Wednesday, August 27, 2008

இந்திய நகைகள் ஏற்றுமதி அமெரிக்காவில் சரிவு

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நிறுவனங்களின் தங்க நகைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.பல நாடுகளுக்கு தங்க நகை ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கணிசமான அளவில் வர்த்தகம் நடந்து வந்தது. ஆனால், சமீப காலமாக இந்த நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டு வருவதை அடுத்து, வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் சஞ்சய் கோத்தாரி கூறுகையில், 'கடந்தாண்டை விட, கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் தங்க நகைகள் ஏற்றுமதி 23 சதவீதம் குறைந்துள்ளது. அதனால், ரஷ்யா, சீனா, மேற்காசிய சந்தைகளில் தங்க நகை ஏற்றுமதி செய்வது தொடர்பாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.'தங்க நகைகள் ஏற்றுமதிக்குரிய பட்டியலில் நகைகளை மட்டும் மத்திய அரசு சேர்த்துள்ளது. தங்கம், விலை உயர்ந்த கற்கள் பதித்த ஆடைகள், புடவைகள், கைக்கடிகாரங்கள் உட்பட பல்வேறு பொருட்களையும் இந்த ஏற்றுமதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்போது தான், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இந்த பொருட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்ய வழி கிடைக்கும். மத்திய வர்த்தக அமைச்சகம் தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஏற்றுமதியாளர்கள் கூறினர்.'இந்தியாவில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் தொடர்பான தொழிலில் 30 லட்சம் பேர் வேலையில் உள்ளனர். இந்த துறையை விரிவுபடுத்தினால், இன்னும் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். ஏற்றுமதியும் அதிகரிக்கும்' என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: