உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். இன்று நேற்றல்ல, பல நூறாண்டுகளாகத் தமிழர்கள் பல நாடுகளில் குடியேறி அந்நாடுகளையே தங்கள் சொந்த நாடுகளாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். அதிலும் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்படுவதற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பே இருபுறத்திலும் வாழ்ந்த தமிழர்கள் மொழியாலும் பண்பாட்டாலும் மிக நெருங்கியவர்களாக இருந்தார்கள்.
சங்க காலப் புலவரான ஈழத்து பூதந்தேவனார் காலத்திலிருந்து சென்ற நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் காலம் வரையிலும், அதற்குப் பிறகு இன்றுவரையிலும் மட்டுமல்ல, இனி எதிர்காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள உறவு என்பது தொப்புள் கொடி உறவாகும்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல பிறநாடுகளில் வாழ்கிற தமிழர்களும் தங்களது பண்பாட்டுத் தாயகமாகக் கருதுவது தமிழ்நாட்டையே ஆகும். தமிழ்நாட்டுக்கும் பிற நாடுகளில் வாழ்கிற தமிழர்களுக்கும் இடையே உள்ள உறவு என்பது தாய்-சேய் உறவு ஆகும்.
மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் எங்கும் நடைபெறும் தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள், தமிழகத்து அறிஞர்கள் வ.அய். சுப்பிரமணியம், சாலை இளந்திரையன் போன்ற பலரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
முதல் உலகத் தமிழராய்ச்சி மாநாடு மலேசியாவில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இம்மாநாட்டில் பங்கு பெற்றனர். அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் தலைமையில் இரா. நெடுஞ்செழியன், பி.டி.ராஜன் உள்பட பலகட்சித் தலைவர்கள் தமிழகக் குழுவாகச் சென்று கலந்து கொண்டனர்.
1968-ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10-ம் தேதி வரை சென்னையில் 2-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோதும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர். ராஜாஜி, பெரியார், காமராசர், ஜீவா, ம.பொ.சி. போன்ற பலவேறு கட்சித் தலைவர்களையும் முதலமைச்சராக இருந்த அண்ணா,நேரில் சென்று அழைத்து இம்மாநாட்டில் சிறப்புரையாற்ற வைத்தார். அவர்களும் அவருடன் ஒத்துழைத்தனர். அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு வலிமை சேர்த்தனர்.
1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரிசிலும் 1974-ம் ஆண்டு நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்திலும் ஒற்றுமை குலையாத வகையில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாநாட்டில் சிங்கள ராணுவம் புகுந்து சுட்டு 9 தமிழர்கள் உயிர் துறந்த துயர நிகழ்ச்சியும் நடைபெற்றது.
1981-ம் ஆண்டு ஜனவரி 4 முதல் 10-ம் தேதி வரை மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விடுத்த அழைப்பை அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஏற்று மாநாட்டில் பங்கு கொண்டனர். ஆனால் தி.மு.க. தலைவரான கருணாநிதி மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். அன்றிலிருந்து இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
1995-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது மாநாட்டின் போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதிலும் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. இம்மாநாட்டின் போதுதான் தமிழர்களை அவமதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவீடன் நாட்டுத் தமிழறிஞர் பீட்டர் சால்க், ஈழத் தமிழறிஞர் சிவத்தம்பி ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டு, இங்கு வந்த பிறகு அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றிய வெட்ககரமான நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தமிழர்கள் அனைவரும் இதை வன்மையாகக் கண்டித்தனர்.
1998-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற 6-வது உலக சைவ மாநாட்டில் கலந்து கொள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பலர் வந்திருந்தனர். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த வீரபத்திரன், இலங்கையைச் சேர்ந்த மனோன்மணி சண்முகதாஸ், பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் சிவதாசன் தம்பதியினர் ஆகிய நால்வர் வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிராக மாநாட்டுப் பிரதிநிதிகள் அறவழியில் போராடினர். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
அதற்குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாடு நடைபெற்றபோது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதற்குத் தடைவிதித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு என்று தெரிந்தும் இந்தத் தடை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தலையிட்டு அந்தத் தடையை நீக்கி மாநாட்டுக்கு அனுமதி வழங்கியது.
÷2004-ம் ஆண்டு பெங்களூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது மாநாட்டைத் தொடங்கிவைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன், சென்னை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். அதற்குரிய காரணம் எதுவும் அவருக்கு அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இந்த நாடுகளுக்குள் சுற்றுப்பயணம் செய்து வருவதற்கு விசா எதுவும் தேவையில்லை. இந்த விதியும் மீறப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தனுக்கு உரிய விசா இருந்தும் அவர் திருப்பி அனுப்பப்பட்ட அவலம் நேர்ந்தது. அப்போதும் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12, 13-ம் தேதிகளில் சேலம் நகரில் உலகத் தமிழர் பேரமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு மாநாடு நடைபெற்றபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதற்குத் தடைவிதித்தார். இந்தத் தடையும் உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
2009-ம் ஆண்டு டிசம்பர் 26, 27-ம் தேதிகளில் தஞ்சை நகரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதுவும் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியின்போதுதான் நடைபெற்றது.
உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தமது பிரச்னைகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை என்பதை இந்த வெளியேற்ற நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டைத் தங்கள் தாயகமாகக் கருதுகின்ற வெளிநாட்டுத் தமிழர்கள், தமிழகம் வரும்போதெல்லாம் இப்படி விரட்டியடிக்கப்படுவது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அவமானமாகும்.
ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளில் பங்கேற்க வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் பிரளயம் எதுவும் நேர்ந்திருக்காது. தமிழறிஞர்களை அவமதித்த குற்றமும் முதலமைச்சர்கள் மீது படிந்திருக்காது. வெளியேற்றப்பட்ட தமிழறிஞர்கள் ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் அவர்கள் அனைவரும் தமிழகத்திற்குப் புதியவர்கள் அல்லர். எத்தனையோ முறை வந்து சென்றவர்கள். ஜெயலலிதா வேண்டுமானால் அவர்களைப் பற்றி அறியாமல் இருக்கலாம். ஆனால் கருணாநிதி அவர்கள் குறித்து நன்கு அறிந்தவர். என்றாலும் தில்லியின் தமிழர் அவமதிப்பு போக்கினைத் தடுத்து நிறுத்தி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட இருவருமே தவறிவிட்டனர்.
இந்தியாவில் பிற மொழி பேசுகிறவர்கள் நடத்தும் உலக மாநாடுகளுக்கு வருகிறவர்கள் தாராளமாக வந்து சுதந்திரமாகப் பேசிவிட்டுப் போகிறார்கள். உலகத் தெலுங்கர் மாநாடு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத் நகரில் நடைபெற்றபோது பிறநாடுகளில் வாழும் தெலுங்கர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்தபோது எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. அவ்வாறே பெங்களூரில் நடந்த உலக கன்னட மாநாட்டிலும் பிற நாடுகளைச் சேர்ந்த கன்னடர்கள் தாராளமாகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
உலகப் பஞ்சாபி மாநாடு சண்டீகரில் நடைபெற்றபோது கனடாவில் வாழ்ந்து கொண்டிருந்த காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் இந்தியா வர இந்தியத் தூதரகம் விசா தர மறுத்துவிட்டபோது, பஞ்சாப் முதலமைச்சர் பிரதமரிடம் போராடி விசா வழங்கச் செய்தார். இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் தாராளமாக வந்து தங்கள் மொழி மாநாட்டில் சுதந்திரமாகப் பேசமுடிகிறது. இதற்கு பஞ்சாப் முதலமைச்சரின் மொழி உணர்வும் மத்திய அரசுடன் போராடும் மன உறுதியுமே காரணமாகும்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த பிறநாட்டுத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு தான் பொறுப்பல்ல மத்திய அரசே பொறுப்பு என்று சொல்லி முதலமைச்சர் தப்பித்துக்கொள்ள முடியாது. மத்திய ஆட்சியிலும் இவரது கட்சி ஓர் அங்கம். பிரதமரிடம் இவருக்கு மதிப்பு நிறைந்த செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை இவர் தடுத்து நிறுத்த முன்வரவில்லை என்று சொன்னால் அது இவரது சம்மதத்தோடு நடைபெறுகிறது என்பதுதான் பொருள்.
முதலமைச்சர் கருணாநிதி முன்னின்று நடத்த இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்குபெற உலக நாடுகளிலிருந்து இத்தனை இத்தனை பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற பட்டியலை முதலமைச்சர் மிக்க பெருமிதத்துடன் வெளியிட்டிருக்கிறார். மற்றவர்கள் நடத்தும் உலகத்தமிழ் மாநாடுகளுக்கு வந்த பலரை வெளியேற்றியவர் இப்போது இவர் நடத்தும் மாநாட்டுக்காவது உலகத் தமிழர்களை அனுமதிக்க முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவர்களில் யாரையேனும் வெளியேற்றாமல் இருப்பார் என நம்புவோமாக.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி
Tuesday, January 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment