Thursday, December 18, 2008

சரிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தில் மெட்டல், டெலிகாம்,பவர், கேப்பிடல் குட்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதாலும், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் வேகமாக குறைந்து போனதாலும் சென்செக்ஸ் சரிந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்திருந்தாலும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கி விட்டது. ஐரோப்பிய, அமெரிக்க பங்கு சந்தைகளின் வீழ்ச்சிதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சென்செக்ஸ் 9,682.91 புள்ளிகள் வரை இறங்கி வந்தாலும் வர்த்தக முடிவில் 261.69 புள்ளிகள் ( 2.62 சதவீதம் ) குறைந்து 9,715.29 புள்ளிகளில் முடிந்திருந்தது. நிப்டி 2,943.50 புள்ளிகள் வரை இறங்கி இருந்தாலும் வர்த்தக முடிவில் 87.40 புள்ளிகள் ( 2.87 சதவீதம் ) குறைந்து 2,954.35 புள்ளிகளில் முடிந்திருந்தது.தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக அசையாமல் இருந்த மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் இன்று ஆட்டம் க்ண்டு விட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், சத்யம், பெல், எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃரா ஆகிய நிறுவனங்கள் அதிகம் பாதிப்படைந்திருந்தன. இன்று அதிகம் பாதிக்கப்பட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான். 30.22 சதவீத மதிப்பை அது இழந்திருந்தது. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி.,ஹெச்.யு.எல், ஹெச்.டி.எப்.சி.பேங்க், கிராசிம், விப்ரோ பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் : சர்வே

இந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.49 சதவீதமாகத்தான் இருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 10 சதவீதமும் டீசலின் விலையை 6 சதவீதமும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் என்று 11 பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு சதவீதம் பணவீக்கம் குறைந்திருக்கும் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும், 1.5 சதவீதம் முதல் 2.0 சதவீதம் குறைந்திருக்கும் என்று ஆக்ஸிஸ் வங்கியின் பொருளாதார நிபுணர் சவ்கதா பட்டாச்சார்யா சொல்கிறார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட ஜூன் ஆரம்பத்தில் இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. பின்னர் அது அதிகபட்சமாக ஆகஸ்ட் 2 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


மேடாஸ் நிறுவனங்களை வாங்கிக்கொள்வதை கைவிட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

மேடாஸ் இன்ஃரா மற்றும் மேடாஸ் புராபர்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்ளும் திட்டத்தில் இருந்து சத்யம் கம்ப்யூட்ர்ஸ் விலகிக்கொண்டது. முதலீட்டாளர்களின் கடும் எதிர்ப்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேடாஸ் புராபர்டீஸ் நிறுவனத்தையும் மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளையும் 1.6 பில்லியன் டாலருக்கு ( சுமார் 8,235 கோடி ரூபாய் ) வாங்கிக்கொள்வதாக சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் அறிவித்த 12 மணி நேரத்திற்குள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்ததும், அதன் பங்குதாரர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு ஐ.டி.கம்பெனி, கட்டுமான நிறுவனமான மேடாஸை வாங்குவதில் முதலீட்டாளர்களுக்கு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நியுயார்க் பங்கு சந்தையில் அதன் பங்கு மதிப்பு 55 சதவீதம் வரை குறைந்து விட்டது. செவ்வாய்க்கியமை அன்று இந்திய பங்கு சந்தை முடிவடைந்ததும், நலிவடைந்திருக்கும் மேடாஸ் புராபர்டீஸின் எல்லா பங்குகளையும் 1.3 பில்லியன் டாலருக்கும், மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளை 0.3 பில்லியன் டாலருக்கும் வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்தது. ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மன் ராமலிங்க ராஜூவுக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் மேடாஸ் இன்ஃராவில் 36 சதவீத பங்குகளும் மேடாஸ் புராபர்டீஸில் 35 சதவீத பங்குகளும் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து சத்யம் விலகிக்கொள்வதாக அறிவித்ததும், சரிந்திருந்த அதன் பங்கு மதிப்ப ஓரளவு மீண்டது.
நன்றி : தினமலர்


Wednesday, December 17, 2008

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?: சிதம்பரம் தகவல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக குறைந்ததால், இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விலை குறைப்பு போதாது, மேலும் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் சமையல் காஸ் மற்றும் கெரசின் விலையையும் குறைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, துணை கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 'கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விலை குறைவு தொடர்ந்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும். அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்றார். உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா பதிலளிக்கையில், 'டிசம்பர் 6ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது இடைக்கால நடவடிக்கையே. கெரசின் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்றார். இம்மாத முற்பகுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 9.98 ரூபாயும், டீசல் விலையில் 1.03 ரூபாயும் லாபம் சம்பாதித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாப அளவு பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11.48 ரூபாயாகவும், டீசலுக்கு 2.92 ரூபாயாகவும் அதிகரிக்கும் என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் 148.38 ரூபாயும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த நிதியாண்டில், எரிபொருள் விற்பனையில் மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Tuesday, December 16, 2008

வீட்டுக்கடன் வட்டி கிடுகிடு குறைப்பு * நடுத்தர மக்களை கவர சலுகை! வங்கிகள் அதிரடி

வீட்டுக் கடன்களுக்கான வட்டியை கணிசமாகக் குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.5 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். அத்துடன், சில வங்கி நடைமுறை கட்டணச் சலுகைகளும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இது, நடுத்தர மக்கள் வீடு வாங்க ஆர்வத்தைத் தூண்டும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. ரியல் எஸ்டேட் திடீரென பூதாகர வளர்ச்சி பெற்றது. நிலம் வாங்குவதும், வீடு வாங்குவதும் குதிரைக் கொம்பாக ஆனது. வீட்டுக் கடனுக்கான வட்டி வீதங்கள் வங்கிகளில் அதிகம் இருந்ததால், வீடு வாங்குவது என்பது முடியாத செயல் என்று பலரும் நினைக்கத் துவங்கினர்.தற்போது, பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையை புத்துயிர் பெறச் செய்ய பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வங்கிகள் வட்டியைக் குறைத்தது : அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் வீட்டுக்கடன் கிடைக்கச் செய்ய மத்திய அரசு, வங்கிகளை வலியுறுத்தி வருகிறது. சமீப காலமாக வீட்டுக் கடன் வட்டியில் நிரந்தர வட்டி, புளோட்டிங் என்று கடன் வாங்கியவர்கள் பெரும் குழப்பத்தில் சிக்கினர். இதனால், வங்கிகளில் கடன் வாங்குவது குறையத் துவங்கியது. சில மாதங்களுக்கு முன், பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு 11 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வட்டி விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை காரணமாகவும், கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பெரும்பாலான வங்கிகள் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டியைக் குறைத்தது. தற்போது, பணவீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டியை மேலும் குறைத்து, ஏழை நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் வழி செய்ய வேண்டுமென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை செயலர் அருண் ராமநாதன், சில பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.குறிப்பாக, 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி குறைப்பு சலுகைகளை அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.சலுகை: இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள் அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்தின்(ஐ.பி.ஏ.,) கூட்டம், நேற்று மும்பையில் நடந்தது. இதன் தலைவரான டி.எஸ்.நாராயணசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டம் முடிந்ததும் ஸ்டேட் பாங்க் தலைவர் ஓ.பி.பட், நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி வீதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐந்து லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி 9.25 சதவீதமாக இருக்கும். இந்த இரண்டு வட்டி வீதங்களும் ஐந்து ஆண்டு காலத்திற்கானது. கண்டிப்பாக இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது.இது, அடுத்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ரூ.20 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்குபவர்கள் இனிமேல் பிராசசிங் கட்டணம், பிரீ-பேமன்ட் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டியது இல்லை.வீட்டுக் கடனுக்கு இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப்படும்.வீட்டுக் கடன் வழங்குவதில் மாற்றம் செய்யவும், சலுகைகள் வழங்கும்படியும் மத்திய அரசு கடந்த 7ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை இந்திய வங்கிகள் சங்கம் எடுத்துள்ளது.மேலும், வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.ரூ.5 லட்சம் கடன் பெறுபவர்களுக்கு வங்கிக்கு முன்பணமாக 10 சதவீதமும், ஐந்து லட்சத்திற்கு மேல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்கள் முன்பணமாக 15 சதவீதமும் செலுத்த வேண்டும்.வீட்டுக் கடன் குறைப்பு, புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் மற்றும் புதிய கடன் ஆகியவற்றுக்கான வட்டியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலையால் இத்தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி கட்ட, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு பட் கூறினார்.
மகிழ்ச்சியா ? ஏமாற்றமா ? : வங்கிகளின் இந்த முடிவை, வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்கள் ஆட்சேபித்துள்ளன.ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமாக உள்ள டி.எல்.எப்., நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் தல்வார் கூறுகையில், "வட்டி வீதங்கள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன. இது, 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையால் சூப்பர் மெட்ரோ, மெட்ரோ, முதல் தர நகரங்களில் வசிப்பவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை' என்றார்.பாரஸ்வநாத் டெவலப்பர்ஸ் சேர்மன் பிரதீப் கூறுகையில், "நாங்கள் வட்டி குறைப்பு மேலும் அதிகமிருக்கும் என எதிர்பார்த்தோம். இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. முன்பணத்தின் அளவைக் குறைத்திருப்பதும், பிராசசிங் கட்டணம் ரத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
நன்றி : தினமலர்


Monday, December 15, 2008

நட்சத்திர ஓட்டல்களில் 'ரூம்' கிடைப்பது கஷ்டம்

நட்சத்திர ஓட்டல்களில் தங்க வருவோருக்கு தற்போது அத்தனை எளிதில் ஓட்டல் நிர்வாகம் அறைகளை கொடுப்பது இல்லை. பல்வேறு விசாரணைகளுக்கு பிறகே தரப்படுகின்றன. அதேபோல், அறைகளில் அதிரடி சோதனையும் நடத்தப்படுகிறது. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து, பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. வருவாயில் பெரும்பகுதியை பாதுகாப்புக்காக செலவிடத் துவங்கியுள்ளன. தங்கள் ஊழியர்களுக்கு சில சிறப்பு பயிற்சிகளையும் கற்றுத் தர முடிவு செய்துள்ளன. யோகா, கராத்தே உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தற்போது, அறைகளை வாடகைக்கு கேட்டு நட்சத்திர ஓட்டல்களுக்கு வருவோருக்கு அத்தனை எளிதில் அவை கிடைப்பது இல்லை. ஓட்டலில் தங்குவோர் பற்றிய முழு விவரமும் இருந்தால் தான் அறைகள் தரப்படுகின்றன. அலுவலக மற்றும் வீட்டு முகவரி, தொலைபேசி எண், அடையாள அட்டை என அத்தனையும் இருக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதவிர, அனைத்து அறைகளிலும், முன் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் அதிரடி சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Friday, December 12, 2008

நிலைமையை சீராக்க ரூ.9,000 கோடி நிதியுதவி

தேசிய வீட்டு வசதி வங்கி(என்.எச்.பி.,) மற்றும் எக்சிம் வங்கிக்கு 9,000 கோடி ரூபாய் வழங்குகிறது ரிசர்வ் வங்கி.இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் கூறும் போது, 'வீட்டு வசதித் துறை
தற்போதைய சூழ்நிலையில் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. இதைத் தவிர்க்க, தேசிய வீட்டு வசதி வங்கிக்கு 5,000 கோடி ரூபாயும், எக்சிம் வங்கிக்கு 4,000 கோடி ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும். இம்முடிவை ரிசர்வ் வங்கி மத்தியக் குழு எடுத்தது' என்றார்.மேலும் அவர், அடுத்த இரு ஆண்டுகளுக்கு நிதி நெருக்கடி சூழ்நிலை தொடரும் என்று கூறியதுடன், மொத்த வளர்ச்சி 7.5 சதவீதம் முதல் 8 சதவீதத்திற்குள் தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, பணவீக்கம் நடப்பு வாரத்தில் 8 சதவீதமாகக் குறைந்தது.மேலும், ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த
ஊக்குவிப்பு நடவடிக்கை காரணமாக வட்டி வீதம் குறையும் என்று முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன் நேற்று மும்பையில் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்