Friday, February 27, 2009

ஜப்பானின் தொழில் உற்பத்தி கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவில், அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானின் தொழில் உற்பத்தி கடந்த மாதத்தில் 10 சதவீதம் குறைந்து விட்டது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு. கடந்த நான்கு மாதங்களாகவே ஜப்பானின் தொழில் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வந்திருப்பதால், அது பொருளாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வரும். ஜப்பானின் ஏற்றுமதி 45.7 சதவீதம் குறைந்து விட்டது என்ற அறிக்கை வெளிவந்த அடுத்த நாளே அதன் தொழில் உற்பத்தி 10 சதவீதம் குறைந்து விட்டது என்ற அறிக்கை வெளி வந்திருக்கிறது. ஏற்றுமதியையே பெரிதும் நம்பியிருக்கும் ஜப்பானின் பொருட்கள், பொருளாதார மந்த நிலை காரணமாக வெளிநாடுகளில் சரிவர விற்காததால் அதன் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கார்களுக்கு டிமாண்ட் குறைந்து விட்டது. அதனால் ஜப்பானின் ஏற்றுமதி குறைந்து போனது. அதேபோல உள்நாட்டிலும் மக்களின் வாங்கும் சக்தி 5.9 சதவீதம் குறைந்திருப்பதால் உள்நாட்டிலும் பொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் அங்கு தொழில் உற்பத்தி 10 சதவீதம் குறைந்திருக்கிறது என்கிறார்கள். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் சரிவு நிலை ஆரம்பித்தபோது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வங்கிகள் எல்லாம் கடும் சிரமத்தில் இருந்தபோது, ஜப்பான் வங்கிகள் எதுவும் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் ஜப்பானின் பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையை நம்பி இருப்பதால், அங்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஜப்பானை அதிகம் பாதித்து விட்டது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: