Thursday, October 23, 2008

பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்தது

அக்டோபர் 11ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 11.44 சதவீதமாக இருந்தது. மொத்த விலை அட்டவணைப்படி கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம் கடந்த வருடத்தில் இதே காலத்தில் 3.07 சதவீதமாகத்தான் இருந்தது. பழங்கள், காய்கறிகள், முட்டை போன்ற உணவுப்பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர பருத்தி, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், புண்ணாக்கு, பாலியஸ்டர், காரீயம், துத்தநாகம் ஆகியவைகளின் விலையும் குறைந்திருக்கிறது. ஆனால் டீ, நெய், சோளம், அரிசி, புகையிலை, காட்டர் யார்ன், கடுகு விதை போன்றவைகளின் விலை உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கடந்த 16 மாதங்களாக இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது

உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டது. அமெரிக்காவில் வழக்கமாக சேமித்து வைக்கப்படும் கச்சா எண்ணெய் அளவும், கடந்த அக்டோபர் 17ம் தேதியுடன் முடிந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட 3.2 மில்லியன் பேரல்கள் கூடுதலாக இருப்பதாக வந்த தகவலும் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.43 டாலர் குறைந்து 66.75 டாலராகி விட்டது. இது கடந்த ஜூன் 2007க்கு பின் ஏற்பட்ட மிகக் குறைந்த அளவு.லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலையும் பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 64.52 டாலராகி விட்டது. இதுவும் கடந்த 16 மாதங்களில் இல்லாத குறைந்த அளவுதான். வெள்ளி அன்று ஓபக் மாநாடு கூடி, ஆயில் உற்பத்தியை குறைக்க தீர்மாணித்திருந்தாலும் இப்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதை அடுத்து, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை இன்னும் குறையும் என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலருக்கும் கீழே போய் விடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.கடந்த ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147 டாலருக்கும் மேலே இருந்தது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் தெரிகிறது முன்னேற்றம் : சேதுராமன் சாத்தப்பன்

சந்தை சிறிது மேலே தலை தூக்கிப் பார்க்கிறது. 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வள்ளலார் அன்று பாடினார். இன்று பாடியிருந்தால், 'வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடியிருப்பார். கடந்த வாரங்களில் குறைக்கப்பட்ட ரொக்க கையிருப்பு சதவீதம் 2.5 தவிர, இந்த வாரம் ரெப்போ ரேட் 1 சதவீதமும் குறைக்கப்பட்டது. இது பணப் புழக்கத்தை இன் னும் அதிகமாக்கும் என்றும், கடன்களுக்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் குறையும் என்ற நோக்கத்தில் செய்யப் பட்டுள்ளது. பணப்புழக்கம் அவ்வளவு மோசமாகவாக இருக்கிறது? ஒன்று வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை விற்று வெளிநாட்டுப் பணத்தை கொண்டு செல்வதால் பணப் புழக்கம் குறைகிறது. மேலும், டாலரின் மதிப்பு கூடி வருகிறது. பணம் உள்ளே வந்த போதெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டோம். தற் போது போகும் போது பொறுமையாகத்தான் இருக்க வேண் டும். அவர்கள் தான் எடுத்துச் செல்கின்றனர். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு என்ன வந்தது. எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பது போல எடுத்துச் செல்கின்றனர். பொறுமை தேவை. பங்குச் சந்தை என்பது இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி சந்திக்கும் இடம். அதில் பயணம் செய்ய பொறுமை தேவை. தற்போது அசாத்திய பொறுமை தேவை. டாலர் மதிப்பைக் குறைக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வங்கிகளில் வைக்கும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதங்களை கூட்டியுள்ளன.

இது வெளிநாட்டுப் பணம் உள்ளே வர ஏதுவாகும். அப்படி வரும் வரத்து கூடிவருகிறது. எங்கு வட்டி கூடுதலாகக் கிடைக்கிறதோ அங்கு தானே போவார்கள். திங்களன்று மும்பை பங்குச் சந்தை 2.5 சதவீதம் மேலே சென்று முடிவடைந்தது. அன்று 247 புள்ளிகள் கூடியது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் மேலே சென்றன. நேற்று முன்தினம், ரிலையன்ஸ், எல் அண்டு டி., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம் கம்ப்யூட் டர்ஸ் நன்றாக மேலே சென்றது சந்தையையும் மேலே கொண்டு சென்றது. குறிப்பாக டி.சி.எஸ்., 12.9 சதவீதம் மேலே சென்றது. ஆசிய அளவில் சந்தைகள் குறைந்ததாலும், லாப நோக்குடன் விற்றதாலும் நேற்று சந்தை மிகவும் கீழே சென்றது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 513 புள்ளிகள் குறைந்து 10,169 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 169 புள்ளிகள் குறைந்து 3,065 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மறுபடியும் மும்பை பங்குச் சந்தை 10,000க்கும் அருகில், வாய்ப்புகளா அல்லது சறுக்கல்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். திங்கள், நேற்று முன்தினம் கிடைத்த லாபத்தை நேற்று ஏற்பட்ட நஷ்டத்தால் காணாமல் போனது. இந்திய பங்குச் சந்தையில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நார்வே 9,800 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்பது சந்தையை பலப்படுத்த உதவும். காலாண்டு முடிவுகள்: செயில் சென்ற வருடம் இதே காலாண்டை விட 18 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. அதே போல ஹீரோ ஹோண்டா சென்ற வருடம் இதே காலாண்டை விட 50 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. ஜெயப்பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் சென்ற வருடம் இதே காலாண்டை விட 96 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது.

இதே போல எல்.ஐ.சி., ஹவுசிங், இந்தியா புல்ஸ் பைனான்சியல், யுனைடெட் ஸ்பிரிட், போலாரிஸ் சாப்ட்வேர், மாரிகோ, ஜீ என்டர்டெயின்மென்ட் ஆகிய கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன.

ஏன் தங்கம் விலை குறைகிறது? பங்குச் சந்தையில் 10,000க்கும் கீழே வந்திருந்தது முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக தெரிந்ததால், தங்கத்தை விட்டு பங்குக்கு தாவ ஆரம்பித்தனர். இதனால், தங்கம் பரிதவித்துப் போய் கீழே இறங்கியது. கூடி வரும் டாலர் மதிப்பால் சிறிது விலை கூடி நிற்கிறது.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பலரும் அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்படும் என்றும் அது நாடுகளையும், சந்தைகளையும் அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போதே நிறையப் பார்த்தாகிவிட்டது. இந்திய சந்தை பல நாடுகளின் சந்தைகளை வைத்துப் பார்க்கும் போது அதிகம் சரிந்த சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆதலால் மேலும் பெரிதாக சரிய வாய்ப்பில்லை. 10,000க்கும் கீழே செல்லும் போது வாங்குபவர்கள் அதிகம் வருவார்கள்.
நன்றி : தினமலர்


Wednesday, October 22, 2008

உலக பொருளாதார சீர்குலைவால் 2 கோடி பேர் கூடுதலாக வேலை இழப்பர் : ஐ.எல்.ஓ., கவலை

உலக அளவில் இப்போது இருந்து வரும் பொருளாதார சீர்குலைவால், உலகம் முழுவதும் 2 கோடி பேர் வரை கூடுதலாக வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் லேபர் ஏஜென்சி கவலை தெரிவித்திருக்கிறது. இப்போதுள்ள நிலையில் கணக்கெடுத்தால், 1997ம் ஆண்டு 19 கோடியாக இருந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2010 ம் ஆண்டு வாக்கில் 21 கோடியாக உயர்ந்து விடும் என்று ஐ.எல்.ஓ.,வின் இயக்குனர் ஜூவன் சோமாவியா தெரிவித்துள்ளார். இது தவிர, நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 4 கோடி அதிகரிக்கும் என்றும் 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 10 கோடி அதிகரிக்கும் என்றும் ஐ.எல்.ஓ., தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை சமாளிக்க உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. இது வெறும் வால்ஸ்டிரீட் பிரச்னை மட்டும் அல்ல. எல்லா நாடுகளுமே இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சோமாவியா தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


வீடு, கார் கடன் வட்டி எளிதாகும்: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இது வீட்டுக் கடன் வசதி, கார் வாங்க கடனுதவி, பெர்சனல் லோன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் குறைய வழிவகுக்கும். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், இந்தியாவில் நிதிச்சந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், பணப் புழக்கத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்தது. இவற்றின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் பெற்று, அதை வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வந்தன. இந்த கடனுக்கு (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி 9 சதவீதம் வசூலித்து வந்தது. தற்போது, இதில் 100 புள்ளிகளை குறைத்து, 8 சதவீத வட்டி ஆக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் பயனாக முதலீட்டாளர்கள் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. வீடு கட்டுபவர்கள், தனிநபர் கடன் பெறுவோர், வாகன கடன் பெறுபவர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை குறைத்துள்ளது. சிதம்பரம் வரவேற்பு: டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் கூறுகையில், 'ரெபோ ரேட்டை குறைத்துள்ளதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேம்படும், பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்படும். கடன் பெறுவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும்' என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இணை நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் கூறுகையில், 'ரிசர்வ் வங்கியின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் போதிய பணப்புழக்கம் இருக்கும். நிதிச்சந்தைகள் சுமுக செயல்பாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்றார். இனி வங்கிகள் டிபாசிட் மற்றும் கடன் மீதான வட்டி குறித்து மறுபரிசீலனை செய்து எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பால் ஏற்பட்ட நிதிச்சுனாமிக்கு இது ஓரளவு ஆறுதலாக இருப்பதுடன், மக்களிடம் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Monday, October 20, 2008

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் இருந்த ஏற்ற நிலை மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத ரெபோ ரேட் கட் போன்ற காரணங்களால் இன்று பங்கு சந்தையில் ஏற்ற நிலை காணப்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 247.74 புள்ளிகள் ( 2.48 சதவீதம் ) உயர்ந்து 10,223.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 48.45 புள்ளிகள் ( 1.58 சதவீதம் ) உயர்ந்து 3,122.80 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் டெக்னாலஜி, பேங்கிங், பார்மா,மெட்டல் மற்றும் சில ஆயில் கம்பெனி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. ரியல் எஸ்டேட், பவர், சில ஆட்டோ நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன.ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத பெரோ ரேட் குறைப்பு இன்றைய வர்த்தகத்தில் அதிக அளவு உதவி புரிந்தது.இன்று பேங்கிங் இன்டக்ஸ் 2.08 சதவீதம் அல்லது 149.03 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2003 க்குப்பின் இப்போது தான் ரெபோ ரேட் 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் கட்டாய பண கையிருப்பு விகிதமும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால் வங்கிகளில் தாராளமாக பணபுழக்கம் இருந்து வருகிறது. இந்த இரு நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஐ.டி.பி.ஐ. வங்கியின் சேர்மன் யோகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கிகள் வட்டியை குறைப்பது, கடனுக்கான டிமாண்ட் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே அமையும் என்றார்.
நன்றி :தினமலர்


ஐந்து ஆண்டு ஊதியமில்லா விடுப்பு; திரும்பி வந்தால் வேலை: சர்ச்சைக்கு ஏர் இந்தியா முற்றுப்புள்ளி

ஐந்தாண்டுக்கு நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், சம்பளம் கிடைக்காது; ஐந்தாண்டுக்கு பின் மீண்டும் திரும்பி வந்தால் வேலையில் சேர்த்துக்கொள்ளப்படுவர்!- இப்படி ஒரு நூதனமான தற்காலிக 'வி.ஆர். எஸ்.,' திட்டத்தை, மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, 2002 ல் அறிமுகம் செய்தது. இந்த சலுகை திட்டத்தை ஏற்று, அப்போது 500 ஊழியர்கள் விடுப்பு எடுத்தனர். இதனால், ஏர் இந்தியாவுக்கு சில நூறு கோடிகள் செலவு மிஞ்சியது. இந்த சிக்கன நடவடிக்கையால் விமான நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த ஊழியர்களில் சிலர், மீண்டும் வந்து வேலையில் சேர்ந்தனர். இந்த திட்டத்தை தான் மீண்டும் ஏர் இந்தியா இப்போது அமல்படுத்த உள்ளது. ஆனால், ஏர் இந்தியா செயல் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா கூறியதை தவறாக அர்த்தம் புரிந்து கொண்ட சில பத்திரிகைகளும், 'டிவி'க்களும் 'ஏர் இந்தியா தன் ஊழியர்கள் சிலரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டமிட்டுள் ளது' என்று வெளியிட்டு விட்டன. இதனால், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் கடுப்பாகி விட்டார். பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார். 'ஏர் இந்தியா எல்லா வகையிலும் நிதி நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்க இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் அமல்படுத்த மாட்டோம். மாறாக, ஏற்கனவே 2002ல் அமல்படுத்த நீண்ட விடுப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்' என்று தெரிவித்தார். 'சுய விருப்ப ஓய்வு திட் டம் அல்ல; சுய விடுப்பு திட்டத்தை தான் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதனால், நிர்வாகத்துக்கும் சரி, ஊழியர்களுக்கும் சரி நல்லது. நிதி இழப்பை தடுக்க இது நிர்வாகத்துக்கு உதவுகிறது. அதுபோல, ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வதையும் தடுக்கிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு இது தொடர்பாக பல பரிந்துரைகளை செய்துள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது' என்று பார்கவா கூறினார். ஏர் இந்தியா மற்றும் பல தனியார் நிறுவனங்கள், விமானங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நீண்ட நாள் குத்தகைக்கு வாங்கித்தான் இயக்கி வருகின்றன. பயணிகள் இல்லாமல், ஒரு விமானம் நின்று விட்டாலும், அதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். இப்படிப்பட்ட நிலை இப்போது ஏற்பட்டு வருகிறது. அதனால், விமானங்களை மீண்டும் குத்தகைக்கு எடுப்பதை சில நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன. விமானம் ஓடாத போது, அதன் ஊழியர்களுக்கும் வேலையில்லாமல் தான் இருக்க வேண்டியிருக்கும். அதனால், இதுபோன்ற நிலையை தவிர்க்கவும், இழப்பை முடிந்தவரை தடுக்கவும் ஏர் இந்தியா இந்த புதுமை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
நன்றி : தினமலர்