Tuesday, April 14, 2009

சத்யம் 2வது இன்னிங்ஸ்: 'அரசின் பங்கு மகத்தானது'

சத்யம் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியலைகள். சத்யம் நிறுவன இணையதளங்களில் வழக்கத்துக்கு மாறான உற்சாக வண்ணம். எல்லாம் சத்யம் நிறுவனத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானதன் மகிழ்ச்சி, உற்சாகம்தான். உலகில் சத்யம் போல மோசடியில் சிக்கிக் கொண்ட நிறுவனங்களான என்ரான், லேஹ்மன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் சொத்துக்கள் அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் ஏலத்துக்கு விடப்பட்டு காணாமல் போயிருப்பதைத்தான் பார்த்துள்ளோம்.ஆனால் சத்யம் நிறுவனத்தை அதன் நிறுவனரே அதள பாதாளத்தில் தள்ளிவிட்டார். ரூ.250 வரை விற்ற பங்குகள் விலை ரூ.16 வரை சரிந்து, இனி மீள வழியே இல்லை என்று அனைவரும் கைவிட்ட நிலையில், அரசு கைகொடுத்தது. சத்யத்துக்கு புதிய நிர்வாகக் குழுவையும் தலைமையையும் அறிவித்து, சத்யம் பங்குகளை மீண்டும் கவுரமான விலையில் விற்க வழி செய்தது. பங்குச் சந்தையிலிருந்து சத்யம் பங்குகளை விலக்க செபி முடிவு செய்திருந்த நேரத்தில் அரசின் முயற்சி மட்டுமே, சத்யம் பங்குகளை மீண்டும் வர்த்தகத்தில் அனுமதிக்க வைத்தது. 'சரியாக 100 நாட்களில் மீ்ண்டும் சத்யம் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியுள்ளது சாதாரண விஷயமல்ல. பெரும் சாதனை. அந்த சாதனையைச் செய்தது இந்திய அரசுதான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டும். அரசின் இந்த முயற்சிக்கு முடிந்த வரை கைகொடுத்தவர்கள் சத்யம் வாடிக்கையாளர்களும் சக நிறுவனங்களும். உலகின் வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாத ஒரு சந்தோஷமான நிகழ்வு இது..,' என்கிறார் நாஸ்காம் தலைவர் சோம் மித்தல். அதுமட்டுமல்லாமல், சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் அதன் கையை விட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நாஸ்காம் எடுத்த முயற்சிகளையும் அவர் விவரித்துள்ளார்.சத்யம் நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களுடனும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசினோம். இந்த நிறுவனம் நிச்சயம் மறுபடியும் எழும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம். சக ஐடி நிறுவனங்களும் இந்த விஷயத்தில் உதவியதை மறுக்க முடியாது. குறிப்பாக சில பெரிய வாடிக்கையாளர்கள் சத்யத்துடன் வர்த்தகத் தொடர்புகளை முறித்துக்கொள்ள முயற்சித்த போது, போட்டி நிறுவனங்கள் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. சத்யத்துடன் இருக்க வைத்தார்கள். அதையெல்லாம் இப்போது மறுப்பதற்கில்லை என்று சோம் மித்தல் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி : தட்ஸ்தமிழ்