காக ரிசர்வ் வங்கி 1.65 லட்சம் கோடி வரை பணத்தை வெளியிட்டது.இவ்வளவு நடவடிக்கைக்கு பிறகும், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்., விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கூறியது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட இடைக்கால நிதி கொள்கைளில் பல அறிவிப்புகள் வெளிவரும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். மேலும், ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பு ஏற்றுள்ள சுப்பாராவ் வெளியடும் முதல் நிதிக் கொள்கை என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் இடைக்கால நிதிக் கொள்கையை வெளியிட்டு பேசுகையில் கூறியதாவது:
சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உள்நாட்டில் நிதிச்சந்தைகளில் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நமது பொருளாதார நிலைமை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதால் இந்த அளவுக்கு சமாளிக்க முடிகிறது.விரைவில் இந்த நிலைமை மாறி முன்னேற்றம் ஏற்படும். வங்கிகளில் பணப்புழக் கத்தை சரிசெய்ய ரிசர்வ் வங்கி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பயனாக, வங்கி ரேட் விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்யப்படவில்லை ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்க வேண்டிய மொத்த ரொக்க கையிருப்பு விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும். குறுகிய கால கடன்களை வழங்க வங்கிகளுக்கான ரெபோ ரேட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இது 8 சதவீதமாக இருக்கும். அது போல் ரிசர்வ் ரெபோ ரேட்டும் 6 சதவீதமாக இருக்கும்.கடன்களுக்கான வட்டி, டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) 8 சதவீதமாக இருக்கும் என முன்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அது, தற்போது 7.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்குள் வர வாய்ப்பு இருக்கிறது.பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பது நெருக்கடியை கொடுப்பதாக உள்ளது. தற்போது உலக சந்தையில் பொருட்களின் விலை குறைந்து வருவதாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாலும், பணவீக்கத்தை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 7 சதவீதத்திற்குள் கொண்டு வருவதில் உன்னிப்பாக உள்ளோம்.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறோம்.
வங்கிகளின் நிதி நிலைமை, கடன் நிலை, போன்றவற்றை பல்வேறு நிலைகளில் ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக ஸ்திரமான நிதி நிலைமை இருப்பதற்கு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நிதிச்சந்தைகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க விழிப்புடன் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.சிதம்பரம் கருத்து: கடந்த 6ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் ளாக பணப்புழக்கத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல் வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. எனவே, பணப்புழக்கத்தை தக்கவைப்பதற்காக, மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். ரேட் விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்' என்றார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment