Friday, January 22, 2010

அரசு உ ணவகங்கள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பண்டிகையின்போது, சென்னை உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்தும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டவர்கள் அலைந்து திரிந்து பயணச்சீட்டுகளை வாங்கி, இருக்கைகள்கூட கிடைக்காமல் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

அரக்கப்பறக்க ஓடிவந்து பேருந்துகளைப் பிடித்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது அரசு பஸ்களின் கூடுதல் கட்டணமும், கூட்ட நெரிசலும் மட்டுமல்ல, நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் உணவகங்களும்தான்.

அங்கு விற்பனை செய்யப்பட்ட சுகாதாரமற்ற உணவு, நட்சத்திர ஹோட்டல்க ளையும் மிஞ்சும் அளவுக்கு விலை உயர்வு மற்றும் மூச்சைத் திணறடித்த கழிவறைத் துர்நாற்றங்களே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

சிறுபொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் கடலை உள்ளிட்ட "ஸ்நாக்ஸ்'கள் கூட குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன. வெந்நீரைவிடக் கேவலமான காபி, டீ ஆகியவற்றின் விலையோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையாயின. சாப்பாடு மற்றும் குளிர்பானங்களின் விலையோ வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொட்டிருந்தன. எந்த அளவுக்கு விலை உயர்ந்திருந்ததோ, அந்த அளவுக்கு உணவின் தரமும் மோசமாக இருந்தது. உணவுக்கு அதிகவிலை கொடுத்ததற்காக கவலைப்படாதவர்கள் கூட, அதைச் சாப்பிடுவதற்காகக் கண்ணீர்விட்டனர்.

உணவுப்பொருள்கள் தான் அதிகவிலை என்றால், கழிவறைகளிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிரடியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. பெண்களும், குழந்தைகளும் வேறு வழியின்றி கழிவறைக்குச் செல்ல நேர்ந்தது. ஆனால் கழிவறையின் நிலையோ படுமோசம். சுத்தம் செய்யப்படாமலும், சில இடங்களில் தண்ணீர் இன்றியும் காணப்பட்டன.

இதனால் கழிவறைக்குச் சென்றவர்களுக்கெல்லாம் மயக்கம்தான் வந்தது. கூடுதல் கட்டணங்கள் கொடுத்தும், பேருந்துகளில் தான் இருக்கைகள் கிடைக்கவில்லை. உணவகங்களிலும், கழிவறைகளிலுமா இந்த நிலை? என்று பயணிகள் புலம்பித் தீர்த்தனர்.

கழிவறைக் கட்டணங்களால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகள் சாலைகளிலேயே இயற்கை உபாதையைக் கழித்தனர். இதனால் போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்காக போடப்பட்ட தங்கநாற்கர சாலைகள் சிறுநீர் ஆறாய் காட்சியளித்தது.

÷விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அருகில் உள்ள ஓர் உணவகத்தில் குண்டர்கள் ஆங்காங்கே கையில் தடிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மிரட்டியது பயணிகளை மட்டும் அல்ல, பேருந்துகளை ஓரமாக நிறுத்தச்சொல்லி ஓட்டுநர்களையும் தான்.

சாலையோரம் இயற்கை உபாதையைக் கழிக்க முயன்றவர்களைத் தடிகளைக் காட்டி எச்சரித்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர். இதனால் அதிர்ந்துபோன பயணிகளுக்கு கொள்ளையர்களும், ரௌடிகளும் ஹோட்டல் வைத்துவிட்டார்களோ என்ற எண்ணமே தோன்றியது.

ஆனால் பேருந்து ஓட்டுநர்களோ, கூட்டமே இல்லாதே உணவகங்களையெல்லாம் விட்டுவிட்டு கூட்ட நெரிசல் மிக்க, குண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்தினர்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அங்கே அசைவ உணவுடன் பான்பராக், வெற்றிலை பாக்கு, பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகத் தரப்படுகின்றன; இதற்காக இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களே என்று பயணிகள் சிலர் கூறினர்.

குண்டர்களின் செயல்களால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் பேருந்தின் நடத்துநரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட உணவகங்களில் நிறுத்துமாறு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் தங்களுக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது உண்மையா? அல்லது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்துநர் விட்ட கதையா என்பதற்குப் போக்குவரத்துக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும்.

"குடி'மகன்களுக்காக மதுபானக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, குடிமக்களுக்காக உணவகங்களைத் திறக்கலாம். அல்லது இந்த உணவகங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமோ அல்லது மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பிலோ ஒப்படைக்கலாம். இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமே. கூடுதல் கட்டணத்தாலும், கூட்ட நெரிசலாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவையாவது சரியான விலையில் தரமானதாக வழங்கினால் ஆறுதலாக இருக்குமே.

அதுமுடியாத பட்சத்தில் ஏல முறையில் தனியாருக்கு உணவகங்களை ஒதுக்கலாம். அவர்களும் உணவுப்பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்தால், அதைத்தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு உணவுப்பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யலாம்.

அனைத்து உணவுப்பொருள்களுக்கும் குறிப்பிட்ட விலையை எழுதி பயணிகளின் பார்வையில் படும்படி உணவகங்களின் வாசலில் வைக்கலாம். உணவுப்பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து புகார் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களைத் தரலாம். ஆனாலும் உணவகங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை விட அரசே நடத்தினால், பொதுமக்களிடம் இருந்து தனியார் உணவகங்கள் கொள்ளையடிப்பது தடுக்கப்படும்.

ரயில்வே துறையைப்போல் போக்குவரத்துத் துறையும் உணவுப்பொருள்களை விற்பனை செய்ய தமிழக முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : ஏ.வி.பெருமாள்
நன்றி : தினமணி

போஸ்ட்ஆபீசில் பெறலாம் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியை

தமிழகத்தில் உள்ள போஸ்ட் ஆபீசில், ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியலின் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக தபால் துறையுடன் ஐ.சி.ஐ.சி.ஐ., புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல். இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர் அனுப் ராவ் கூறும்போது, இந்த ஒப்பந்தப்படி தமிழகத்தில் உள்ள 12,179 போஸ்ட் ஆபீஸ்களில் ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியில் சேரலாம். ஏற்கனவே பாலிசியில் சேர்ந்துள்ளவர்கள், இணைய தளம் மூலம் இணைக்கப்பட்டுள்ள 1,129 போஸ்ட் ஆபிஸ்களில் பிரீமியம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Thursday, January 21, 2010

கசக்கும் உண்மைகள்

வரப்போகும் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தயாரிக்கும் வேலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகத்துறையினர் ஆகியோருடனான ஆலோசனைகள் முடிந்துவிட்டன. ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட நிதித்துறை நிர்வாகிகளுடன் இப்போது ஆலோசனை நடந்து கொண்டி ருக்கிறது.

பணவீக்க விகிதமும் பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த இரண்டும்தான் முகர்ஜி இப்போது உடனே கவனித்தாக வேண்டிய முக்கிய பிரச்னைகள்.

பணவீக்க விகிதம் இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால் அது மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகளை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும். அரசியல் ரீதியாகவும் ஆளும் கூட்டணிக்குத் தேர்தலில் பெருத்த தோல்வியை வழங்கும். பட்ஜெட் பற்றாக்குறையை இப்படியே வளரவிட்டால் அது நிதி நெருக்கடியில் போய் முடியும். பணவீக்க விகிதம் என்பதை பாமர மக்கள் மொழியில் சொல்வதென்றால் விலைவாசி உயர்வுதான்.

விலைவாசி உயர்வு பற்றி ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு உள்ள கவலையும் மத்திய அரசுக்கு உள்ள கவலையும் ஒன்றல்ல. விலைவாசி உயர்வால் வாங்கும் சக்தி குறைகிறதே, சத்துள்ள காய்கறிகளையும் நல்ல உணவுப்பொருள்களையும் நிறைய வாங்க முடியவில்லையே, எவ்வளவு சம்பாதித்தாலும் சாப்பாட்டுக்கே போகிறதே என்பதுதான் ஏழை, நடுத்தர மக்களின் கவலை.

மத்திய அரசின் கவலை பொருளாதார ரீதியிலானது. பணவீக்க விகிதம் இப்படி அதிகரித்துக் கொண்டே போனால் பட்ஜெட் பற்றாக்குறை அளவு அதிகரித்துவிடுமே, வரிவிதிப்பையும் அதிகப்படுத்த முடியாதே, தொழில் - வர்த்தகத்துறைகளுக்குத் தரும் வரிச் சலுகைகளையும் இதர பணச் சலுகைகளையும் குறைக்க முடியாமல், பொருளாதார நிர்வாகம் ஆட்டம் கண்டுவிடுமே என்பதுதான்.

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் குறைவது குறித்து மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை என்று கூறிவிட முடியாது, அதே சமயம் அவர்களுடைய கவலை பட்ஜெட் பற்றாக்குறையும் இதர பொருளாதாரக் காரணிகளும்தான் என்பதை மறுக்க முடியாது. சில வேளைகளில் பணவீக்க விகிதம் அதிகரித்தால்தான் தொழில்துறையில் உற்பத்தியே சூடு பிடிக்கும் என்பதால் ஆட்சியாளர்கள் அதை வரவேற்பதும் உண்டு.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நம்முடைய நிதி அமைச்சர்கள் மக்களுடைய பிரச்னைகளை அவர்களுடைய கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கூறும் ஆலோசனைகளைக் கேட்பதையும், தொழிலதிபர்கள் - வியாபாரிகள் கேட்கும் சலுகைகளை வழங்குவதையுமே மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இதற்கு உதாரணம் தேடி எங்கும் அலைய வேண்டாம். நாடு முழுக்க உணவு தானியங்களையும் காய்கறி, பழங்களையும் சேமித்து வைக்க போதிய உலர் கிடங்குகளும் குளிர்பதனக் கிடங்குகளும் இல்லை என்று கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் உரத்துக் கூறி வருகின்றன. ஆனால் அந்தத் திசையில் ஒரு அடியைக்கூட மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்துவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைப்பது பற்றியது. நாடு முழுக்க உள்ள ஏழைகள், பழங்குடிகள், மலைவாசி மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் போன்றவற்றில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் கிடைப்பதற்காகப் பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிக்கு வருகிறவர்கள் ஆமோதிக்கிறார்கள், ஆனால் அதற்காக அலட்டிக் கொள்வதே இல்லை. விலைவாசி உயர்வு குறித்து வலியுறுத்திக் கேட்டால், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் கடமை என்று தட்டிக் கழிக்கிறார்கள்.

அத்தியாவசியப் பண்டங்களில் ஊக வியாபாரத்தையும், முன்பேர வர்த்தகத்தையும் அனுமதித்துவிட்டு விலைவாசியைக் குறைப்போம் என்று கூறுவது வெறும் உதட்டளவு உறுதிமொழியாகத்தானே இருக்கிறது? அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சிறு தானியங்கள், சர்க்கரை போன்றவற்றின் விலை பல மடங்கு அதிகரித்தாலும் சாகுபடியாளர்களான விவசாயிகளுக்குக் கிடைப்பதோ அதில் நாலில் ஒரு பகுதிதான். இடைத்தரகர்களும் ஊக வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும்தான் பெரும் பங்கை விழுங்குகிறார்கள். அவர்களுடைய செல்வாக்கு காரணமாகவே அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

கரும்பு சாகுபடி செய்தால் கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. கரும்பாலைகள் தொடங்கி அரசு அமைப்புகள் வரை அனைவராலும் அலைக்கழிக்கப்படுவதே மிச்சம் என்ற விரக்தி காரணமாகவே கரும்பு சாகுபடியே இனி வேண்டாம் என்று ஏராளமான மாநிலங்களில் விவசாயிகள் அதிலிருந்து விலகி வருகின்றனர். உள்நாட்டில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைவதற்கும் இதுவே காரணம்.

கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் அரசு, கரும்புச் சாகுபடியாளர்களுக்கோ, சர்க்கரை நுகர்வோருக்கோ ஆதரவாக வலுவான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதே உண்மை. பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த போதிய நிதி இல்லை என்ற பல்லவியையே மத்திய, மாநில அரசுகள் பாடிவருகின்றன. அதே வேளையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அந்த நிதியை பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன்படுத்தினால்தான் என்ன?

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைக்க உலர் கிடங்குகளையும் பழங்கள், காய்கறிகளைப் பதமாக வைத்திருக்க குளிர்பதனக் கிடங்குகளையும் அவரவர் தொகுதிகளில் இந்த நிதியைக் கொண்டு அமைத்துக் கொள்ளுங்கள் என்று 3 ஆண்டுகளுக்கு நிதியைத் திருப்பிவிட்டால் என்ன?

தனியார் சூப்பர் மார்க்கெட்டுகள் சங்கிலித் தொடராகக் கடைகளைத் திறப்பது சாத்தியம் என்றால் ஆயிரம் கரங்களைக் கொண்ட மத்திய, மாநில அரசுகளால் பொது விநியோகச் சங்கிலியை அமைக்க முடியாதா?

மக்களால் மக்களே மக்களை ஆளும் அரசாக இருந்தால் இது சாத்தியம்; ஊக வியாபாரிகளுக்காக ஊக வியாபாரிகளால் ஊக வியாபாரிகளே நடத்தும் அரசாக இருக்கும்போது அசாத்தியம்!
நன்றி : தினமணி

மும்பை பங்குச்சந்தையின் பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ‌அறிமுகம்

மும்பை பங்குச்சந்தையில், பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் விதமாக புதிதாக பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ஒன்று தொடங்கப் பட்டள்ளது. இதனை டில்லியில் மத்திய கனரக தொழில்-பொதுத்துறை அமைச்சர் விலாசராவ் தேஷ்முக் தொடங்கி வைத்தார். இந்த இணையத்தளத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீடு, பங்கு விலைகளில் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் குறித்து மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான மது கண்ணன் கூறும் போது, இலாபம் ஈட்டும் பல பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இல்லாமல் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வசம் உள்ளவற்றில் 49 விழுக்காடு அரசு அதன் வசம் வைத்துக் கொள்ளும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

மற்ற பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கூடிய விரைவில் நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ,சட்லஜ் ஜல் வித்யாத் நிகாம் லிமிடெட்,தேசிய அனல் மின் நிலையம், ரூரல் எலக்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Wednesday, January 20, 2010

கார்களை மிஞ்சுது சைக்கிள் விலை

பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி, மலை ஏற்றம் போன்றவற்றுக்கு பயன்படும் சைக்கிள்கள், 2.5 லட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது, சர்வதேச கண்ணோட்டத்தில் சைக்கிள்கள் வடிவமைக்கப்படுவதால் அவற்றின் விலை, 2.5 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டில்லியில் சமீபத்தில் பல்வேறு வாகனங்களின் கண்காட்சி நடந்தது. விதவிதமான கார்கள், டூவீலர்கள் இந்த கண்காட்சியை அலங்கரித்தன. தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற பாணியில் சைக்கிள் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை, இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தன. இந்த கண்காட்சியில் ஹீரோ, ஹெர்குலஸ், பி.எஸ்.ஏ., ரேலி, பியான்சி, அடிடாஸ், பயர்பாக்ஸ், ட்ரெக் உள்ளிட்ட சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன. பயர் பாக்ஸ் நிறுவன அதிகாரி அஜித் காந்தி குறிப்பிடுகையில், 'தற்போது சைக்கிள்கள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்துக்கும், சண்டை காட்சிகளில் பயன்படுத்தவும் வாங்கப்படுகிறது. சைக்கிள் பயணம் செய்வதற்கு மட்டுமே, என்ற நிலை மாறி விட்டது' என்றார். அடிடாஸ் நிறுவன மேலாளர் ரித்திஷ் அரோரா குறிப்பிடுகையில், 'ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் பல்வேறு வகையான சைக்கிள்களை தயாரித்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இடறாமல், தடுமாறாமல் செல்வதற்குரிய டயர்களை பயன்படுத்தி, ஏராளமான கியர்களை கொண்ட சைக்கிள்களை தயாரித்துள்ளோம். இவற்றின் விலை, ஆறாயிரம் முதல் இரண்டரை லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது' என்றார்.

நன்றி : தினமலர்


பெடரல் வங்கியை வாங்க ஐடிபிஐ முயற்சி

கேரளாவைச் சேர்ந்த தனியார் வங்கியான பெடரல் வங்கியை, அரசுத் துறை வங்கியான ஐடிபிஐ வாங்க உள்ளது. இதற்கான நடைமுறைகளை முழுமையாக முடித்துவிட்டதாக ஐடிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் கைமாறும் தொகை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இந்த இணைப்புக்குப் பிறகு, மற்ற அரசு வணிக வங்கிகளுக்கு இணையான கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாஸிட்டுகளை ஐடிபிஐ வங்கியும் பெற்று விடும்.

தென்னிந்தியாவின் பெரிய தனியார் வங்கியான பெடரல் வங்கிக்கு 641 கிளைகள் உள்ளன. ரூ 33439 கோடி டெபாஸிட்டுகள் கொண்ட இந்த வங்கியின் ஆண்டு வர்த்தகம் மட்டும் ரூ 59000 கோடி. சில ஆண்டுகளுக்கு முன் வெஸ்டர்ன் யூனியன் வங்கியை இதே போல கையகப்படுத்தியது ஐடிபிஐ. இப்போது பெடரல் வங்கி தவிர, சவுத் இந்தியன் வங்கி, கர்நாடக வங்கி போன்றவற்றை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. பெடரல் வங்கியை வாங்கும் ஐடிபிஐயின் முயற்சி பற்றி அதன் தலைவர் யோகேஷ் அகர்வால் வெளிப்படையாகப் பேசி வருகிறார். ஆனால் பெடரல் வங்கி நிர்வாக இயக்குநர் வேணுகோபாலோ மௌனம் சாதிக்கிறார்.

நன்றி : தினமலர்


Tuesday, January 19, 2010

மாருதி சுசூகியின் 'ஈக்கோ' குடும்ப கார்


இந்தியாவில் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி, ஆறு வண்ணங்களில் புதிய குடும்பக் காரான, 'ஈக்கோ'வை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகியின் ஈக்கோ, ஐந்து கதவுகளை கொண்ட, 'சி' பிரிவு கார். இந்தியாவிற்காக இக்காரை மாருதி நிறுவனம் மாறுபட்ட வடிவமைப்புடன் ஏழு சீட்டுகள் மற்றும் ஐந்து சீட்டுகள் கொண்ட ஈக்கோ குடும்பக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்டைலாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈக்கோவில் புதிய சக்தி வாய்ந்த நான்கு சிலிண்டர் 1,200 சி.சி., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 15.1 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்யலாம். மெட்டாலிக் கிஸ்டெனிங் கிரே, மெட்டாலிக் சில்கி சில்வர், மெட்டாலிக் மிட்னைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ பிளேஸ், பிரைட் ரெட் மற்றும் சூப்பிரியர் ஒயிட் என ஆறு வண்ணங்களில் இக்கார்கள் உள்ளன. ஈக்கோவில் முன், நடு மற்றும் பின்பக்க சீட்டுகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் பெரியதாகவும், வர்த்தகத்திற்கு ஏற்றதாகவும் இரட்டை நோக்கங்களை ஈக்கோ நிறைவேற்றுகிறது என்று மாருதி சுசூகி நிறுவன மண்டல மேலாளர் சந்தா, வர்த்தக மேலாளர் மனோகர் பட் ஆகியோர் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்