Monday, November 16, 2009

உரிமைகளை மறைக்காதீர்

காடுவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை பட்டாக்களை வழங்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஈடுபட்டுள்ளதும், முதல்கட்டமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த 765 பேருக்கு பட்டா வழங்கப்படவுள்ளது என்பதும் மகிழ்ச்சியான தகவல்தான். இருப்பினும், இச்சட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள மனுக்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக் குறைவு என்ற தகவல் வருத்தம் தருகிறது.

பழங்குடியினர் மற்றும் காடுவாழ் வம்சாவளியினர் (வன உரிமை அங்கீகரித்தல்) சட்டம்-2006 நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது இந்த ஆண்டு இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சட்டம் குறித்து பழங்குடியின மக்களுக்கும் காடுவாழ் மக்களுக்கும் சரியான விழிப்புணர்வு அளிக்கப்படவில்லை, அல்லது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே, தமிழகத்தில் மிகக் குறைவான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதற்கு மிக முக்கிய காரணம் என்று கருத வேண்டியிருக்கிறது.

ஓர் ஊரிலிருந்து அல்லது கிராமத்திலிருந்து ஒரு குடும்பத்தை அரசோ அல்லது தனிநபரோ வெளியேற்ற முடியாது என்றால், அதற்குக் காரணம் அவர்களிடம் பட்டா இருக்கிறது என்பதுதான். ஆனால் காட்டில் வாழ்பவருக்கு எந்த ஆவணங்களும் கிடையாது. வனஅதிகாரி, அரசியல்வாதி, அரசு என யார் வேண்டுமானாலும் எந்தத் திட்டத்தின் பெயராலும் அவர்களை வெளியேற்றுவதும் அவர்களது விளைச்சலை, சேகரித்த வனப்பொருளை பறித்துச் செல்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அநீதியைத் தடுக்க ஏற்பட்டதுதான் இந்த வன உரிமைச் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி, 2005 டிசம்பர் 23-ம் தேதிக்கு முன்பாக காட்டில் வாழ்ந்து வருகிற பழங்குடியினருக்கும், மற்றும் மூன்று தலைமுறைகளாக (ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள்) காட்டைச் சார்ந்து வாழ்ந்துவருகிற காடுவாழ் மக்களும் பலவிதமான உரிமைகளைப் பெறுகிறார்கள். இவர்கள் தங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கும் நிலங்களுக்கு (4 எக்டேருக்கு மிகாமல்) பட்டா பெறலாம்; மரங்கள் தவிர்த்து மூங்கில், தேன், நெல்லிக்காய், புளி போன்ற காடுவிளை பொருள்களை வெளியே கொண்டு சென்று விற்கலாம்; உயிரினக் காப்பு வனம் அல்லது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலும்கூட அவர்கள் குடியிருப்பதை யாரும் தடுக்க முடியாது; இவர்களை யாரும் எந்தத் திட்டத்தைக் காரணம் காட்டியும் வெளியேற்ற முடியாது. இத்தனை உரிமைகளையும் இந்தச் சட்டம் வழங்குகிறது. இதனால்தான், இந்தச் சட்டத்தை அந்த மக்களிடம் முறைப்படி கொண்டுபோய் சேர்க்கவில்லை என்பதையும் உணர முடிகிறது.

இந்தப் பழங்குடியினர் மற்றும் காடுவாழ் மக்களின் மனுக்கள் முதலில் கிராமப் பஞ்சாயத்தால் ஆய்வு செய்யப்பட்டு மாவட்டக் குழுவுக்கு அனுப்பி, அவர்களும் ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் என்பது விதிமுறை. இருப்பினும், இத்தனை உரிமையையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டால், தங்கள் ஆளுமைக்குள் அவர்கள் இருக்க மாட்டார்கள், இவர்களை வைத்து தாங்கள் பெற்றுவரும் லாபம் இல்லாமல் ஆகிவிடும் என்பதால் கிராமத் "தலைகளும்' அரசு அலுவலர்களும் தங்களுக்குப் பினாமியாகச் செயல்படக்கூடிய நபர்களிடம் மட்டுமே மனுக்கள் வாங்கி, பரிசீலிக்கும் நிலைமை இருக்கிறது. அதனால்தான் மனுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கக் காரணம் என்று தெரிய வருகிறது.

இன்னொரு காரணம் தொழில்துறை. காட்டுக்குள்தான் கனிம வளங்கள் அதிகம் இருக்கின்றன. கனிமங்களின் மீதுதான் பழங்குடியினர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உரிமைகளை அளித்துவிட்டால் அவர்களை வெளியேற்றுவது கடினம் என்ற எண்ணம்தான் இத்தகைய மெத்தனப் போக்குக்கு காரணம். உதாரணமாக, ஒரிசா மாநிலத்தில் இச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு 47 திட்டங்களுக்கு வனத்துறையின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். நிச்சயமாக இது ஓர் அத்துமீறல். ஒருவர் தனது உரிமையை அறிந்துகொள்ளும் முன்பாகவே அவர்களது பொருளை எடுத்துக்கொள்ளும் திருட்டுக்கு நிகரான செயல்.

காட்டை நம்பி வாழ்பவருக்கு காடுதான் வீடு, கோயில், தெய்வம் எல்லாமும். காடுவாழ் மக்கள் எந்தவகையிலும் நகர்வாழ் மக்களுக்கு ஒரு போட்டியே அல்ல. இருந்தும், தொழில் வளம், நகர்வாழ் மக்கள் நலன் என்ற பெயரில் அரசும் அரசியல்வாதிகளும் அம்மக்களுக்கு நெருக்கடி தரும்போது, அவர்களது வாழ்வாதாரத்தில் கை வைக்கும்போது, அவர்கள் எளிதில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அல்லது தீவிரவாதிகளுக்குத் துணையாக அமைந்துவிடுகிறார்கள். அசாம், நாகாலாந்து, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்ஸலைட்டுகள் பெருகக் காரணம் இதுதான்.

தமிழக அரசு இந்தச் சட்டத்தின் பயனை பழங்குடியின மற்றும் காடுவாழ் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தன்முனைப்புடன், கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தர மறுத்தால் நஷ்டம் சமூகத்துக்குத்தான். வன உரிமைச் சட்டத்தின் பயன்கள் காடுவாழ் மக்களுக்கு முழுமையாகக் கிடைத்தால்தான் காடு வாழும். அதுதான் நாட்டுக்கும் நல்லது.
நன்றி : தினமணி

No comments: