Thursday, March 12, 2009

பணத்தை எங்கே டிபாசிட் செய்வது நல்லது?

இந்த வாரம் திங்கள் மட்டும் தான் சந்தை இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சந்தைகளுக்கு விடுமுறை. ஆனால், வாரத்தின் துவக்க தினமான திங்களே ஒரு இறக்கத்தை தந்து, இனிமேல் இதுபோல் இறக்கத்திலேயே தான் இருக்குமோ என்ற ஒரு பயத்தை நமக்கு தந்து சென்றது. வானம் தொட்டும் விடும் தூரம் தான் என்று கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால், பாதாளம் தொட்டுவிடும் தூரம் தான் என்ற நிலையில் சந்தை கீழே செல்கிறது.
இந்திய சந்தைகளுக்கு முன்பே துவங்கிய ஆசிய சந்தைகள் கீழேயே இருந்ததால், இந்திய சந்தைகளிலும் அது எதிரொலித்தது. அன்றைய தினம் இந்திய மியூச்சுவல் பண்டுகள் 126 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியது ஒரு ஆறுதலான விஷயம்.
சந்தை மூன்று ஆண்டின் கீழ் நிலையை மறுபடி எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் 45 ஆயிரம் கோடி ரூபாயை இழந்தனர். ஆசிய அளவில் ஹாங்காங் சந்தை 5 சதவீதமும், நிக்கி 1.2 சதவீதமும் கீழே விழுந்திருந்தன. மும்பை பங்குச் சந்தை 165 புள்ளிகள் கீழே சரிந்து முடிவடைந்தது.
அதிகம் பாதிக்கப்பட்டது ஜெயப்பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் 5.3 சதவீதம் குறைந்து 66 ரூபாய் அளவிலும், ஸ்டேட் பாங்க் 4.7 சதவீதம் குறைந்து 897 ரூபாய் அளவிலும், இந்துஸ்தான் லீவர் 3.3 சதவீதம் குறைந்து 216 ரூபாய் அளவிலும், ஐ.டி.சி., 4 சதவீதம் குறைந்து 159 ரூபாய் அளவிலும் முடிவடைந்தது.
இறுதியாக மும்பை பங்குச் சந்தை 165 புள்ளிகள் சரிந்து 8,160 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 47 புள்ளிகள் சரிந்து 2,573 புள்ளிகளுடனும் முடிந்தது.
ஸ்டெர்லைட் வாங்கிய ஆசர்கோ: கடந்த ஆகஸ்டில் ஆசர்கோவை வாங்குவதற்கான டீலில் முன்னணியில் ஸ்டெர்லைட் இருந்திருந்தாலும், தற்சமயம் உலகளவில் இருக்கும் பொருளாதார மந்தத்தினால் மறுபடி பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்காவின் செம்பு சுரங்க கம்பெனியான ஆசர்கோவை இந்தியாவின் ஸ்டெர்லைட் வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக கொடுக்கப்படும் தொகை 8,500 கோடி ரூபாய். முன்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தொகையை விட 4,500 கோடி ரூபாய் குறைவு.
ஸ்பைஸ்ஜெட், கோ-ஏர் இணைப்பு? ரயிலில் சென்று கொண்டிருந்தவர்களை எல்லாம் விமானத்தில் பறக்க வைத்தவர்கள் லோகாஸ்ட் விமானக் கம்பெனிகள். அது போல பல கம்பெனிகள் இந்தியாவில் வந்து, ஒரு முறையாவது விமானத்தில் பறக்கவேண்டும் என்ற கனவில் இருந்தவர்களையெல்லாம் விமான பயணத்திற்கே அடிமையாக்கி சென்றனர்.
அடிமையாக்கிய பிறகு கட்டணங்களை கூட்டினர். பயணிகள் புத்திசாலிகள், மறுபடி ரயிலுக்கு தாவி விட்டனர்.
ஆதலால், விமானக் கம்பெனிகள் இணைந்து நடத்தினால் தான் லாபம், இல்லையெனில் தொடர்ந்து நஷ்டம் தான் என்ற நிலை பலருக்கும். முன்பு கிங்பிஷர், ஏர்டெக்கான் இணைப்பைப் பார்த்தோம். தற்போது ஸ்பைஸ்ஜெட், கோ-ஏர் ஆகிய நிறுவனங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தி கொண்டிருக்கின்றன. பயணிகளுக்கு விமானக் கட்டணங்கள் மறுபடி குறைந்தால் சரிதான். பங்குச் சந்தைகளின் சரிவு, கம்பெனிகளை கார்ப்பரேட் டிபாசிட்களை திரட்ட வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளியுள்ளது. சிறிது காலத்திற்கு முன் சில கம்பெனிகளே கார்ப்பரேட் டிபாசிட்களை திரட்டி வந்தன. அந்த மார்க்கெட்டே சரிந்து கிடந்தது. ஆனால், தற்போதைய நிலைமையே வேறு. பல கம்பெனிகள் அது போல டிபாசிட்டையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. ஒரு மார்க்கெட்டின் சரிவு இன்னொரு மார்க்கெட்டின் வளர்ச்சி. இது தான் உலக நியதி. ஆனால், பங்குச் சந்தைகள் அதலபாதாளத்திற்கு சென்று இதுதான் முதலீடு செய்ய ஏற்ற சமயம் என்று ஆர்வத்தை பலருக்கு தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயம், கார்ப்பரேட் டிபாசிட்களின் வட்டி விகிதங்கள் வா வா வந்து டிபாசிட் செய் என்று அழைக்கிறது. எங்கு செல்வது என்று தெரியாமல் முதலீட்டாளர்கள் முழிக்கும் நிலை. எப்படி முடிவெடுப்பது? ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்குச் சந்தை பக்கம் செல்லலாம்.
ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் கார்ப்பரேட் டிபாசிட் பக்கம் செல்லலாம். அங்கும் நல்ல ரேட்டிங் உள்ள கம்பெனிகளாக பார்த்து டிபாசிட் செய்வது தான் உத்தமம். இல்லாவிடில், கால முடிவில் பணம் திரும்பக் கிடைப்பதில் தாமதம் ஆகலாம் அல்லது பணம் வராமலும் போகலாம்.
கடந்த இரண்டு நாட்களாக உலக அளவிலும், ஆசிய அளவிலும் சந்தைகள் சிறிது பாசிடிவாகவே இருந்தன. இந்திய அளவில் வேறு ஏதும் நிகழ்வுகள் இருக்காத பட்சத்தில் சந்தை சிறிது மேலே செல்லும் வாய்ப்புகள் உண்டு.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


1 comment:

Suresh said...

நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிபாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அதிலும் கலைஞர் பத்தின பதிவை கண்டிப்பாக பாருங்கள்
http://sureshstories.blogspot.com/