Tuesday, April 14, 2009

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி நூறு கோடி டாலரை தாண்டியது

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில் நூறு கோடி டாலரை தாண்டியிருக்கிறது. டிசம்பர் மாதத்தில் 1.01 பில்லியன் டாலர் ( சுமார் 4,950 கோடி ரூபாய் ) மதிப்புள்ள மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்த அளவுக்கு மருந்து ஏற்றுமதி ஆகி இருப்பது டிசம்பர் மாதத்தில் தான். இதுவே, 2007 டிசம்பரில் 60.9 லட்சம் டாலருக்கு தான் நடந்திருந்தது. அதிலிருந்து 46.3 சதவீதம் உயர்ந்து இப்போது அது 101 கோடி டாலருக்கு நடந்திருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரித்து 8.44 பில்லியன் டாலருக்கு நடந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வருடத்தில் 6.97 பில்லியன் டாலருக்கு தான் நடந்திருந்தது. பார்மாசூடக்கல்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி : தினமலர்



Monday, April 13, 2009

திவால் நோட்டீஸ் கொடுக்கும் வேலையை பாருங்கள் : ஜெனரல் மோட்டார்ஸூக்கு அமெரிக்க அரசு ஆலோசனை

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் உலகின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெனரல் மோட்டார்ஸ், வரும் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் திவால் நோட்டீஸ் கொடுப்பதற்கான வேலையை இப்போதே பார்ப்பது நல்லது என்று அமெரிக்க அரசின் நிதித்துறை ஆலோசனை தெரிவித்திருப்பதாக தெரிகிறது. பொருளாதார சரிவால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸூக்கு ஏற்கனவே அமெரிக்க அரசு 13.4 பில்லியன் டாலர்கள் நிதி உதவி செய்திருக்கிறது. அந்த உதவியை செய்யும் போதே அது, ஜெனரல் மோட்டார்ஸ் அதன் நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தது. அப்போது தான் அதன் விற்பனை மற்றும் மதிப்பு நிரந்தரமாக பாதிக்கப்படாமல் இருக்கும் என்றது. ஆனால் அரசு சொல்லிய மாற்றங்களை இன்னும் ஜெனரல் மோட்டார்ஸ் செய்யாமல் இருக்கிறது. மேலும் அதற்கு இன்னும் நிறைய பண உதவி தேவைப்படுகிறது. அதை அமெரிக்க அரசு கொடுக்க தயாராக இல்லை. வேறு வழிகளில் தேவையான பணத்தை தயார் செய்ய முடியாமல் போனால் அது திவால் நோட்டீஸ் கொடுப்பதே நல்லது என்று அமெரிக்க அரசின் நிதித்துறை தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


ஏறியது பங்கு சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பேங்கிங், மெட்டல், ரியல் எஸ்டேட், ஆட்டோ, ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் இன்று பெருமளவில் வாங்கப்பட்டதால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன. இன்று வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 11,000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,400 புள்ளிகளுக்கு மேலும் சென்றது. காலை வர்த்தகம் ஆரம்பித்து மதியம் ஆகியும் சந்தை அவ்வளவாக உயராமலும் குறையாமலும்தான் இருந்தது. பின்னர்தான் வேகமாக உயர துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 163.36 புள்ளிகள் ( 1.51 சதவீதம் ) உயர்ந்து 10,967.22 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 40.55 புள்ளிகள் ( 1.21 சதவீதம் ) உயர்ந்து 3,382.60 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. சத்யத்தின் பங்குகள், பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் டெக் மகேந்திராவுக்கு விற்கப்படுவ தால், சத்யத்தின் பங்கு மதிப்பு இன்று 3.61 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதன் பங்குகள் இன்று 239.40 சதவீதம் கூடுதலாக கைமாறி இருக்கிறது.
நன்றி : தினமலர்


இன்னும் 3 முதல் 5 வருடங்களில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் : மாருதி சுசுகி திட்டம்

விற்பனையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் கம்பெனியாக இருக்கும் மாருதி சுசுகி, இன்னும் 3 முதல் 5 வருடங்களில் எலக்ட்ரிக் மற்றும் எல்.பி.ஜி. கார்களை தயாரித்து வெளியிட முடிவு செய்திருக்கிறது. இவ்வகை கார்களில் மூன்று முதல் நான்கு மாடல்களை தயாரித்து இந்திய சந்தையில் விற்பனைக்கு விட அது முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் சிறிய கார் சந்தையில், பெட்ரோல் டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருளை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த அது திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து மாருதி சுசுகியின் மேலாண் இயக்குனர் ஷின்சோ நாகானிஷி தெரிவிக்கையில், நாங்கள் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு விட திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு ஐந்து அல்லது அதற்கு மேல் வருடங்கள் ஆகலாம் என்றார். இது குறித்து மாருதி சுசுகியின் சேர்மன் பார்கவா தெரிவிக்கையில், நாங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இப்போது ஒரு காரை எல்.பி.ஜி. காராக மாற்ற வேண்டுமானால் அதற்கான சாதனங்களின் விலை ரூ.40 ஆயிரமாக இருக்கிறது. அது கொஞ்சம் விலை உயர்வுதான். எனவேதான் நாங்கள் அவ்வகை கார்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறோம். ஆனால் அது 2010 அல்லது 2011 ல் தான் வெளிவரும் என்றார்.
நன்றி : தினமலர்


டெக் மகேந்திராவின் கைக்கு செல்கிறது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் வாங்கிக்கொள்வதாக டெக் மகேந்திரா தெரிவித்திருந்ததால், அவர்களிடம் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகள் விற்கப்படுகிறது. பங்கு ஒன்றை ரூ.49.50 என்ற விலையில் வாங்கிக்கொள்வதாக லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் தெரிவித்திருந்ததால் அவர்களுக்கு சத்யம் கிடைக்காமல் போய் விட்டது. சத்யத்தை வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்கள், என்ன விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை இன்று ( 13.04.09 ) காலை 9 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சத்யம் கம்ப்யூட்டர்ஸின் போர்டு தெரிவித்திருந்தது. வாங்க விருப்பம் தெரிவித்தவர்கள் எல்லோரும் இரண்டு கவர்களை கொடுத்திருந்தனர். ஒன்றில் அவர்களது டெக்னிக்கல் விபரங்கள் இருந்தது. இன்னொன்றில் நிதிநிலை குறித்த விபரம் இருந்தது. டெக்னிக்கல் விபரங்களில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஒருவரது நிதி நிலவரம் குறித்த விபரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், ஒரே மாதிரியான விலையை குறிப்பிட்டு, ஒரே வரிசையில் இருந்தால், அவர்களில் ஒருவர் ஓப்பன் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் இருந்தது. ஆனால் இப்போது அதற்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. மகேந்தியா அண்ட் மகேந்திராவின் கம்ப்யூட்டர் பிரிவு நிறுவனமான டெக் மகேந்திரா தான் அதிக விலைக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்திருப்பதால், அவர்களுக்கே சத்யத்தில் 51 சதவீத பங்குகளை விற்க அதன் போர்டு முடிவு செய்திருக்கிறது. எனினும் அதன் இறுதி முடிவு கம்பெனி லா போர்டு கையில் தான் இருக்கிறது. இது குறித்து கம்பெனி லா போர்டு தெரிவிக்கையில், சத்யத்தின் 31 சதவீத பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் வாங்கிக்கொள்ள முன்வந்திருக்கும் டெக் மகேந்திரா, ஒரு விண்ணப்பத்தை வரும் வியாழக்கிழமைக்குள் எங்களிடம் அளிக்க வேண்டும் என்றும், அதற்கு 24 மணி நேரத்திற்குள் பதில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. சத்யத்தை வாங்க எல் எண்ட் டி, டெக் மகேந்திரா, காஹ்னிசென்ட்,மற்றும் வில்பர் ரோஸ் நிறுவனங்கள் போட்டியிட்டன.
நன்றி : தினமலர்


Sunday, April 12, 2009

10 நாளில் தங்கம் சவரனுக்கு 700 ரூபாய் குறைவு: அட்சய திருதியை நெருங்குவதால் விலை எகிறும்?

ஏறுமுகமாகவே இருந்த தங்கத்தின் விலை, 10 நாட்களில் சவரனுக்கு 650 முதல் 700 ரூபாய் வரை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தங்கத்தை சாமானிய மக்களால் எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு, ஓராண்டாகவே விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. அதிகபட்சமாக ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 1,435 ரூபாய் வரை தொட்டது. சவரன் 11 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்றது.கடந்த ஜனவரி 10ம் தேதி 1,312 ரூபாய்க்கும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்றது. பிப்ரவரி 10ம் தேதி ஒரு கிராம் 1,316 ரூபாய்க்கும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்றது. மார்ச் 10ம் தேதி 1,421 ரூபாய்க்கும், ஒரு சவரன் 11 ஆயிரத்து 368 ரூபாய்க்கும் விற்றது.ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே சீராக இல்லாமல், ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரு கிராம் 1,344 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 752 ரூபாய்க்கும் விற்றது.கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஆபரணத் தங்கம் கிராம் 1,418 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்றது. இது படிப்படியாகக் குறைந்து 10 நாட்களில் சவரனுக்கு 650 முதல் 700 ரூபாய் வரை குறைந்துள்ளதாக பாரிமுனை தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.அட்சய திருதியை நெருங்கும் சமயத்தில் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துவிடும் என வியாபாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து சென்னை தங்க நகை மொத்த வியாபாரி சங்கத் துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், ''சமீபத்தில் லண்டனில் நடந்த 'ஜி-20' மாநாட்டில், நிலையில்லாமல் இருந்த பங்கு வர்த்தகத்தை நிலை நிறுத்துவது, கச்சா எண்ணெய் விலையேற்றம் சீராக வைத்திருப்பது உள்ளிட் டவை விவாதிக்கப்பட்டன.''அதேபோல், உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் (ஐ.எம்.எப்.,) திட்டத்தில், 400 டன் தங்கத்தை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அளிப்பதாக முடிவு செய்யப் பட்டது. ''இதனால், தற்போது பங்கு வர்த்தகம் நிலையாக இருக்கிறது. இதன் காரணமாகவும் சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அட்சய திருதியை நெருங்குவதால் தங்கத்தின் விலை ஒரே சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
நன்றி : தினமலர்


பந்தய குதிரை போல் பாய்கிறது பங்குச்சந்தை

கடந்த மூன்று வாரங்களாக வெள்ளியன்று பங்குச்சந்தை விடுமுறை காரணமாக வர்த்தகம் நடப்பதில்லை. வியாழன் மட்டுமே வர்த்தகம் நடக்கிறது. இந்த வாரமும் அப்படித் தான் இருந்தது.சமீபகாலமாக ஏறிக்கொண்டே செல்லும் பங்குச்சந்தைக்கு வியாழன் மட்டும் விதிவிலக்கா என்ன? வியாழனன்று வெளியான பிப்ரவரி மாத தொழில் துறை உற்பத்தி புள்ளிவிவரம் ஜனவரியை விட குறைவாக இருந்தும், சந்தை மேலே சென்றது, ஏன்? இது போல குறையும் என்றும் முன்னமேயே எதிர்பார்த்திருந்ததால் சந்தையில் அதிகம் மாற்றங்கள் இல்லை.இருந்தாலும், காலையில் 182 புள்ளிகள் வரை மேலே சென்ற சந்தை, பின் அவ்வளவு லாபத்தையும் இழந்து ஒரு கட்டத்தில் 95 புள்ளிகள் வரை கீழேயும் சென்றது.பின் சுதாரித்து 62 புள்ளிகள் கூடி முடிவடைந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 171 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை வாங்கின.பணவீக்கம் இந்த வாரம் 0.26 சதவீதமாகக் குறைந்தது. அதனால், வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி இன்னும் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் வங்கிப் பங்குகள் மேலே சென்றன. கடந்த பல வாரங்களாகவே டிபாசிட்களின் வட்டி விகிதங்கள் குறையும் என்று கூறி வந்தோம்.அது போலவே தற்போது ஸ்டேட் பாங்க் தனது வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் அளவு குறைத்துள்ளது. சத்யம் கம்பெனியின் நஷ்டம் கணக்கெடுத்துப் பார்த்ததில் 6,000 கோடி ரூபாய் அளவு இருக்கும் என தீர்மானித்திருக்கின்றனர்.இதில், அதிகம் லாபமடைந்தது ராஜு குடும்பத்தினர் (2,580 கோடி). அதிகம் நஷ்டமடைந்தது யார் தெரியுமா? எல்.ஐ.சி., (950 கோடி). தற்போது சத்யத்தை வாங்க காக்னிசன்ட் கம்பெனியும் போட்டியில் இருக்கிறது. அடுத்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்.வார இறுதியில் மும்பை பங்குச்சந்தை 62 புள்ளிகள் குறைந்து, 10 ஆயிரத்து 804 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், 3,342 புள்ளிகளில் முடிவடைந்தது.முதலீட்டாளர்களின் ஒரு மாத லாபம்சந்தை முன்னேறிச் செல்லும் வேகத்தில் முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் அடைந்த லாபம் மட்டும் ஏழு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். கம்பெனிகள் படி பார்த்தால் ரிலையன்ஸ் மற்றும் ஓ.என்.சி.ஜி., ஆகியவை அதிகம் முன்னேறியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் தற்போதைய குறியீடான 10804, கடந்த ஆறு மாத காலத்தில் அதிகபட்சம்.இது காலாண்டு முடிவுகளின் சீசன். பெரிய கம்பெனிகள் என்று பார்க்கப் போனால், என்.டி.பி.சி.,யின் முடிவுகள் வந்துள்ளன. சென்ற ஆண்டு லாபத்தை விட 5.56 சதவீதம் கூடி, 7,827 கோடி ரூபாய் லாபம் இந்த ஆண்டில் சம்பாதித்துள்ளது.சந்தை 10 ஆயிரத்தையும் தாண்டி பந்தயக் குதிரை போலத் தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், காலாண்டு முடிவுகள் சந்தையை கீழே தள்ளிவிடாமல் இருக்க வேண்டும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்