Thursday, October 23, 2008

கடந்த 16 மாதங்களாக இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது

உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டது. அமெரிக்காவில் வழக்கமாக சேமித்து வைக்கப்படும் கச்சா எண்ணெய் அளவும், கடந்த அக்டோபர் 17ம் தேதியுடன் முடிந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட 3.2 மில்லியன் பேரல்கள் கூடுதலாக இருப்பதாக வந்த தகவலும் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.43 டாலர் குறைந்து 66.75 டாலராகி விட்டது. இது கடந்த ஜூன் 2007க்கு பின் ஏற்பட்ட மிகக் குறைந்த அளவு.லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலையும் பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 64.52 டாலராகி விட்டது. இதுவும் கடந்த 16 மாதங்களில் இல்லாத குறைந்த அளவுதான். வெள்ளி அன்று ஓபக் மாநாடு கூடி, ஆயில் உற்பத்தியை குறைக்க தீர்மாணித்திருந்தாலும் இப்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதை அடுத்து, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை இன்னும் குறையும் என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலருக்கும் கீழே போய் விடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.கடந்த ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147 டாலருக்கும் மேலே இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: