Sunday, June 5, 2011

வேலை தரும் கல்விக்குத் தயாராகுங்கள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு நாள்கள் பல கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவரும், மாணவியும் அவர்களது பெற்றோர்களும் கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரிகளை மொய்த்து வரும் காலம் இது. வீடுகள் தோறும் பெற்றோர்கள், நண்பர்கள் என ஆளாளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி பிளஸ் 2 தேர்வு பெற்ற மாணவர்களை ஒரு வழி ஆக்கிவிடும் காலகட்டம் இது.

பொதுவாகவே, மேல்படிப்புக்கு மட்டுமல்ல, பிள்ளைகள் எல்.கே.ஜி. சேர்ந்ததில் இருந்து இந்தப் படிப்பு குறித்த ஆலோசனைகள், அவன் அல்லது அவள் ஒரு வேலைக்குச் செல்வது வரை தொடர்ந்து நிழல் போல் வருவது என்பது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.

பள்ளிகளில் சேர்க்கும் போதே பொறியாளர், மருத்துவர் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை தங்கள் பிள்ளைகளின் தோளில் ஏற்றி அவர்களின் தோள் வலியைக் கூட பொருள்படுத்தாது சுமக்கச் சொல்லி வருவதே பல பெற்றோர்களின் செயலாக இருந்து வருகிறது.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பக்கத்து வீட்டு மாணவரைக் காட்டி, இது போல் படிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று அடிக்கடி கூறுவதுதான் பல குடும்பங்களிலும் நடக்கும் நிகழ்ச்சி. இந்த வார்த்தை மாணவர்களின் மனதில் பதிவாகி எப்படியாவது பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்ற துடிப்பையும் உருவாக்கி விடுகிறது.

இதனால் பொறியியல், மருத்துவம் போன்றவைகளைத் தவிர்த்த மற்ற படிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் ஒரு தெளிவான பார்வை இல்லாமலேயே போய் விடுகிறது.

இதனைத் தவிர்த்து எத்தனையோ படிப்புகள், அதுவும் படித்தவுடனே வேலை வாய்ப்பு வழங்கும் படிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் பட்டயப் படிப்புகள் என எண்ணற்ற படிப்புகள் இன்றைய கல்விச் சந்தையில் குவிந்து கிடக்கின்றன.

அப்படி இருந்தாலும் அந்தப் படிப்புகள் என்னவோ மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு போன்று கிராக்கியுடன் இருப்பதில்லை என்பதுதான் வேதனை.

தெரிந்த பையன் ஒருவன் பொறியியல் படித்து இன்று கைநிறைய சம்பளம் வாங்குகிறான் என்ற பிரமிப்புத்தான் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறதே தவிர எண்ணிக்கையில் அடங்காத பொறியியல் பட்டம்பெற்ற மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சொற்பமான சம்பளத்தில் வேலை செய்வதைக் கவனத்தில் கொள்வதில்லை.

இப்படி குடும்பமும்,சொந்தமும், அக்கம்பக்கமும் ஒவ்வொரு மாணவரையும் பொறியியல் படிப்புக்காகத் தயார்படுத்தி இருக்கின்றனர். இந் நிலையில் பிளஸ் 2 தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்க முடியாமல் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும் கூட வேறு வழியின்றி மாணவர்களும், பெற்றோர்களும் ஏதாவது ஒரு கல்லூரியில் அவர்கள் கேட்கும் கட்டணத்தைச் செலுத்திப் படிக்கவைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

அங்கு அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்குமா என்பதைக்கூட யோசிப்பதில்லை. தன் பிள்ளை என்ஜினீயரிங் படிக்கப் போகிறான் என்பது மட்டுமே அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். இது ஒரு சமூக அந்தஸ்தாகி விட்டது.

குறைவான மதிப்பெண்கள் பெற்று ஏதோ ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பதை விட, படிக்கும் திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்குரிய கல்வியைக் கற்க பெற்றோர்களும் விரும்புவதில்லை. மாணவர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையிலும், பணத்தைச் செலவழித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களால், பொறியியல் கல்லூரிகளிலும் தனது திறனை வெளிப்படுத்த இயலாமல் போகிறது.

இதனால் ஏராளமானவர்கள் தங்கள் கல்வியைத் தொலைத்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துள்ள விவரங்கள் ஏராளம். உலகியல் நடப்புகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் திறன் பெற்றவர்கள் இன்றைய மாணவர்கள்.

அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால், அவர்களின் எண்ணங்களை மாணவர்களின் மனதில் திணிப்பதுதான் பிரச்னையாகி வருகிறது. இதன் காரணமாகத் தங்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு உதவிசெய்து, அவர்களுக்கு வழிகாட்ட எத்தனையோ தொலைக்காட்சிகள் நல்ல பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. நாளிதழ்கள் பல கல்லூரிகளின் பாடப்பிரிவுகளைத் தொகுத்து வழங்கி வருகின்றன. எத்தனையோ கல்வித்துறை வல்லுநர்கள் நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகின்றனர்.

எனவே, தேர்வு முடிவுகளை அறிந்துள்ள நிலையில், அடுத்த நிலைக்குச் செல்ல மாணவர்களைப் பெற்றோர்கள் தயார்படுத்தினாலே போதும். மாணவர்களின் சிந்தனையை மழுங்கடிக்காமல் இருந்தாலே,அவர்களின் ஆற்றல் தானாகவே வெளிப்படும். பெற்றோர்களே பிள்ளைகளைச் சிந்திக்க விடுங்கள்.

கட்டுரையாளர்: வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி


No comments: