Monday, January 11, 2010

தகுதியுள்ளது வாழும்

ஜக்குபாய் திரைப்படம் இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் திரையுலகமே ஒன்று சேர்ந்து கண்டித்துள்ளது. இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட கோவை இளைஞரையும், திருட்டு டிவிடி தயாரித்த சென்னை நபரையும் கைது செய்துள்ளது. பொங்கல் நேரத்தில் திரைக்கு வரவிருந்த இப்படம் முன்னதாக வெளியாகியிருப்பது மிகவும் மோசமான சூழல் தமிழ்த் திரையுலகுக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது, இதைவிட எங்களை நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறி அழுதது, அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலுமே ஒரு பச்சாதாபத்தை உருவாக்கியிருக்கிறது. எத்தகைய பெரும் இழப்பைத் தயாரிப்பாளர்கள் சந்திக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.
திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது என்பதும் இணையதளத்தில் பல படங்களை யார்யாரோ போட்டுவிடுகிறார்கள் என்பதும் புதிய விஷயம் அல்ல. இப்போது திரையுலகமே கலங்கி நிற்கக் காரணம், படம் வெளியிடப்படத் தயாராக இருக்கும் நிலையில், அது யாருக்கோ கிடைத்து, இணையதளத்தில் வெளியாகி, அதை ஒருவர் பதிவிறக்கம் செய்து திருட்டு டிவிடியாக வெளியிடுகிறார் என்ற அதிர்ச்சிதான்!

ரஜினிகாந்த் குறிப்பிட்டதைப்போல திருடன் வெளியே இருந்து வரவில்லை, கூடவே இருந்திருக்கிறான். தயாரிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணியின்போதுதான் இந்தத் திரைப்படம் வெளியே எடுத்துச்செல்லப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பதும் சாத்தியம்தான். ஆனால் இத்தகைய உள்ளுறைத் திருடர்கள் உருவாக யார் காரணம்? திருட்டு டிவிடியை ஏன் ஒழிக்க முடியவில்லை? காவல்துறையினர் கண்டும்காணாமல் இருப்பதால் மட்டும்தான் திருட்டு டிவிடி சந்தையில் புழங்குகிறதா? இதற்கான பதில்கள் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசிய பேச்சிலேயே இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், திருட்டு டிவிடி வாங்கிப் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமானதாக நினைக்கிறார்கள், திருட்டு டிவிடி போன்ற சட்டவிரோதமான செயல்கள் கருப்புப் பணத்திலிருந்து வருவதுதான். திருட்டு டிவிடி மூலம் கிடைக்கும் பணம், மும்பை குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மைதான்.

இருப்பினும்கூட, திரைத்துறையில் படத்தயாரிப்பு, சம்பளம் எல்லாவற்றிலும் கருப்புப் பணம் முழுவீச்சில் நடமாடுகிறது என்பதால்தான் ஒரு திரைப்படம் ஒரு கலையின் ஒரு பிரிவு என்று கருதாமல், வெறும் வியாபாரமாக கோடிகோடியாய் கொட்டப்படுகிறது என்கிற கசப்பான உண்மையும் இருக்கவே செய்கிறது.

"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார். தமிழ்ப்படங்களின் திரைக்கதை இப்படித்தான் உருவாகும் என்றால், மற்றவர்களைக் குறை சொல்ல என்ன நியாயம் இருக்கிறது?

தமிழ்த் திரையுலகில் பிறமொழிகளில் வெற்றியடைந்த படங்களின் கதைத் தழுவல் தொடக்க காலம் முதலாகவே நடந்து வந்திருப்பதுதான். ஆனால் அண்மைக்காலத்தில், மிகப் பெரும்பாலான படங்கள் ஏதோ ஒரு மொழியில் வெற்றியடைந்த, அல்லது பேசப்பட்ட, அல்லது கையாளப்பட்ட புதுமை உத்திகளை அப்படியே இறக்குமதி செய்வதாகத்தான் இன்றைய தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. ரூ.20-க்கு மூன்றுபடங்கள் கொண்ட ஒரு டிவிடி என்று பெருகிவிட்டபிறகு, தமிழ்ப்படங்களின் மூலங்களையும் சேர்த்தே வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் சூழல் தமிழகத் திரைப்பட ரசிகர்களிடம் உருவாகியிருப்பதை இன்றைய தமிழ்த் திரையுலகம் அறிந்திருக்கவில்லையோ!

எம்ஜிஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. "தமிழகத்தின் எல்லா நகர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக்கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன?' என்பதுதான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும்கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும்போது ஒருமுறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்குக் கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.

அண்மையில் வெளியான "2012', "அவதார்' ஆகிய படங்களின் திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது. அந்தப் படத்தை டிவிடியில் பார்த்து அசந்துபோய், பெரிய திரையில் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று திரையரங்குக்கு ஓடும் ரசிகர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அதற்கான மதிப்பை வழங்கத் தவறுவதில்லை என்பதை தமிழ்த் திரையுலகம் உணர வேண்டும்.

அத்துடன், ஜக்குபாய் படத் திருட்டு மட்டுமல்ல, ஓட்டல் அறையில் விவாதிக்கப்படும் பல திரைப்படங்களின் கதைக்கரு, நகைச்சுவைக் காட்சி தொடர்பான தகவல்கள் எல்லாமும் பல்வேறு இயக்குநர் முகாம்களுக்குக் கசிந்திடக் காரணம், இயக்குநர், கதாநாயகன் கதாநாயகிக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்போது, உதவி இயக்குநர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியம் கொடுப்பதும்தான் என்பதையும் திரையுலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி

No comments: