சிறு,குறு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு அரசின் சார்பில் புதிய மின்மோட்டார்கள் இலவசமாகப் பொருத்தித் தரப்படும் என்பதும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புதிய பம்புசெட்டுகள் பொருத்தித் தரப்படும் என்பதும் தமிழக முதல்வரின் விடுதலை நாள் விழா அறிவிப்பு.
திறன் இல்லாத பழைய மோட்டார்களைப் பயன்படுத்துவதால், விவசாயத்துக்கான மின்சாரத்தில் 20 விழுக்காடு வீணாகிறது, இத்தகைய புதிய, தரமான மின்மோட்டார்களை இலவசமாகப் பொருத்தித் தருவதால் (இலவசமாக வழங்குவது மட்டுமல்ல, கிணற்றில் பொருத்தித் தருவதும்கூட இலவசம்தான்) இந்த மின்இழப்பைத் தவிர்த்துவிடலாம் என்பது முதல்வர் இதற்குக் கூறியிருக்கும் காரணம்.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 19 லட்சம் விவசாயிகள் தங்கள் கிணறுகளுக்கு மின்இணைப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். ஆக இப்போது முதல்வரின் அறிவிப்பின்படி 15 லட்சம் விவசாயிகளுக்கு மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் 4 லட்சம் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் பொருத்தித் தர வேண்டும். அதாவது மொத்தம் 19 லட்சம் மின்மோட்டர்களுக்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்றாக வேண்டும். ஒரு மின்மோட்டார் குறைந்தது 40 ஆயிரம் ஆகும். இந்தக் கணக்கின்படி இத்திட்டத்தின் மொத்த நிதித்தேவை ஏறக்குறைய 6,800 கோடி.
இந்தத் திட்டத்தை இத்தனை செலவில் அமல்படுத்தி, அனைத்து மின்மோட்டார்களையும் இலவசமாக மாற்றிப் பொருத்தினால், முதல்வர் கூறுவதைப்போல 20 விழுக்காடு வீணாகும் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுமா என்றால், அதுவும்கூட மிகப் பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் இலவச மின்சாரம் கூடாது என்று சொல்லி வந்தபோதிலும், பொதுவாக ஆண்டுக்கு 3,000 கோடி என்று மின்வாரியத்துக்கு அரசு ஒரு தொகையை மானியமாக வழங்கும் போதும், ஒவ்வொரு பம்புசெட்டில் உள்ள மீட்டரையும் ரீடிங் எடுத்து, அதன்படி உள்ள கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த ஆணையம். ஆனால் தமிழக அரசோ, இலவசம் என்றான பின்பு எவ்வளவு மீட்டர் ரீடிங் இருந்தால் என்ன என்று சொல்வதோடு, ஆணையம் எதற்காக இதனை வலியுறுத்துகிறது என்கிற சிந்தனைக்கே திரும்பவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வயலுக்குப் போய், பம்புசெட்டுகளில் ரீடிங் எடுக்கும் வழக்கமே மறைந்தொழிந்துவிட்டது.
மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம், இலவச மின்சாரத்தையும் ரீடிங் செய்து கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையானது, தமிழ்ப் பழமொழி சொல்வதைப்போல, "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பதைத் தவிர வேறில்லை.
ஒரு பம்புசெட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அந்த நிலத்தில் நடைபெற்ற விவசாயத்தின் வீச்சு, விளைச்சல் எல்லாவற்றையும் தோராயமாகக் கணக்கிட முடியும். மேலும், இந்த மின்சாரம் அந்த நிலத்தின் அளவுக்குத் தகுந்தபடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கணிப்பதன் மூலம், அவர்கள் தவறாக மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும்கூட உண்டாகும். மேலும், ஒவ்வோராண்டும் இந்த மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் குறைதல் இருக்கிறதா என்பதைக் கொண்டு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுமான மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்க மறுத்துவிட்டது தமிழக அரசு.
இதனால், பம்புசெட் மின்சாரம் பல நேரங்களில் பண்ணை வீடுகளுக்கும் போகிறது. சில இடங்களில் கரும்பு பிழிவதற்கும் போகிறது. சில நேரங்களில் வெறுமனே லாரிகளில் தண்ணீர் நிரப்பவும் பயன்படுகிறது. வணிக ரீதியில் இவ்வாறு இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசியல் தலைவர்களை வரவேற்க சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்படும் குழல்விளக்குகளுக்கும்கூட, கட்சி பேதமின்றி, சாலையோரம் இருக்கும் பம்புசெட்டுகளிலிருந்து இலவசமாக மின்சாரத்தை இழுத்துக் கொள்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க, தற்போது தரமான புதிய மின்மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால் அதனைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதுடன், மின்சாரத்தின் அளவும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாற்கர சாலைகள் அமைத்தால் வேகம் அதிகரித்து வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விபத்துகளும் அதிகரிப்பதைப் போலத்தான் இதுவும். நல்ல மின்மோட்டார்களை நன்றாகப் பயன்படுத்தி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சுவார்கள். வீணடிப்பார்கள், வேறென்ன?
கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக அண்மையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மின்மோட்டார்களின் தரம் உயர்த்த மானியம் அளிக்கப்படுவது என அரசு முடிவு செய்திருந்தால் அதனைப் பாராட்டியிருக்கலாம்.
ஒரு டன் கரும்புக்கு மேலும் 500 அதிகரிக்கப்படும் என்றாலோ அல்லது நெல்லுக்கு விலை 500 அதிகம் என்றாலோ விவசாயிக்கு நன்மை கிடைக்கும். விவசாயத்துக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும்.
விதை நெல்லுக்கு மானியம் இல்லை என்று சொல்லும் அரசு, மின்மோட்டாரை இலவசமாக வழங்குவதால், மின்மோட்டார் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்கள் இதற்கான அனைத்து ஆர்டர்களையும் பெற்று வளம்பெறப் போகின்றன.
மக்கள் பணத்தை முறைப்படி செலவிடுவதில் தவறில்லை. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி சாதாரண விவசாய மின்மோட்டார் வரை, திட்டங்கள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி, வீணாகின்றன என்பதும், யாரோ சிலர் அதனால் சில ஆயிரம் கோடி ரூபாய் பார்க்கிறார்கள் என்பதும் தான் நமது ஆதங்கம்.
"வயலுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பது புரிகிறது. ஆனால் புல்லுக்கு மட்டுமே வாய்க்கால் நீர் ஓடி, நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றால்...
நன்றி : தினமணி
Tuesday, August 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment