Saturday, March 21, 2009

நியூயார்க், சிகாகோ செல்ல ஏர் இந்தியா புது திட்டம்

ஜெர்மனியின் பிராங்பர்ட் விமானநிலையத்தை இணைப்பாக பயன்படுத்தி, அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ நகரங்களுக்கு எளிதாகச் செல்லும் புதிய திட்டத்தை, ஏர் இந்தியா அறிமுகப்படுத்துகிறது. ஏர் இந்தியா நிறுவன தென் மண்டல செயல் இயக்குனர் வர்கீஸ், பொது மேலாளர் ஜெயஸ்ரீ, கூடுதல் பொது மேலாளர் சுப்பையா, விற்பனை பிரிவு மேலாளர் நீனா குப்தா, மேலாளர் மதுமதன் கூறியதாவது: ஏர் இந்தியாவில், புதிய கோடை கால அட்டவணை, வரும் 29ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 150க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன. புதிதாக வாங்கப்படவுள்ள 111 விமானங்களில் 45 விமானங்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. அகமதாபாத்திலிருந்து பிராங்பர்ட்டிற்கு நேரடி விமானத்தை வரும் ஜூனிலிருந்து இயக்கவுள்ளோம். ஏர் இந்தியாவின் கட்டணங்கள் மற்ற நிறுவனங்களை விட கவரும் வகையில் உள்ளது.சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், அகமதாபாத் நகரங்களிலிருந்து, மும்பைக்கு தினசரி இரவு 9.30 மணிக்கு விமானம் புறப்படும். மும்பையிலிருந்து புறப்படும் விமானம், பிராங்பர்ட்டை அடுத்தநாள் காலை 6.05 மணிக்கு சென்றடையும். அதே போல டில்லியிலிருந்து சிகாகோ செல்லும் விமானமும் பிராங்பர்ட் வந்துசேரும். அங்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிகாகோ செல்பவர்களும், மும்பையிலிருந்து நியூயார்க் செல்பவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான விமானங்களுக்கு மாறிக்கொள்ளலாம். பயணிகளுக்கான ஆவண பரிசோதனை அனைத்தும், விமானத்தில் புறப்படும் இடத்திலும், சென்றடையும் இடத்திலும் மேற்கொள்ளப்படும். சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு இரவு அல்லது அதிகாலையில் விமானங்கள் புறப்பட்ட நிலை மாறி, தற்போது 9.30 மணிக்கு விமானம் புறப்படுவதால், பயணிகளின் உறவினர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறையும். மேலும் சென்னை பயணிகள் மும்பை சென்று, 16 மணி நேரத்தில் நேரடியாக நியூயார்க் செல்லும் விமானத்திலும் செல்லலாம். பிராங்பர்ட் விமானநிலையத்தை இணைப்பு விமான நிலையமாக உருவாக்கியிருப்பதன் மூலம், வரும் காலங்களில் அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் விமான சேவையை ஏர் இந்தியா துவக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


No comments: