Thursday, August 6, 2009

விடுதலைப்புலிகள் தலைவர் செல்வராசா பத்மநாபன் கைது?

விடுதலைப்புலிகளின் புதிய தலைவரான செல்வராசா பத்மநாபன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு, இயக்கத்தின் புதிய தலைவராக பத்மநாபன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி : தினமலர்

யாருடைய தவறு?

15 ஆண்டுகள் பழமையான வர்த்தக வாகனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் மேற்குவங்க மாநில அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து கோல்கத்தா நகரில் அண்மையில் மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

புகையைக் கக்கும் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் இருக்கவே முடியாது. ஏனென்றால் வாகனப் புகையால் வெளிச்சூழலில் பரவுகிற துகள்கள் எண்ணிக்கையும், சுவாசிக்கும் காற்றின் மூலம் நுரையீரலுக்கு உள்ளே செல்லும் துகள்களின் எண்ணிக்கையும் 140 : 60 என்ற விகிதாசாரம்வரை இருக்கலாம். இதில் உள்ளே செல்லும் துகள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அந்தச் சூழலில் வாழ்வோருக்கு மார்பக நோய்கள், ஆஸ்த்மா ஆகியவை ஏற்படுகின்றன.

கோல்கத்தா நகரில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் ஏதோ ஒரு வகை நுரையீரல் நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையம் ஆய்வு நடத்தி அறிவித்திருக்கிறது. இந்த அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தடை மிகவும் நியாயமானது எனத் தோன்றும்.

ஆனால், இந்தச் சட்டம் எல்லா வாகனங்களுக்கும் பொருந்துமா என்பதும், வர்த்தக வாகனங்களுக்கும்கூட இதை இப்போதுள்ளபடியே அமல்படுத்துவது சரியா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் அனைத்தையும் தடை செய்ய மேற்குவங்க மாநில அரசு முடிவு செய்திருந்தாலும், நீதிமன்றம்தான் இதனை வர்த்தக வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று கூறியது. இதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது என்பது வேறு விஷயம்.

ஒரு வாகனத்தை வாங்குவோர் 15 ஆண்டுகளில் பயன்படுத்தித் தூக்கி எறிய வேண்டும் என்பது மேற்கத்திய கலாசாரம். இந்தியாவில் ஒரு வாகனத்தை வாங்குவது என்பது ஒரு குடும்பத்தின் கனவு. அதிலும் ஆட்டோ, சரக்கு லாரி போன்ற வர்த்தக வாகனம் என்பது குடும்பத்தின் முதலீடு. கடன்பட்டுத்தான் வாங்குகிறார்கள். அந்த வாகனத்தை குடும்பத்துக்கு சோறு போடும் வாகனமாக வணங்குவதுதான் இந்தியப் பண்பாடு. அவர்களால் ஒரே நாளில் தூக்கியெறிய முடியாது. ஒரு வாகனத்தை 15 ஆண்டுகளில் குப்பையில் வீசிவிட்டு வேறு வாகனம் வாங்குவதற்கான பொருளாதார சக்தி அனைத்து மக்களிடமும் இல்லை.

வர்த்தக வாகனங்கள் சரக்குப் போக்குவரத்து அல்லது மனித சவாரிகள் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வாகனம் வாங்குவதற்கான சேமிப்பாக ஒதுக்க வேண்டும் என்று சொல்லப்படும் வாதங்கள் எழுத்தில் படிக்க நன்றாக இருக்கும். வாழ்க்கையின் தேவையும் நடைமுறையும் வேறானவை.

15 ஆண்டுகள் பழமையான வாகனத்தை ஒழிக்க வேண்டும் என்ற முடிவை ஓர் அரசு எடுக்குமானால் அதற்கான மாற்று வழிகள் குறித்தும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் அதைச் செய்யும் நடைமுறைகளை யோசித்துவிட்டு இந்தப் பிரச்னையை கையில் எடுக்க வேண்டும்.

காப்பீட்டு நிறுவனங்களுடன் அரசு ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வாகனம் வழங்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டத்தையும் அதற்காக வாகன உரிமையாளர் செலுத்தும் பிரீமியத் தொகைக்கு ஒரு சமபங்கு தொகையை அரசும் செலுத்தும் திட்டத்தை முன்னதாகவே ஏற்படுத்தி, இத்தகைய பழைய வாகனங்களை மெல்ல ஒழிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.

அல்லது, இத்தகைய புகை கக்கும் பழைய வாகனங்களை எடுத்துக் கொண்டு சலுகை விலையில் புதிய வாகனம் அளிக்கும்படி, ஆட்டோ, கார், சரக்கு வாகன உற்பத்தியாளர்களை அரசு நிர்பந்திக்குமானால், அல்லது அதற்கான மானியத் தொகை அளிக்க முன்வருமானால், இப்பிரச்னை சிக்கலின்றி அமலாகும்.

அதைவிடுத்து, கடன்பட்டு வாங்கிய சரக்கு வாகனங்களையும் ஆட்டோக்களையும், இன்னமும் முதலீட்டைக்கூட கண்ணில் காணாத நிலையில், திடீரென தூக்கியெறி என்றால் எப்படி சாத்தியமாகும்? புதிய வாகனம் வாங்கும் சக்தி இல்லை என்பது ஒருபுறம், வாங்கிய வாகனத்தின் கடனே அடைபடவில்லை என்பது மறுபுறம்.

அதிக புகை கக்கும் வாகனங்களைக் கண்டுபிடித்து, அவற்றை எரிவாயுவில் இயங்கச் செய்யும் சலுகை அல்லது மானியத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தலாம். இவர்கள் வாழ்வாதாரம் சீர்குலையாமல் மெல்ல புதிய மாற்றத்துக்கு வித்திடலாம்.

அதேபோன்று, வர்த்தகப் பயன்பாட்டுக்கு அல்லாத தனிநபர் வாகனங்கள், புகை கக்கும் பிரச்னை இல்லாத வரையில் அதை பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில், வர்த்தக வாகனங்களைவிட தனிநபர் வாகனங்கள் ஓராண்டுக்கு ஓடும் தூரம் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தகைய மாசு ஏற்படும், எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணராமலேயே லட்சக் கணக்கான வாகன உற்பத்தியை அனுமதித்து வாகன உரிமங்கள் வழங்கிய அரசின் தவறுக்கு மக்களைத் தண்டிப்பதா?

தற்போது கோல்கத்தாவில் நடைபெறும் பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்கள் சென்னை மாநகருக்கும் பொருந்தும். இதே நெருக்கடி தமிழக அரசுக்கும் நேரிடும். இப்போதே தமிழக அரசு ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம்.
நன்றி : தினமணி

அம்பானி சகோதரர்களிடையே என்ன சண்டை ?

உலகின் மிகப்பெரிய பணக்கார சகோதரர்கள் என்று முகேஷ் அம்பானியையும் அவர் சகோதரர் அனில் அம்பானியையும் தான் சொல்கிறார்கள். சொத்து குறித்து அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் அவர்கள் இருவரும் இப்போது மீண்டும் சண்டை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த தடவை அது, எரிவாயுவை எப்படி பிரித்துக்கொள்வது என்பதில் நடக்கிறது. ஆந்திராவில் இருக்கும் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயு இருக்கிறது என்பதை 2002ல் கண்டுபிடித்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், அதனை எடுத்து விற்பனை செய்ய உரிமையை பெற்று, 2009 ஏப்ரலில் இருந்து எரிவாயுவை எடுத்து வருகிறது.
ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 10 எம்எம்எஸ்சிஎம் ( மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் ) எரிவாயு அங்கு கிடைக்கும் என்றும், பின்னர் அது 40 எம்எம்எஸ்சிஎம் எரிவாயுவாக உயரும் என்றும், பின்னர் அது அதிகபட்சமாக 120 எம்எம்எஸ்சிஎம் எரிவாயுவாக அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது இதில் பிரச்னை என்னவென்றால் 2005ல் அம்பானி சகோததர்கள் சொத்துக்களை பிரித்துக்கொண்டார்கள். அதில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் முகேஷ் அம்பானிக்கு சொந்தமாகி விட்டது.
ஆனால் சொத்தை பிரிக்கும் போது, கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கேஜி - டி6 பேசின் ) கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எப்படி பிரித்துக்கொள்வது என்றும் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன்படி, அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நேச்சரல் ரிசோர்சஸ் லிமிடெட்டுக்கு ( ஆர்என்ஆர்எல் ), ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்றும், அதை ஒரு மில்லியன் கியூபிக் மீட்டருக்கு 2.34 டாலர் என்ற விலையில் 17 வருடங்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஆகி இருந்தது. ஆனால் மத்திய அரசோ, கேஜி டி 6 பேசினில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை யாருக்கு விற்றாலும் அதற்கு விலை, ஒரு மில்லியன் கியூபிக் மீட்டருக்கு 4.20 டாலர் தான் என்று 2006 ல் நிர்ணயம் செய்தது.
இதனை ஏற்றுக்கொள்ளாத அனில் அம்பானி, எங்களது குடும்பத்தில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, எங்களுக்கு 2.34 டாலர் விலையில்தான் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்கிறார். மேலும் இது சம்பந்தமாக அவர் மும்பை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து, குடும்ப ஒப்பந்தத்தின்படியே ஒரு மில்லியன் கியூபிக் மீட்டருக்கு 2.34 டாலர் என்ற விலையிலேயே 17 வருடங்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவையும் பெற்று விட்டார்.
மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து முகேஷ் அம்பானி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறார். அங்கு வழக்கு விசாரணை செப்டம்பர் ஒன்றாம் தேதி துவங்க இருக்கிறது. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் இது குறித்து ஒரு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கு அடியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு மத்திய அரசுக்கு தான் சொந்தம். இதற்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையும் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது. இரண்டு தனி நபர்களோ, அல்லது இரண்டு தனியார் நிறுவனங்களோ இதற்கு உரிமை கொண்டாட முடியாது என்று சொல்லியிருக்கிறது. இதனையடுத்து பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அனில் அம்பானி குற்றம் சாட்டினார்.
கிருஷ்ணா கோதாவதி ஆற்று படுகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் ( ஆர் ஐ எல் ), அரசு நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சரல் கேஸ் கார்பரேஷன் ( ஓ என் ஜி சி ), குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்பரேஷன் ( ஜி எஸ் பி சி ) ஆகிய மூன்று நிறுவனங்களும் மொத்தமாக 30 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ. 1,44,000 கோடி ) முதலீடு செய்து தனித்தனியாக மூன்று இடங்களில் எரிவாயு மற்றும் சில இடங்களில் எண்ணெய் எடுக்கும் நிலையங்களை அமைத்திருக்கின்றன. ஆர் ஐ எல் நிறுவனம் அங்கு 12 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.57,600 கோடி ) முதலீடு செய்து எரிவாயுவை எடுத்து, இந்தியா முழுவதிற்கும் சப்ளை செய்ய திட்டமிட்டிருக்கிறது. ஓ என் ஜி சி நிறுவனம் அங்கு 3 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.14,400 கோடி ) அங்கு முதலீடு செய்கிறது. கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையில் நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை ( 2013 வாக்கில் ) எடுக்க முடியும் என்று சொல்லப் படுகிறது.
முழு அளவில் அங்கு எரிவாயு எடுக்க ஆரம்பித்து விட்டால், இப்போது இந்தியா எரிவாயுக்காக கொடுத்து வரும் தொகையில் 30 சதவீதம் வரை குறைந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகளில் அதிகம் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இப்போது எண்ணெய் இறக்குமதிக்காக வருடத்திற்கு சுமார் 80 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.3,84,000 கோடி ) செலவு செய்து வருகிறது. அதிலிருந்து சுமார் 20 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.96,000 கோடி ) மிச்சப்படுத்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, August 5, 2009

ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.,களை நிறுவ ரூ.40 கோடிக்கு ஆர்டர் பெற்றது ஹெச்.சி.எல்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க்கின் ஏ.டி.எம்., களை நிறுவ, அந்த வங்கியிடமிருந்து ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஹெச்.சி.எல்., நிறுவனம் ஆர்டர் பெற்றிருக்கிறது. ஏ.டி.எம்.,களை நிறுவுவது, பராமரிப்பது மற்றும் சர்வீஸ் செய்வது போன்ற வேலைகளை ஹெச்.சி.எல்.நிறுவனம் செய்யும். நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்.,களை ஹெச்.சி.எல்., நிறுவும். ஆனால் அந்த ஏ.டி.எம்.,கள் வழக்கமான ஏ.டி.எம்.,களை விட மாறுபட்டு இருக்கும். அந்த புது ஏ.டி.எம்.,களில் கண் தெரியாதவர்கள் பிரைல் மொழியில் ஆப்பரேட் செய்யவும் பல மொழிகளில் தகவல்களை பெறவும் வசதிகளை கொண்டதாக இருக்கும் என்று ஹெச்.சி.எல் தெரிவித்திருக்கிறது. ஏ.டி.எம்.,களை நிறுவுவதில் உலக அளவில் றபுகழ்பெற்ற கொரிய நிறுவனமான நாடிலஸ் ஹோசுங்குடன் இணைந்து ஹெச்.சி.எல்., இந்த ஏ.டி.எம்.,களை நிறுவ இருக்கிறது.
நன்றி : தினமலர்


ஆன்-லைனில் சம்பாதிக்க நம்பிக்கையான தளம்

திறமையுள்ளவர்களையும், ஏமாற்றாதவர்களையும் தேடும் நிறுவனங்களையும் இணைக்கும் விதமாக, புதிய வெப்சைட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சாப்ட்வேர், நிர்வாகத் திறமை உள்ளவர்களும், சிறிய, நடுத்தர நிறுவனங்களும், ஆன்-லைனிலேயே அனைத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள உதவும்
வகையில், தமிழ் இளைஞர்கள் குழு, http://www.8kmiles.com/ என்ற இணைய தளத்தை உருவாக்கி வழங்கியுள்ளது.
நிர்வாக திட்டம் மற்றும் நிறுவனத் தேவைக்கான உயர்நிலை சாப்ட்வேர் தொகுப்புகளை, தேவைப்படும் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில், இத்தளத்திலிருந்து ஆன்-லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். விண்டோஸ் மற்றும் லினக்ஸ் அடிப்படையில் அனைத்து அப்ளிகேஷன்களும் தரப்படுகின்றன. சாப்ட்வேர் அப்ளிகேஷன் உருவாக்குதல், கட்டடக் கலை பொறியியல், மல்டிமீடியா புரோகிராம் தயாரித்தல், ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ காட்சிகள் எடிட் செய்தல். வர்த்தக நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்குதல் உட்பட பல பிரிவுகளில் திறமை உள்ளவர்கள், கல்வித் தகுதி, நிறுவனப் பிரிவு ஆகியவற்றுடன், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இதில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து, பதிவு செய்து கொள்ளலாம். இவை பரிசீலிக்கப்பட்டு, இவர்களின் தகுதிகள் வெளியிடப்படும். நிறுவனங்கள், வல்லுனர்கள் மட்டுமின்றி, புராஜக்ட் மேனேஜர்களும், இந்த இணைய தளம் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்கு, தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். மேலும், பதியும் வல்லுனர், நிறுவனங்களுக்கு இமெயில் பரிமாற்றம், சாட் போர்டு, வீடியோ கான்பரன்சிங் வசதியை, இலவசமாக இந்த தளம் வழங்குகிறது.
நன்றி : தினமலர்


Tuesday, August 4, 2009

துறைமுக முன்னாள் தலைவர் வீட்டில் கிலோகணக்கில் தங்கம் : சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது

சென்னை துறைமுக பொறுப்புக்கழக முன்னாள் தலைவர் சுரேஷ். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீது புகார் எழுந்ததையடுத்து. அவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை முதல் நடந்து வரும் இந்த விசாரணைக்கு சுரேஷ் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்து 3 கிலோ தங்கம், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட ரூ.2 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கைப்பற்றி, அதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : தினமலர்

அணுகுமுறை சரியில்லை...!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறே செய்ய முடியாது, அந்த அளவுக்கு நிலையான, மாற்றமுடியாத மென்பொருள்கள் இந்த இயந்திரத் தயாரிப்பின்போதே உள்ளுக்குள் அமைக்கப்படுகின்றன என்று சொல்லி, "தில்லுமுல்லு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்று தேர்தல் ஆணையம் சவாலுக்கு அழைத்துள்ள வேளையில், ஒரிசா மாநிலத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு அதை நிரூபித்தே காட்டிவிட்டது.

புவனேஸ்வரத்தைச் சேர்ந்த ஜன சைத்திரிய வேதிகா என்ற அமைப்பினர் இதைச் செய்து காட்டியுள்ளனர். முன்னாள் நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் குறிப்பிடுவதைப் போல, இந்த மென்பொருள்கள் மாற்றவியலாத தன்மையுடன் தயாரிப்பிலேயே உள்ளுக்குள் பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான். அடிப்படையான மென்பொருள் மாற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவோர் எண்ணிக்கை மாறுகிறது. அவர்களுக்கான சின்னங்கள் தனித்தனியாக உள்ளன. சின்னங்களுக்கான தகவல் இணைப்பை மென்பொருளுடன் சேர்க்கும் பணி மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பில்தான் நடைபெறுகிறது.

பதிவு செய்யும் பொத்தானுக்கு அருகில் ஒரு கட்சியின் சின்னம் வெளிப்பார்வைக்கு பதிவு இயந்திரத்தில் தெரிந்தாலும், அதை அழுத்தினால் வேறு சின்னத்துக்கு வாக்குப் போய்ச் சேரும்படியாக இணைப்பை மாற்றித் தருவதற்கோ, அல்லது இரண்டாவது அணியின் சின்னத்தில் விழும் வாக்குகள் மூன்றாவது அணிக்கும், மூன்றாவது அணி சின்னத்தின் வாக்குகள் இரண்டாவது அணிக்கும் விழும்படியாக மாற்றி அமைக்கவோ அதிகாரிகள் நினைத்தால் முடியாதா என்பதே சில அரசியல் கட்சிகள் கேட்கும் அடிப்படையான கேள்வி.

நியாயமாக, இத்தகைய செயல்விளக்கத்தை அரசியல் கட்சிகள்தான் செய்துகாட்டியிருக்க வேண்டும். தோல்வியால் முகம் சுணங்கிப் போகிற அவர்கள்தான் இதில் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டியிருக்க வேண்டும். ஆனால் தன்னார்வ அமைப்பு இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் நிலையில் அரசியல் சூழல் உள்ளது.

வாக்குப் பதிவுக்கு வந்து இறங்குவது முதலாக வாக்குப்பதிவு நடந்து இயந்திரங்கள் மீண்டும் பொது இடத்தில் சேகரிக்கப்படுவது வரையிலும் எந்தெந்த நிலைகளில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை செயல்விளக்கம் செய்து காட்டும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அப்போதுதான் அந்தத் தவறுகள் நேராதபடி மாற்று நடைமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க முடியும்.

பாஜக தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் ஓர் ஆக்கபூர்வமான யோசனையை முன்வைத்திருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வாக்காளர் தான் தேர்வு செய்யும் சின்னத்திற்கான பொத்தானை அழுத்தியதும் வாக்குப்பதிவு நடப்பதோடு, அச் சின்னம் பொறித்த சீட்டும் (பிரின்ட்-அவுட்) அச்சாகி வெளிவரும் வசதி இருந்தால், அந்தத் துண்டுச்சீட்டை பார்த்தவுடன் தனது சின்னத்துக்குத்தான் வாக்கு அளித்தோம் என்ற மனநிறைவை வாக்காளர் பெற முடியும். அதேநேரத்தில், அந்த துண்டுச்சீட்டை வாக்குப்பெட்டியில் போடச் செய்தால், இயந்திரக்கோளாறு அல்லது தில்லுமுல்லு புகார்கள் வரும்போது அந்தச் சீட்டுகளையும் எண்ணிப் பார்த்து வாக்குச்சாவடி வாரியாக, கணினி மற்றும் சீட்டு எண்ணிக்கையைச் சரிபார்க்க முடியும். சாதாரண மளிகைக் கடை ரசீது போல, பேருந்து நடத்துநர் தரும் டிக்கெட் போல மிக எளிய, அதிக செலவில்லாத தொழில்நுட்பம்.

தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்தான் மாவட்டத் தேர்தல் அலுவலராகவும் இருக்கிறார். பொதுத்தேர்தலின்போது தேர்தல் பார்வையாளர்களை பிற மாநிலங்களிலிருந்து வரவழைப்பதைப் போல, மாவட்டத் தேர்தல் அலுவலர்களாகப் பிற மாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் புதிய மாற்றத்தையும் அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும். கடைசி ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்தால், வாக்குப் பதிவு முடியும் வரை காத்திருக்காமல், 5 மணி வரை வாக்குச் சாவடிக்குள் வந்துள்ளவர்களின் எண்ணிக்கையை மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் தெரிவித்துவிட்டு, வாக்குப்பதிவை நிதானமாகச் செய்துகொள்ளும் திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.

குறைகள் சொல்லப்படும்போது அதற்கான வாய்ப்புகளை அலசிப் பார்ப்பதும், பல்துறை வல்லுநர்களின கருத்துகளை அறிவதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும். மாறாக, நிரூபித்துக் காட்டுங்கள் என்று சவால் விடுவது முறையான அணுகுமுறை அல்ல.
நன்றி : தினமணி