Wednesday, December 17, 2008

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?: சிதம்பரம் தகவல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக குறைந்ததால், இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விலை குறைப்பு போதாது, மேலும் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் சமையல் காஸ் மற்றும் கெரசின் விலையையும் குறைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, துணை கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 'கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விலை குறைவு தொடர்ந்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும். அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்றார். உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா பதிலளிக்கையில், 'டிசம்பர் 6ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது இடைக்கால நடவடிக்கையே. கெரசின் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்றார். இம்மாத முற்பகுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 9.98 ரூபாயும், டீசல் விலையில் 1.03 ரூபாயும் லாபம் சம்பாதித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாப அளவு பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11.48 ரூபாயாகவும், டீசலுக்கு 2.92 ரூபாயாகவும் அதிகரிக்கும் என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் 148.38 ரூபாயும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த நிதியாண்டில், எரிபொருள் விற்பனையில் மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: