பட்ஜெட் நன்றாக இல்லையா? இல்லை அதை பங்குச் சந்தை சரிவர புரிந்து கொள்ளவில்லையா? இது தான் அனைவரின் கேள்வியும். ஏழை, எளியவர்கள் முதல் அனைவரையும் கவர்ந்திழுக் கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என, அனைவரும் எதிர்பார்த்தது தான். அதனால் தான் சந்தை கடந்த பல நாட்களாக, குறிப்பாக கூறப்போனால் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து கூடிக் கொண்டே வந்தது. 28 சதவீதம் கூடியது. அதாவது, 12,173 புள்ளிகளிலிருந்து 15,600 புள்ளிகள் வரை சென்றது. கடந்த வாரம் கூட ரயில்வே பட்ஜெட் நன்றாக இருந்தது.
மேலும், பொதுத்துறை பங்குகளை விற்பது பற்றியும், வெளிநாட்டு முதலீடுகள் பற்றியும் பொருளாதார ஆய்வறிக்கை கூறியது. வரப்போகும் பட்ஜெட் எப்படி இருக்கக்கூடும் என்று கூறாமல் கூறுவது தான் பொருளாதார ஆய்வறிக்கை. ஆனால், இந்த சர்வேயில் குறிப் பிடப்பட்டிருந்த பல முக்கியமானவை பட்ஜெட்டில் இடம் பெறாததால் சந்தை பட்ஜெட் தினத்தன்று ஒரு இறக்கி இறக்கி விட்டுச் சென்றது.
பட்ஜெட் தினத்தன்று சந்தை 870 புள்ளிகள் குறைந்தது. பட்ஜெட்டிற்கு பிறகு சந்தை 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் சந்தை இவ்வளவு குறைந்துள்ளதே என்று பலரும் வாங்க ஆரம்பித்தனர். ஆதலால், சந்தை 127 புள்ளிகள் மேலே சென்றது. ஆனால், நேற்று மறுபடி மிகவும் சந்தை குறைந்தது ஏன்? உலகின் மிகப்பெரிய ரேட்டிங் கம்பெனியான எஸ் அண்டு பி, இந்தியாவின் ரேட்டிங் குறைக்கப்படலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இது தவிர உலகளவில் சந்தைகளும் குறைந்தே தொடங்கியிருந்தன. இவை இரண்டும் சேர்ந்து இந்திய சந்தைகளை இழுத்து கீழே போட்டது. ஆதலால் மும்பை பங்குச் சந்தை 401 புள்ளிகள் குறைந்து முடிந்தது.
யார் இந்த சரிவில் வாங்கினர்? இப்படி 1,100 புள்ளிகள் குறைந்த சந்தையில் யாராவது வாங்கினார்களா? உள்நாட்டு நிதி நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் சந்தையில் பங்குகளை வாங்கினர். இது சந்தையில் நஷ்டத்தை சிறிது குறைக்க உதவியது. பட்ஜெட்டில் என்ன எதிர்பார்த்து கிடைக்காமல் போனது? செக்யூரிட்டிஸ் டிரான்ஸ்சாக்ஷன் டாக்ஸ், வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள், வருமான வரி உச்சவரம்பு கூடுதல் என பல நல்ல அம்சங்கள் பட்ஜெட்டில் இருந்தாலும் சந்தையில் ஒரு தொய்வு ஏற்பட்டது.
நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 401 புள்ளிகள் குறைந்து 13,769 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 123 புள்ளிகள் குறைந்து 4,078 புள்ளிகளுடனும் முடிந்தது. பட்ஜெட் நன்றாக இல்லாததால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க ஆரம்பித்துள்ளன. பட் ஜெட் தினத்தன்று 1,483 கோடி ரூபாய்க்கு சந்தையில் பங்குகளை விற்றன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதாலும், மேலும் வரத்துக்கள் குறைந்ததாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு லாபம். பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு உள்ள வரிகள் அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை கூடுதலாகும். அதே சமயம் சுங்கவரிகள் கூடுதலாக இருப்பதால் தங்கம் கடத்தல் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த வருடத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வரத்துவங்கியுள்ளன. இண்டஸ் இந்த் வங்கி, தனது சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த காலாண் டில் மட்டும் 86.5 கோடி ரூபாய் லாபமாக சம்பாதித்து உள்ளது. இது கடந்தாண்டு இதே காலாண்டை விட 365 சதவீதம் அதிகம். ஆதலால், சந்தையில் இந்த கம்பெனியின் பங்குகள், 10 சதவீதம் வரை மேலே சென்றது.
சரிந்த வங்கிப் பங்குகள்: வங்கி சீர்திருத்தங்கள் பற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படாததால் வங்கிப் பங்குகள் கடந்த மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருக்கின்றன. வங்கித் துறை குறியீடு, 11 சதவீதம் வரை சரிந்துள்ளது. மேலே செல்லுமா? நிச்சயமாக மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளன. சீர்திருத்தங்கள் இல்லாவிடினும் வங்கிகள் இந்த காலாண்டில் நல்ல லாபம் காண்பிக்கும். ஆதலால், பங்கு விலைகள் கூடும்.
ரிலையன்ஸ் பங்குகள் தேர்தல் முடிவுகளுக்கு முன் இருந்த நிலைக்கு வந்து விட்டது. இந்த கம்பெனியின் பங்குகள் 1,829 ரூபாய் என்ற அளவிற்கு நேற்று வந்து விட்டது. ரிலையன்சின் இரு கம்பெனிகளுக்கிடையே எரிவாயு விற்பதில் உள்ள தகராறு இன்னும் தீராததாலும், கோர்ட்டுக்கு சென்றிருப்பதாலும் சந்தையில் அந்த கம்பெனியின் பங்குகள் கீழே சென்றன. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? வரும் நாட்கள் கடினமாகத் தான் இருக்க வேண்டும். காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் சந்தை அதை சிறிது வரவேற்று மேலே செல்லும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்
Thursday, July 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment