Saturday, June 20, 2009

மூலிகை சிகிச்சைக்காக கேரளா வரும் வெளிநாட்டு பயணிகள் வரத்து குறைந்தது

கேரளாவில் பிரபலமாக இருக்கும் மூலிகை சிகிச்சைக்காக ( ஸ்பா ) அங்குள்ள பருவ காலத்தில் ( ஜூன் - செப்டம்பர் ) ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடமிருந்து நிறைய சுற்றுலா பயணிகள் இதற்காக வருவதுண்டு. இப்போது அங்கு பொருளாதார மந்த நிலை தீவிரமாக இருப்பதால், அங்கிருந்து வருபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த பருவ காலத்திலும் அங்கிருந்து வருபவர்கள் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக பருவ காலத்தில்தான் சுற்றுச்சூழல் தூசு இல்லாமலும், குளிராகவும் இருக்கும். அப்போதுதான் நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்களின் ஓட்டைகளும் நன்கு திறந்திருக்கும். அப்போது மூலிகை சிகிச்சை செய்தால்தான் அது உடலுக்கு நல்ல பயனை தரும். எனவே இந்த காலம் தான் மூலிகை சிகிச்சை செய்து கொள்ள ஏற்ற காலம். ஆனால் இந்த வருடம் அதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் டாக்டர் ராஜேஷ். இவர் கொச்சியை சேர்ந்த சாப்டச் ஹெல்த்கேர் நிறுவனத்தின் டாக்டராக இருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு மூலிகை சிகிச்சைக்காக ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருவது வழக்கம். மேலும் கோயம்புத்தூரில் இருக்கும் ஆர்ய வைத்ய பார்மஸி ( ஏவிபி ) மற்றும் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை ஆகியவற்றுக்கும் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்கிறார் ஏவிபி யின் மேலாண் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணகுமார்.
நன்றி : தினமலர்


No comments: