Tuesday, August 12, 2008

இறங்கிய தங்கம் மீண்டும் ஏறியது

கடந்த வாரத்தில் இறங்கு முகமாக இருந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.53 அதிகரித்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திடீரென சரிந்ததால், அது தங்கத்தில் எதிரொலித்தது. கடந்த வாரம் கிராம் ஒன்றிற்கு ரூ.200 வரை குறைந்தது. இதனால், நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆயிரத்து 40 ரூபாயாக இருந்தது. நேற்று காலை, வர்த்தகம் துவங்கியதுமே தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.53 அதிகரித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதிலும், சர்வதேச அளவில் அனைவரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டியதாலும், ஆன்-லைன் பொருட்கள் சந்தையில் அன்றாட வர்த்தகத்தில் ஈடுபடுவோர் தங்கத்தை அதிகம் முதலீடு செய்ததால், குறைந்த தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது.மாலையில் மேலும் மூன்று ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் விலை, ஆயிரத்து 96 ரூபாயாக இருந்தது.பங்குச் சந்தையில் முன்னேற்றம்: மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம், 280 புள்ளிகள் உயர்வுடன் தான் துவங்கியது. சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காரணமாக இந்த ஏற்றத்தை காண முடிந்தது. ரியல் எஸ்டேட், வங்கி துறை பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. கச்சா எண்ணெய் விலை பேரல் 115 டாலருக்கு கீழ் வந்ததும் ஒரு காரணம். இருப்பினும் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் மிதமான போக்கை கடைப்பிடித்ததால் 336 புள்ளிகள் ஏற்றத்துடன், 15,503 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை நிலை பெற்றது.சந்தை 15 ஆயிரத்து 400 புள்ளிகளுக்கு மேல் நிலை பெற்றுள்ளதால், தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக நோக்கர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

2 comments:

வால்பையன் said...

தங்கம் ஒரு மாதத்தில் கிராமுக்கு 280 ரூபாய் இறங்கியிருக்கிறது. வாங்கி வட்சவநெல்லாம் டவுசர் கிழிஞ்சி திரியுறான், உங்களுக்கு மட்டும் ஏறி போச்சா

வால்பையன்

பாரதி said...

வால்பையன்(Arun)வருகைக்கு நன்றி