Tuesday, July 15, 2008

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆசிய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி


ஹாங்காங் : ஆசியா முழுவதும் இன்று செவ்வாய்கிழமை பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்ற வீழ்ச்சி ஏற்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆசிய பிராந்தியத்தில் பைனான்ஸ் துறையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதும், பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. யுரோவுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளதும் பங்கு சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஜப்பானின் மிகப்பெரிய மூன்று வங்கிகள் அமெரிக்க நிதி நிறுவனங்களான ஃபேன்னி மே மற்றும் ஃபிரடி மேக் ஆகியவைகளில் 44.3 பில்லியன் டாலர்கள் டெப்ட் செக்யூரிடியில் முதலீடு செய்திருப்பதாகவும், இப்போது அந்த நிதி நிறுவனங்கள் கடும் நிதி சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நலிவடைந்திருக்கும் இந்த இரு அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உதவி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இதனால் அங்கு பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பங்கு சந்தையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. டோக்கியோவில் நிக்கி 255.60 புள்ளிகள் குறைந்து 12,754.56 புள்ளிகளுக்கு வந்து விட்டது.இது தவிர ஹாங்காங் பங்கு சந்தையில் 839.69 புள்ளிகள் குறைந்து 21,174.77புள்ளிகளாகவும், சீனாவில் 98.81 புள்ளிகள் குறைந்து 2,779.45 புள்ளிகளாகவும், தைவானில் 322.72 புள்ளிகள் குறைந்து 6,834.24 புள்ளிகளாகவும், கொரியாவில் 49.29 புள்ளிகள் குறைந்து 1,509.33 புள்ளிகளாகவும் இருந்தது.


நன்றி : தினமலர்


No comments: