Friday, November 6, 2009

இது யானைப் பள்ளம்

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையால் நிறையவே குழப்பம். கர்நாடகத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பணிகள், குறிப்பாக அண்மையில் நடந்த வெள்ள நிவாரணப் பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் இப்படியான ஒரு பிரச்னை.

தற்போது இந்தப் பிரச்னைக்குக் காரணமான கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே பதவி நீக்கப்படுவார் என்றும், பெல்லாரி மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பழையபடி கொண்டுவரப்படுவார்கள் என்றும் உடன்பாடு ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாகவே இருந்தாலும், எத்தனை நாளைக்கு இந்த அமைதி தொடரும் என்பது கேள்விக்குறிதான்.

இப்பிரச்னைக்குக் காரணம் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி இருவருக்கும் சுரங்கத் தொழிலில் உள்ள ஈடுபாடுதான். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சியிலும், முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது இதே சுரங்கப் பிரச்னையும், ஊழலும் முன்வைக்கப்பட்டன. தேர்தலின்போதும் இது பெரிதாகப் பேசப்பட்டது. ஆகவேதான், சுரங்கத் துறையில் எடியூரப்பா சற்று கெடுபிடியாக நடந்துகொண்டார் என்று சொல்வதற்கும் இடமிருக்கிறது.

ஆனால், "நம்ம ஆட்சி' என்பதால் தாராளமாக அரசு நடந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேறாததும், தங்களுக்குச் சாதகமான அதிகாரிகள் இடமாற்றப்பட்டதால் தொழிலுக்கு இடையூறுகள் ஏற்பட்டதும் ரெட்டி சகோதரர்களைக் கோபத்துக்கு ஆளாக்கி, எடியூரப்பாவையே முதல்வர் பதவியிலிருந்து நீக்குவது என்று கொடிஉயர்த்த வைத்துவிட்டது.

பாஜக எந்த சுரங்க, கனிம ஊழலை முன்வைத்ததோ தானும் அதே ஊழல் புதைகுழியில் இப்போது மாட்டிக்கொண்டு தவிக்கிறது. அப்போது அன்றைய முதல்வர் குமாரசாமிக்குப் பணம் கொடுத்திருக்கக்கூடிய இதே சுரங்க அதிபர்கள், நமக்கும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து சற்றே விலகியிருந்திருந்தால் இத்தனை சிக்கல் வந்திருக்குமா?

தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சியானாலும் களத்தில் இறங்கப் பணம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பணத்தின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போதுள்ள நிலையில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேண்டுமானாலும் ஒரு கோடி ரூபாய் தேவை என்று சொல்லப்படுகிறது. இத்தனை பணத்தையும் திரட்ட வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை நாடுகிறார்கள், தங்கள் தொண்டர்களை நாடுவதில்லை.

தொழிலதிபர்களும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இருவருக்குமே பணம் கொடுக்கிறார்கள். யாருக்கும் குறை வைப்பதில்லை. ஆனால் தங்களுக்குள் பேசிக்கொண்டு, எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொண்டு தாங்கள் வெற்றிபெற விரும்பும் கட்சிக்கு 50 சதவீதம் தொகையை கூடுதலாகத் தருகிறார்கள்.

இப்படியாக பணத்தை வாங்கிக்கொண்ட அரசியல் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தால் அவர்கள் கேட்பதைச் செய்தாக வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தால் பிரச்னையான கேள்வி எழுப்பாமல் சும்மா இருக்க வேண்டும். இதுதான் அரசியல் கட்சிகள் கொடுத்தாக வேண்டிய நன்றிக்கடன். நன்றி இல்லாத ஆளும்கட்சியின் நம்பிக்கைத் துரோகத்தை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலமாக பழிவாங்கவே துடிக்கிறது தொழில்துறை.

தேர்தல் நேரத்தில் எந்தெந்தக் கட்சிகள் யாரிடம் எத்தகைய அமைப்புகளிடம் நிதி பெற்றோம் என்பதைப் பட்டியலிடுவது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. அதாவது, குறிப்பிட்ட டாலருக்கு அதிகமாகப் பணம் கொடுத்தவர் தன் முகத்தை வெளியுலகுக்குக் காட்டியே தீர வேண்டும். இந்தக் கணக்குகள் முறையாகத் தணிக்கை செய்யப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு எப்படி நிதி கிடைத்தது என்பதைக் கணக்கு காட்டுவதே இல்லை.

ஒரு காலத்தில் இதே தமிழகத்தில் துண்டு ஏந்தி, தேர்தல் நடத்திய கட்சிகள் உண்டு. வீடுவீடாகச் சென்று, கடைவீதியில் ஒவ்வொரு கடையின் படிகளிலும் ஏறிப்போய் நிதி வசூலித்தனர் கட்சி வேட்பாளர்கள். மக்களும் அவர்களுக்குத் தங்களிடம் இருந்த சிறு தொகை, சில்லறை என மனமுவந்து கொடுத்தார்கள். ஆனால் அதன் பின்னர் நிதிவழங்கும் விழாக்கள் மட்டுமே தமிழகத்தில் நடக்கின்றன. பல லட்சங்கள் நிதி திரட்டியதாகச் சொல்லி வழங்கப்படுகிறது. இப்போதும் வேட்பாளர்கள் வீடுவீடாகச் செல்கிறார்கள். பணம் நன்கொடை பெற அல்ல, பட்டுவாடா செய்ய!

தொழில்துறையிடம் பணம் பெற்று, தேர்தலைச் சந்திப்பது மிக எளிதாக இருக்கலாம். ஆனால் இது ஒரு யானைப் பள்ளம். இதில் போய் மாட்டிக்கொண்டால் சில "கும்கி' கள் (மாட்டிக்கொண்ட யானையைப் பணியவைக்கப் பயன்படுத்தப்படும் யானைகள்) சொல்வதையெல்லாம் செய்தாக வேண்டும். கர்நாடகக் குழப்பத்துக்கு இதுதான் காரணம்.
நன்றி : தினமணி

No comments: