Sunday, August 31, 2008

சாண் ஏறினால் முழம் சறுக்கும் பங்குச் சந்தையில் போடுவீர் மனக்கணக்கு; தவிர்ப்பீர் மனக்குழப்பம் -சேதுராமன் சாத்தப்பன்-


''எங்கே போகும் இந்த பாதை' என்று 'காசி' விக்ரம் பாணியில் சோக ராகம் பாடிக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள், செய்வதறியாது முடங் கிப் போய் உள்ளனர். நோய்வாய்ப் பட்டவர்கள் எப்படி உடல் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றத்திற்கெல்லாம் பயப்படுவார்களோ, அப்படி பயத்திலே பங்குச் சந்தை கீழே விழுந்து கொண்டிருக்கிறது. வியாழனன்று சந்தை இவ்வளவு கீழே விழுந்ததற்கு காரணம், தொடர்ந்து சில வாரங்களாக பாடாய்படுத்தி வரும் பணவீக்கம், இன்றைக்கு எப்படி இருக்குமோ என்ற பயம் தான். மேலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டு ஜி.டி.பி., எவ்வளவு என்ற அறிக்கை எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் ஒருவித பயத்துடன் அணுக வைத்தது. நினைப்பு தான் பொழப்பைக் கெடுத்தது எனலாம். வியாழனன்று முடிவாக சந்தை 248 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது. கிட்டத்தட்ட 14 ஆயிரம் புள்ளிகள் என்ற விளிம்பைத் தொட்டு நின்றது.வியாழனன்று மாலை சந்தை நேரத்திற்கு மேல் வெளியான பணவீக்கம் குறைந்து இருந்தது. வெள்ளியன்று வெளியான அறிக்கையில் ஜி.டி.பி., சதவீதம் 7.9 என்ற அளவில் இருந்தது போன்றவற்றால், சந்தையில் அபரிமிதமான ஏற்றம் இருந்தது. பணவீக்கம் கூடும் போது எந்த பங்குகள் கீழே விழுந்தனவோ அவையெல்லாம் மேலே சென்றன. குறிப்பாக வங்கித் துறை, கட்டுமானத் துறை ஆகியவை ஆகும். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 516 புள்ளிகள் கூடி 14,564 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 146 புள்ளிகள் கூடி 4,360 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
ரோல் ஓவர் எப்படி?: நிப்டியில் ஆகஸ்ட் மாத ரோல் ஓவர் 75.3 சதவீத அளவில் இருந்தது. இது, கடந்த மூன்று மாத சராசரி அளவான 67.2 சதவீதத்தை விட அதிகமாகும்.இந்த வாரத்தின் பெரிய ஷாப்பிங் லிஸ்ட்: நாம் மாதக் கடைசியானால், சம்பளம் வாங்கியதும் லிஸ்ட் போட்டுக் கொண்டு ஷாப்பிங் செய்யச் செல்வோம். அதுபோல, இந்திய கம்பெனிகளும் தங்கள் கையில் அதிகமான கையிருப் புப் பணங்கள் இருப்பதாலும், உலகளவில் சந்தைகள் குறைந்து இருப்பதாலும், இது தான் சமயம் எனக் கருதி ஷாப்பிங்குக்கு கிளம்பியுள்ளன. இன்போசிஸ் கம்பெனி, லண்டனைச் சேர்ந்த அக்சான் என்ற கம்பெனியின் பங்குகளை 3,283 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம், கையிருப்புப் பணம் அதிகமாக உள்ள கம்பெனிகள் எனக் கூறப்படுவர். அதாவது, அவர்கள் வங்கிகளிடம் கடன்கள் வாங்கமாட்டர். தங்களிடம் உள்ள உபரிப் பணங்களை வங்கிகளிடம் டெபாசிட் தான் போட்டு வைப்பர். அதுபோல் உபரிப்பணமாக, இன்போசிஸ் தற் போது 7,480 கோடி ரூபாய் வைத் துள்ளது. அது தான் ஒரு ஷாப்பிங் சென்று வரலாமே என்று கிளம்பி, 3,823 கோடி ரூபாய்க்கு அக்சானை வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது.இதுபோல, ஓ.என்.ஜி.சி., கம்பெனியும், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய கம்பெனியை பில்லியன் டாலருக்கு மேல் கொடுத்து வாங்கவுள்ளது. உலகளவில் பல இடங்களிலும் கம்பெனிகளை இந்தியக் கம்பெனிகள் வாங்குவது, வருங்காலங்களில் பெரிய அளவில் வருவதற்கான அறிகுறிகளே ஆகும்.' பிக்சட் மெச்சூரிட்டி பிளான்கள்': பங்குச் சந்தை மேலும், கீழுமாக இருக்கிறது. எப்படி போகும் என்று யாராலும் சொல்ல முடியாத நிலை. அதே சமயம், வங்கிகள் 10 சதவீதம் வரை வட்டி கொடுக்கின்றன. முதலீட்டாளர்கள் எல்லாம், அதை விட அதிகமாக எங்கு கிடைக்கும் என்பது தான். பல மியூச்சுவல் பண்டுகள் தங்களது பிக்சட் மெச்சூரிட்டி பிளான்கள் மூலம் அதிக வட்டிகள் கொடுத்து வருகின்றன. ஸ்டேட் பாங்க் 90 நாட்கள் பிக்சட் மெச்சூரிட்டி பிளானுக்கு 11.5 சதவீத வட்டி கொடுப்பதாக அறிவித்துள்ளது. இது போன்ற திட்டங்கள் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும். பந்திக்கு முந்தியவர்களுக்கு தான் விருந்து என்பது போலத்தான் இது போன்ற திட்டங்களும். வருமானம் எங்கு கூடுதலாகக் கிடைக்கிறதோ அங்கு செல்வது தான் இயற்கை. இது போல திட்டங்களில் தற்போது, ரூ.1 லட்சம் கோடிக்கு மேலாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாக தெரிய வருகிறது. முதலீட்டாளர்கள் உஷாரானவர்கள் தான். இதன் காரணமாக பலர், தங்கள் 'டிமேட் கணக்கு'களில் உள்ள தங்கள் பங்குகளை விற்று விட்டு, வங்கிகள் பக்கம் சாயத் துவங்கி விட்டனர்.
பங்குச் சந்தையில் நிலைமை சரியான பிறகு திரும்பி வரலாம் என பலரும் நினைக்கத் துவங்கி விட்டனர். ஆம். உண்மை தான் 'சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.'இப்போதைக்கு பணம் முதலீடு செய்யாமல், வெறுமனே பேப்பரில் மட்டும் பங்குகள் வாங்குவது போலவும், சில நாட்கள் கழித்து விற்பது போலவும் கணக்கு போட்டு வாருங்கள். உங்கள் கணக்கு எப்படி சரியாகிறது என்று பார்த்த பிறகு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அடுத்த ரவுண் டுக்கு தயாராகுங்கள். அதுவரை பொறுத்திருப்பதே சிறப்பு. 'ஷேர் புரோக்கர்கள்' தங்களுக்கு தொடர்ந்து கமிஷன் வேண்டும் என்பதற்காக வலை விரிப்பர்; அதில் விழுந்து விட வேண்டாம்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: இருப்பினும், பணவீக்கம் சிறிது குறைந்துள்ளதாலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டு ஜி.டி.பி., 7.9 சதவீதத்தில் இருப்பதாலும், சந்தை சிறிது மேலே செல்ல வாய்ப்புகள் ஒரு புறம் இருக்கிறது. ஆனால், இந்திய சந்தைகள் சரிந் தால், நாட்-அவுட் என்றே கூற வேண் டும். கடந்த ஆண்டு ஏறும் போதும் வெகு வேகமாக ஏறியது. அதுபோல இறங்கும் போதும் வேகமாக இறங்கியது. ஆனால், இப்போது அப்படியே தலைகீழ், ஏறினால் ஓரளவு ஏறுகிறது; சரிந்தால், நாம் நினைத்து பார்க்காத அளவில் சரிகிறது. எனவே, இப்போதைக்கு உ ங்கள் கையில் உள்ள பங்குகள் கணிசமான லாபத்தில் இருந்தால் விற்று விடுவதே சிறப்பு. வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதுவரை பொறுத்திருப்போம்.
நன்றி : தினமலர்


No comments: