Wednesday, December 3, 2008

கமர்சியல் சிலிண்டர் விலை ரூ.290 வீழ்ச்சி

கடந்த 1ம் தேதி முதல் கமர்சியல் சிலிண்டர் ஒன்றுக்கு 290 ரூபாய் குறைந்துள்ளது. எனினும் காஸ் ஏஜென்சியினர், விலை குறைக்காமல் பழைய விலைக்கே சிலிண்டர் விற்பனை செய்கின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, ஆயில் நிறுவனங்கள் மாதம் தோறும் 1ம் தேதி 19.2 கிலோ எடை கொண்ட கமர்சியல் காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிப்பர். இதன் அடிப்படையில், மே மாதம் 1,094 ரூபாயாக இருந்த கமர்சியல் சிலிண்டர், ஜூன் மாதம் 1,172 ரூபாயாகவும், ஜூலையில் 1,231 ரூபாயாகவும், ஆகஸ்டில் 1,250 ரூபாயாகவும் விலை அதிகரிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 1,191 ரூபாயாக விலைக் குறைந்த கமர்சியல் சிலிண்டர், அக்டோபர் மாதம் 1,226 ஆகவும், நவம்பர் மாதம் 1,238 ஆகவும் என மீண்டும் விலை அதிகரித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 47 டாலராக சரிந்துள்ளதைத் தொடர்ந்து, கமர்சியல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. எனவே, நேற்று முன்தினம் ரூ.949.95 ஆக விலைக் குறைப்பு செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.288.90 குறைந்தது வியாபாரிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், காஸ் ஏஜென்சிகள் தாங்கள் 'ஸ்டாக்' வைத்துள்ள கமர்சியல் சிலிண்டர்களை விலைக் குறைத்து விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு சிலிண்டரை 290 ரூபாய் நஷ்டத்திற்கு விற்க விரும்பாத பெரும்பாலான ஏஜென்சிகள், 'விலைக் குறைப்பு உத்தரவு எங்களுக்கு வரவில்லை' என கூறி, பழைய விலைக்கே சிலிண்டர்களை விற்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் சண்முகராஜா கூறுகையில், 'ஆயில் நிறுவனங்கள், பெட்ரோல், காஸ் விலையை உயர்த்தினால், அதற் கேற்ப விலையை உயர்த்தி விடுகின்றன. விலை குறையும்போது, உத்தரவு எதுவும் வரவில்லை எனக் கூறி, பழைய விலைக்கே சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன என்றார்.
நன்றி : தினமலர்


ஒரு டிக்கெட்டுக்கு ஒன்று இலவசம் : பாரமவுன்ட் ஏர்வேஸ் அறிவிப்பு

விடுமுறை காலச் சலுகையாக, விமான பயணத்தில், ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட்டை இலவசமாக, தரும் திட்டத்தை, பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரையில் பாரமவுன்ட் ஏர்வேஸ் நிர்வாக, மேலாளர் தியாகராஜன் கூறியதாவது: விடுமுறைக்கால சலுகையாக, ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் விமானத்தில் 'எலைட் பிசினஸ் கிளாஸ்' டிக்கெட் ஒன்று வாங்கும்போது, கூடுதலாக 1500 ரூபாய் செலுத்தி இலவசமாக ஒரு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். வரிகள், சர்சார்ஜ் தனி. அடிக்கடி விமானங்களில், பறப்பவர்களுக்காக 'பாரமவுன்ட் ராயல்' என்ற பெயரில் தனிச்சலுகைகள் வழங்குகிறோம். இதில், உறுப்பினரானால் கோல்ப் கிளப்புகள், ரிசார்ட்டுகள் போன்றவற்றின் சேவைகள் பெற்றுத் தரப்படும். இச்சலுகையை பெற விரும்புவோர் தீதீதீ.ணீச்ணூச்ட்ணிதணtச்டிணூதீச்தூண்.ஞிணிட் என்ற வெப்சைட்டில், பதிவு செய்யலாம். மதுரையில் இருந்து ஒரு நாளைக்கு நான்கு விமானங்களை சென்னைக்கு இயக்குகிறோம். இது தவிர, மதுரையில் இருந்து கோவா, ஆமதாபாத், புனே செல்லவும் தொடர்பு விமான வசதிகளை தருகிறோம். எங்கள் சேவைக்கு போட்டி இருப்பதாக கருதவில்லை. தென்னிந்திய விமான பயணிகளில் 26 சதவீதம் பேர் எங்களது வாடிக்கையாளர்கள். விமான பெட்ரோல் விலை குறைந்துள்ளதால், அதன் பயனை பயணிகளுக்கு தருவது பற்றி பரிசீலிக்கப்படும். மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்த பிறகு, 2011 முதல் வெளிநாட்டு விமானங்களை இயக்குவோம். இதற்கு எங்களிடம் உள்ள 'எம்பரெர்' ரக விமனங்கள் பொருத்தமாக இருக்கும். மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் விமான பயணிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் பாதிப்பு இல்லை. இவ்வாறு மேலாளர் கூறினார்.
நன்றி : தினமலர்


Tuesday, December 2, 2008

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க 'ஒபெக்' முடிவு

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (ஒபெக்), இந்த மாதத்துக்கான உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அப்துல்லா சலீம் எல்-பத்ரி கூறியதாவது: எண்ணெய் கையிருப்பு அதிகமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வரும் சூழ்நிலையில், உற்பத்தியை குறைப்பதே சரியான நடவடிக்கை என தெரிகிறது. இதனால், இம்மாதத்துக்கான உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு உற்பத்தி குறைக்கப்படும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. அடுத்தாண்டு முதல் ஆறு மாதங்கள் வரை கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அப்துல்லா சலீம் கூறினார்.
நன்றி : தினமலர்


இரண்டே நாளில் ரூ. 50,000 கோடி இழப்பு

மும்பையில், பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை அடுத்து இரண்டு நாள் வர்த்தக இழப்பு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய். சுற்றுலா பயணிகள் வருகை, ஓட்டல்கள் உட்பட பல்வேறு வகையில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மூன்று நாள் நகரமே முடங்கிய நிலையில், பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. புதன் கிழமை இரவு , பயங்கரவாதிகள் அட்டாசம் ஆரம்பித்தது. அன்றும், மறுநாளும் சேர்த்து மட்டும், பங்குச்சந்தை, வர்த்தகம் ஆகியவற்றை கணக்கிட்டால், 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக தரப்பில் மேலோட்டமான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாளில், அதிரடிப்படையினர் முற்றுகை,கடைகள், நிறுவனங்கள் மூடல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றை கணக்கிட்டால், இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த நாட்களில் பங்குச்சந்தை மூடப் பட்டிருந்தது. நிதி நிறுவனங்களும் செயல்படவில்லை.மும்பையில் உள்ள 20 தியேட்டர்கள், 75 மல்டிப்ளக்ஸ்களில் ஒரு நாள் டிக்கெட் வசூல் இரண்டு லட்சம் ரூபாய். குளிர்பானங்கள் உட்பட விற்பனையால் தனி வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த பயங்கர நாட்களில் இங்கும் வருவாய் அடியோடு குறைந்து விட்டது. தாஜ், ஓபராய் உட்பட ஓட்டல்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சேத மதிப்புகள் இன்னும் பல கோடிகளை தாண்டும் என்றும் மதிப்பிடப்படுகிறது. உலக அளவில், முதல் பத்து வர்த்தக நகரங்களில் மும்பை உள்ளது. இந்தியான் மொத்த உற்பத்தி அளவில் மும்பையின் பங்கு 5 சதவீதம். அன்னிய செலாவணி, வருமான வரி வசூல் மட்டும் 40 சதவீதம், வெளிநாட்டு வர்த்தகம் மூலம் 60 சதவீதம், எக்சைஸ் வரி வசூல் 20 சதவீதம் வருவாயை மும்பை தருகிறது.இது தவிர, வணிக நிறுவனங்கள் மூலம் வரி வருவாயாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. மும்பையின் தனி நபர் வருமானம் , தேசிய தனி மனித வருமானத்தை விட மூன்று மடங்கு. அதாவது, தனி நபர் ஆண்டு வருமானம் 49 ஆயிரம் ரூபாய்.
நன்றி : தினமலர்


ஏர் இந்தியா கட்டண குறைப்பு

ஏர் இந்தியா நிறுவனம் வசூலித்து வந்த எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் குறைத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக் கை: பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வால், ஏர் இந்தியா நிறுவனமும் தனது உள்நாட்டு விமானக் கட்டணத்துடன் கூடுதலாக எரிபொருள் கட்டணமும் பயணிகளிடம் வசூலித்து வந்தது. இதன்படி, 750 கிலோ மீட்டருக்குள் பயணம் செய்யும் பயணிகளிடம் 2,350 ரூபாயும், அதற்கு மேற்பட்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளிடம் 3,100 ரூபாயும் எரிபொருள் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இன்று முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தில் 14.5 சதவீதம், அதாவது 400 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Monday, December 1, 2008

தாக்குதலில் உயிர் இழந்தால் காப்பீட்டு தொகை கிடைக்குமா ?

மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடே துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த தாக்குதலில் கொள்ளப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை கிடைப்பது அவ்வளது எளிதான விஷயம் அல்ல என்கிறார்கள். தீவிரவாத தாக்குதலில் கொல்லப்படுபவர்களுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ' டெரோரிஸம் இன்சூரன்ஸ் கவர் ' என்பது இப்போதைக்கு இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் பொதுவாக எல்லா லைப் இன்சூரன்ஸ் கம்பெனிகளுமே, இன்சூர் செய்தவர் தற்கொலை தவிர வேறு எந்த வகையில் இறந்தாலும், இன்சூர் செய்த தொகை கொடுக்கப்படும் என்றுதான் சொல்கிறது. எனவே இதையும் தற்கொலை இல்லாத மரணம் என்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் அமெரிககா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இன்சூரன்ஸ் இல்லை என்கிறார்கள் கோடக் லைப் இன்சூரன்ஸ் அதிகாரிகள். ஆனால் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிகள், தீவிரவாதத்திற்கான இன்சூரன்ஸ் கவரை, தீ விபத்துடன் சேர்த்து add-on இன்சூரன்ஸ் பாலிசியாக வைத்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


பிரதமர் கையில் நிதித்துறை : பங்குச் சந்தையில் மகிழ்ச்சி

மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் வசம் நிதி பொறுப்பு சென்றதால், இந்திய பங்குச் சந்தை ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர் கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.வர்த்தக நகரமான மும்பையை நிலை குலையச் செய்யும் நோக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை இந்திய பங்குச் சந்தை வர்த்தகமின்றி மூடப் பட்டது. மறுநாள் சந்தை துவங்கியபோது மும்பையில் உள்ள முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் பெரும் பாலும் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டாததால் ஒரு தேக்க நிலை இருந்தது. அன்னிய முதலீட்டாளர் கள் ஓரளவு பங்குகளை வாங்கியதால் அன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிவு பெற்றது.இந்திய பங்குச் சந்தை எந்த சூழ்நிலையையும் தாக்குப்பிடித்து நிற்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்நிலையில், நேற்று அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. மும்பை சம்பவத்திற்கு பொறுப் பேற்று, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினர். இதையடுத்து, புதிய உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமிக்கப்பட்டார்.இவர் வசமிருந்த நிதித்துறை, பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனிப்பார் என்பதும் உறுதியானது. இந்த செய்தி கேட்டதும் பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள், பங்குச் சந்தை வல்லுனர்கள், தொழில்நுட்ப பகுப்பாய்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்த மாற்றத்தின் மூலம் முதலீட்டாளர்கள் நம்பிக்கை மேம்படும் என தவுரஸ் பரஸ்பர நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.கே.குப்தா தெரிவித்தார். மேலும், ஜி-20 நாடுகள் கூட்டத் தில் பிரதமர் தெரிவித்த கருத்துக்களை உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக் காட்டி, அதே போல இங்கும் புதிய அணுகுமுறை வரலாம் என்றும் கூறுகின்றனர்.'இந்த மாற்றத்தினால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாம் உலகச் சந்தைகளை சார்ந்து இருப்பதால், அதன் போக்கை பொறுத்தே இருக்கும். இருப்பினும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும். இன்று பங்குச் சந்தை துவங்கும் போது சமநிலையில் தான் இருக்கும்' என, மற்றொரு புரோக்கர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்