Wednesday, September 10, 2008

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 103 டாலர்தான்

வியன்னாவில் நடக்கும் ஓபக் அமைப்பின் ( பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு ) மாநாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 5.2 லட்சம் பேரல்கள் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. நியுயார்க் மெர்கண்டைல் சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 3.08 டாலர் குறைந்து 103.26 டாலராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப்பிறகு இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு குறைந்திருக்கிறது. ஓபக் அமைப்பின் கூட்டத்திற்குப்பின் அதன் தலைவர் சாகிப் கெலில் பேசுகையில், ஓபக் நாடுகள் இனிமேல் இப்போதுள்ள எண்ணெய் உற்பத்தியில் இருந்து நாள் ஒன்றுக்கு 5,20,000 பேரல்கள் குறைத்து 2 கோடியே 88 லட்சம் பேரல்கள் தான் உற்பத்தி செய்யும் என்றார். ஆனால் பொதுவாகவே ஓபக் நாடுகள், ஓபக் அமைப்பு விதிக்கும் உற்பத்தி அளவை விட கூடுதலாகவே எண்ணெய்யை உற்பத்தி செய்து வந்துள்ளன. இதற்கு முன் நடந்த ஓபக் மாநாட்டில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 73 லட்சம் பேரல்கள்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்கு மேல்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


No comments: