Saturday, January 23, 2010

லார்சன் அண்டு டூப்ரோ அனல் மின் உற்பத்தி பிரிவில் ரூ.25,000 கோடி முதலீடு

நாட்டின் மிகப் பெரிய பொறியியல் துறை நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல்-டி) அதன் அனல் மின் உற்பத்தி வணிகப் பிரிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.25,000 கோடி முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து எல்-டியின் முழுமையான துணை நிறுவனமான எல் அண்டு டி பவர், 2015ம் ஆண்டுக்குள் 5,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். பல்வேறு அனல் மின் திட்டங்களுடன், சில நீர்மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக இந்த மின் உற்பத்தி இலக்கு எட்டப்படும். இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஆர்டரைப் பெறும் போட்டியில் ஈடுபட்டுள்ளது. எல்-டி பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி இது குறித்து கூறும்போது, நிறுவனம் பஞ்சாப் மாநிலம் ராஜபுராவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இரண்டு பிரிவுகளாக நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் தலா 660 மெகா வாட் திறன் கொண்டதாக இருக்கும். இதற்கான பணிகள்
தொடங்கப்பட்டு விட்டன. முதல் பிரிவு 2013ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். எல்-டி பவர் நிறுவனம் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்நிறுவனம் ரூ.16,000 கோடி மதிப்பிற்கு பல்வேறு மின் திட்டங்களை
நிறைவேற்றுவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மத்திய அரசு, தனியார் பங்களிப்புடன் 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்களை நிர்மாணிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்கான ஒப்பந்தங்களைப் பெறும் முயற்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது. தற்போது முந்த்ரா (குஜராத்), சாசன் (மத்தியபிரதேசம்), கிருஷ்ணப்பட்டினம் (ஆந்திரா) திலையா (ஜார்க்கண்ட் மாநிலம்), ரோஸா (உத்தரபிரதேசம்) ஆகிய இடங்களில் தலா 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு இது போன்ற மேலும் ஐந்து திட்டங்களை நிர்மாணிக்கும் வகையில் சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் போட்டி அடிப்படையில் ஏலப்புள்ளி மூலம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.
நன்றி : தினமலர்


2 comments:

வடுவூர் குமார் said...

மின்சார‌த்துக்கு கொடுக்கும் ப‌ண‌ம் க‌ம்மியாகுமா? அல்ல‌து எல் அன்ட் டி வீடு மாதிரி விலை அதிக‌மாக‌ இருக்குமா?

பாரதி said...

வடுவூர் குமார் வருகைக்கு நன்றி

விலை அதிகமாவதும் குறைவதும் இங்கு அரசு கைகளில் உள்ளது