Tuesday, August 19, 2008

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் நஷ்டம் நாலில் ஒரு பங்கு குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், எண் ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த வருவாய் இழப்பு நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கெரசின் விற்பனையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வந்தன. அதனால், கடந்த ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த விலை உயர்வால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை முழுமையாக ஈடுகட்ட முடியவில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களும், நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்து வந்தன. ஆனால், சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஜூலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 5,960 ரூபாயாக விற்றது. தற்போது, இந்த விலை 5,145 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்கள் தற்போது 450 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நஷ்டத்தை எதிர்கொள் கின்றன. ஆகஸ்ட் முற்பகுதி நிலவரப்படி, பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 7.07 ரூபாயும், டீசல் விற்பனையில் 16.22 ரூபாயும், கெரசின் விற்பனையில் 39.55 ரூபாயும், சமையல் எரிவாயு விற்பனையில் 348.89 ரூபாயும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன.
ஜூலை மாதத்தில் பெட்ரோல் விற்பனையில் 11.60 ரூபாயும், டீசல் விற்பனையில் 23.23 ரூபாயும் இழப்பு ஏற்பட்டது. அதை ஒப்பிடுகையில், தற்போதுள்ள இழப்பு குறைவே. பெட்ரோல், டீசல் விலைகள் 15 நாட்களுக்கு ஒரு முறையும், கெரசின் மற்றும் சமையல் காஸ் விலைகள் ஒரு மாதத்திற்கு ஒரு முறையும் கணக்கிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலை நீடித்தால், மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், நடப்பு நிதியாண்டின் இறுதியில், ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை சந்திக்கும். 15 நாட்களுக்கு முன், கணக்கிடும் போது, இரண்டு லட்சத்து 5,750 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 'சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவது ஒரு நல்ல திருப்பமே. அது பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும். இருப்பினும், அந்த கம்பெனிகள் இன்னும் இழப்பை சந்தித்து வருவதால், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வாய்ப்பே இல்லை' என, மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
நன்றி : தினமலர்


No comments: